Satire | கடி-காரம்மாயமான்

இவ்வருட ‘சொதப்பல்’ விருது பெறும் துவாரகா 2.0

நிறையக் காணொளிகள், வலைப்பதிவுகளைப் பார்த்துவிட்டு மண்டைகளைப் பிய்த்துக்கொண்டிருக்கும் உங்களுக்கும், எனக்கும் ஆழ்ந்த அனுதாபம். இது தொடர்பாக சமூக வலைத்தளப் பதிவுகளில் நான் ரசித்தது விதுசன் 453 என்ற பெயரில் பதிவாகிய ‘மூதேவிக்கும் சீதேவிக்குமிடையிலான ஏழு வித்தியாசங்கள்’. Super!

Forensic ஆய்வாளர்கள் கரைத்துக் குடித்து வாந்தியாகவும் வயித்துப் போக்காகவும் முடிவுகளை எய்திவிட்ட பிறகு “இப்ப தான் வாறியோ” என்று நீங்கள் கேட்கலாம். 14 வருடங்களுக்குப் பிறகு ‘அவா’ வரலாமென்றால்…?

‘அவா’ அவ இல்லை என்பது முடிவுகட்டப்பட்டுவிட்டது. ‘அவா’ சுவிட்சர்லாந்தில் இருக்கும் மிதுஷா ராஜரட்ணம் என்பதை ஈழப் புலனாய்வுச் சேவை ( Eelam State Intelligence Services (ESIS) கண்டுபிடித்து அறிவித்தும் விட்டது. பலவிதமான மேக்கப்புகள், take குகள், retake குகள், 37 வெட்டி-ஒட்டுகளின் பின்னர் முக்கல் முனகலுடன் வெளிவந்த அற்புதமான வெளியீடான துவாரகா 2.0 இல் மாவீரி உரை பிசுபிசுத்துப் போய்விட்டது. இங்கு AI தனது விநோதங்களைக் காட்டவில்லை மாறாக I…A தனது விநோதத்தைக் காட்டியிருப்பது புலன்களுக்கு வெளித்துவிட்டது.

அஞ்ஞாதவாசமென்றால் அது 14 ஆண்டுகள் இருக்கவேண்டுமென்ற நியதியில்லை. எப்போதோ வந்திருக்கலாம். அல்லது ரீசராக அப்பாவை முதலில் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்திவிட்டு MGM உறுமலோடு வந்து குதித்திருக்கலாம். என்னவோ துவாரகா 2.0 வில் பரபரப்பில்லை. அவசரம் அவசரமாக, முறையான ஒலி ஒளி அமைப்புகளின்றி உருவாக்கப்பட்ட ஒரு basement production. இவ்வளவு வசதிகளுள்ள இந்தியாவை விட்டுவிட்டு புலம்பெயர்ந்த நாடொன்றில் தயாரிக்க வேண்டிய கட்டாயம் ? காரணம் நடிகை அங்கு தான் இருக்கிறார். விநியோகம், சந்தைப்படுத்தலுக்கு மூத்த மாமாவின் கீழ் பல சின்ன மாமாக்கள் உதவியிருக்கிறார்கள். இருந்தாலும் சந்திராயன் மட்ட சொதப்பல்.

தேவை என்ன? யார் பின்னால் இருக்கிறார்கள்? ஏன் இப்போது? என்பவை தான் இப்போது உங்களைப் பற்றிச், சுற்றி எரிந்துகொண்டிக்கும் கேள்விகள். எனக்கும் தான். ஒரு process of elimination வகையில் சிக்கலை அவிழ்க்க முனைகிறேன்.

“அண்ணை வந்தாக் குடுப்பன்” புகழ் கட்டமைப்புகளின் வற்றிக்கொண்டு போகும் கஜானாக்களை நிரப்புவதற்கு அவர்கள் போட்ட திட்டங்களில் ஒன்று என்று சிலர் கூறுகிறார்கள். அதில் எனக்குச் சந்தேகம். நடந்து முடிந்த ‘மாவீரர் நாள்’ நிகழ்வுகள் எதிலும் இப் படம் ஓட்ட்ப்படவில்லை. கட்டமைப்புகள் இப் படத்திற்கான விளம்பரங்களிலோ, விநியோகத்திலோ சம்பந்தப்படவேயில்லை. எடிட்டிங் விசயங்களில் அவர்களின் தரம் வேறு. நான் ‘தமிழ்ப்படம்’ எடுப்பவர்களைச் சொல்லவில்லை. எனவே புலிகளின் பிரதிநிதிகளெனத் தம்மைக்கூறிக்கொள்ளும் எவருக்கும் இதில் சம்பந்தமில்லை.

இலங்கையில் விரைவில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் காணிக்குள் வாக்கு மந்தைகளைச் சாய்ப்பது. புலிகள் மீளுருவாக்கம் செய்கிறார்கள் என்ற பீதியைச் சிங்களவர் மத்தியில் விதைப்பது. இதனால் ரணிலை முதன் முதலாக மக்களால் தெரியப்பட்ட ஜனாதிபதி எனப் பெயர் பெற வைப்பது போன்ற காரணங்களுக்காக துவாரகா 2.0 ஐ சிங்கள தேசம் உருவாக்கியது எனச் சிலர் ஊகிக்கலாம். வாய்ப்பே இல்லை, ராஜா ராணிகளே.

மகிந்த ஒரு master planner. பொருளாதாரம் சீராக்கப்படும்வரை ஆட்சியைப் பிடித்து மகன் கையில் கொடுத்தால் அது ஆபத்தில் முடியும் என்று அவருக்குத் தெரியும். நாட்டைச் சீராக்குவதை ரணில் பார்த்துக்கொள்ளட்டும்; அதுவரை அவர்தான் ஜனாதிபதி என்பதை ஆண்ட பரம்பரை தீர்மானித்து விட்டது. எனவே ரணிலை ஜனாதிபதியாக்குவதற்கு சாஹ்ரான் 2.0 அல்லது துவாரகா 2.0 தேவையில்லை. எனவே SIS இதன் பின்னணியில் இல்லை.

இப்போ எஞ்சி இருப்பது நமது ‘இராமர் கொடி உறவு’. சொதப்புவதில் உலகில் முதலாவது நிலையில் இருக்கும் நாடு இந்தியா என்பதை கனடிய ‘காளிஸ்தான்’ கொமாண்டோவைக் கொன்ற விடயம் புட்டு வைத்துவிட்டது. போதாததற்கு அமெரிக்காவில் எடுத்துக்கொண்ட துல்லிய கொலை முயற்சியும் சொதப்பலில் முடிந்துவிட்டது. தாம் ஒரு ‘மொசாட்’ என்று feel பண்ணிக்கொண்டு இந்தியா படம் காட்ட எடுத்த முயற்சிகள் எதுவும் வெற்றிபெற்றதாக நானறியேன். துவாரகா 2.0 தயாரிப்பின் பின்னணியில் இந்த சொதப்பல் ராஜாவே இருந்திருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை.

இலங்கையில் நடைபெற்ற ‘இனப்படுகொலை’யின் இரத்தம் தன்மீது வெகுவாக ஊறியிருக்கிறது என்பது இந்த இராமர் கூடத்துக்குத் தெரியும். எனவே தன்னை முதன்மைப் பங்காளியாக்காமல் தமிழருக்கு வழங்கப்படும் எந்தவித தீர்வும் தன்னை அம்பலப்படுத்திவிடும் என்பதால் அப்படியான தீர்வொன்றைக் கொடுக்கக்கூடாது என்பதில் அது குறியாகவிருக்கிறது. இதனால் சிங்களத்தை வெருட்டக்கூடிய ‘புலிப்’ பிராந்தியை அது அவ்வப்போது பாவித்துக்கொள்கிறது. துவாரகா 2.0 அதன் முதல் முயற்சியல்ல.

தென்னிலங்கையில் தனக்கு சாதகமற்ற நிலையில் காரியங்கள் நடைபெறும் போதெல்லாம் கடலில் படகில் பாகிஸ்தான் ஐசிஸ் உதவியுடன் கடத்தப்பட்ட ஏ.கே 47களும், போதை வஸ்துப் பொதிகளும் தமது கடல் வீரர்களிடம் அம்பிட்ட கதையை ‘தி இந்து’ மூலம் அம்பலப்படுத்தப்படும். இதில் பிடிபட்டவர்களின் பெயர்கள் சிங்கள, கொழும்புப் பெயர்களாக இருப்பினும் அவர்களெல்லாம் ‘புலிகள்’ என முத்திரை குத்தப்பட்டுவிடும். இதே record பல தடவைகள் சுற்றப்பட்டிருக்கிறது. இராமர் கூடத்தின் intelligence லெவல் அவ்வளவுதான். இப்படியான செய்திகள் வரும்போதெல்லாம் தமிழக தொப்புள்கொடி உறவின் பிதாமகர்கள் ஐயா நெடுமாறன், திருச்சி வேலுச்சாமி, சுபவீ போன்றோர் கருத்தேதும் தெரிவிக்க மாட்டார்கள். Yes, புலிகளின் இருப்பில்லாது அவர்களது அரசியல் படுத்துவிடும்.

துவாரகா 2.0 தயாரிப்பின் எழுத்து, இயக்கம், படத்தொகுப்பு அனைத்திலும் தொப்புள் கொடி நாற்றம் இருப்பது தெரிகிறது. அட் லீஸ்ட் கமல்ஹாசன், அப்துல் ஹமீட்டிடம் ஆலோசனை பெற்றிருக்கலாம். மிதுஷா பாவம். ஏதோ பிள்ளை 10 minutes fame இற்காகவோ அல்லது குடும்பச் சண்டையைச் சமாளிப்பதற்காகவோ instant solution ஒன்றை நாடியிருக்கலாம். இப்படியானவர்களை ‘இனம் கண்டு’ பிடித்துக் கொடுக்க நிறைய மாமாக்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கிறார்கள்.

2009 இற்குப் பிறகு இந்தியா பல ‘மாமாக்களை’ இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் பணிக்கமர்த்தியிருக்கிறது. இவர்கள் விமான நிலையத்தில் இறங்கியதுமே வரவேற்று ‘உபசரிக்கப்’ படுபவர்கள். இவர்கள் எல்லோரது வாய்ப்பாடமும் ‘இந்தியா இல்லாது தமிழருக்குத் தீர்வு கிடையாது’ என்பதாக இருக்கும். துவாரகா 2.0 விளம்பரத்திலும் விநியோகத்திலும் இவர்களது அளப்பரிய பங்கு இருக்கிறது என்பதை தமிழ்நாட்டு சமூக / பெருஞ்சமூக ஊடகங்கள் ஏற்கெனவே புட்டு வைத்துவிட்டன.

மாவீரர் நாள் ‘கொண்டாட்டங்கள்’ இந்த வருடம் சென்னையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டிருந்தன. அதை முன்னின்று செய்தது தி.மு.க.வின் பங்காளி திருமாவளவன் அண்ட் கோ. வழக்கத்திற்கு மாறாக ஊருப்பட்ட மாவீரர்களின் படங்களைத் தாங்கிய பதாகைகள் வானைத் தொட்டன என்கிறார்கள். இத்தனைக்கும் புலிகளை முதலில் தடை செய்த நாடு இந்தியா. முன்னாள் போராளிகளின் தலைவர், சிவாஜிலிங்கம், புலம்பெயர் மாமாக்கள் என்று பலரும் டெல்ஹி வரை சென்று வந்திருக்கிறார்கள். துவாரகா 2.0 ஒரு நீண்டநாட் தயாரிப்பு. ஆனாலும் மிகத் திறமையாகச் சொதப்பி முகங்களில் கரியைப் பூசிக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டு அரசியலில் சீமான் இப்போது முதலாம் எதிரி. தலைவர் உயிரோடு இல்லை என்பதை ஒத்துக்கொண்டு அவர் அரசியலை நடத்துகிறார். அவரது மாவீரர் நாள் நிகழ்வுக்கு இந்தத் தடவை நிறையச் சனம் போயிருக்கிறார்கள். பா.ஜ.க.வும் தி.மு.க.வும் கள்ள மெளனம் சாதிக்கின்றன என்கிறார்கள். சீமானைக் குறிவைத்து எடுக்கப்பட்ட துவாரகா 2.0 வின் இணைத்தயாரிப்பாளர்கள் இவர்களாக இருக்கலாமோ எனத் தமிழ்நாட்டின் சில ‘ஆய்வு’ ஊடகங்கள் ஊகங்களை எழுப்பியிருக்கின்றன. ஆனால் ‘இயக்குனர்’ தான் சொதப்பிவிட்டார். திரைப்பட விடயங்களில் பொதுவாக மலையாளிகள் பரவாயில்லை. இது ஏனோ தப்பிவிட்டது. முண்டு கொடுக்கப்போய் முதுகை முறித்துக்கொண்ட கெளதம் போன்ற சித்தப்பாக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபம்!