ArticlesColumnsசிவதாசன்

இவரும் அவர்தானா?

சிவதாசன்

எதிரிகளால் வரும் ஆபத்துக்களை விட எதிர்பாராமல் நண்பர்களிடமிருந்து வரும் ஆபத்துக்களே அதிகம் என்று பலரும் பல தடவைகள் அனுபவித்து எழுதியிருக்கிறார்கள். இதில் அழுது கொட்டுவதற்கு எதுவுமில்லை.

அரசியலில்  இது இன்னும் மோசம்.  உண்மையில் அரசியல்வாதிகள் மட்டும்தான் உலகத்திலேயே தங்கள் தேவைகளுக்காகவும் நன்மைகளுக்காகவும் கட்சி, மத, இன வேறுபாடுகளின்றி ஒற்றுமையாகச் செயற்படுபவர்கள் (உதாரணம் தமக்குத் தாமே சம்பள உயர்வு கொடுத்துத் தள்ளுவது).

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இடது சாரி வலது சாரி நடுவிலான் என்றெல்லாம் கோஷங்களோடும் கொள்கை முழக்கங்களோடும் ஊர்வலம் வந்து அப்பாவி மக்களை நம்ப வைத்து ஆசனத்தில் அமர்ந்தவுடன் – யார் நீ , எதற்கும் அலுவலகத்தில் மனுவைக் கொடுத்துவிட்டுப் போ பின்னர் பார்க்கலாம்- என்ற சுபாவம் வந்து தொலைத்து விடுகிறது. இது நம்ம சமூகத்தில் மட்டும் நடைபெறுவதல்ல  என்பது கொஞ்சம் ஆறுதலாகவிருக்கலாம்.

தென் நாட்டில் துரும்பர் அவதாரம் எடுக்கப் போகிறார் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிடட நிலையில் நம்ம நாட்டில் ‘இது 2016’ என்று நாமம் போட்டுக்கொண்டு வந்த இளவரசர் சமீபத்தில் போட்ட குண்டு ஏனோ எனது செவிப்பறையைத் தாக்கியிருக்கிறது.

ஹார்ப்பரசரோடு ஒப்பிடுகையில் இவரது வெளிநாட்டுக்கு கொள்கையில் பல மாற்றங்கள் நிகழும், உலகில் போர்கள் தணிந்து மக்கள் தம்மைத் தாமே தூக்கி நிறுத்திக் கொள்ள, ஆசுவாசப் படுத்திக் கொள்ள ஒரு இடைவெளி கிடைக்கும் என்று நம்ப வைக்கப் படடவர்கள் ‘என்ன இவரும் அவர் தானா?’ என்று மூக்கில் விரலையே வைக்கிறார்கள்.

சிவப்பு சட்டைகளைப் போட்டுக்கொண்டு மனித உரிமைகள் பற்றிப்  பேசுபவர்களது நிஜ வாழ்க்கை  நீலச்  சட்டை போட்டுக் கொண்டு இனவாதம் பேசுபவர்களது வாழ்க்கையை விட மோசமானது என்ற எண்ணம் உங்களிடமும் இருக்கிறது என்றால் நானும் உங்களினம்.

நம்ம நாட்டு இளவரசர் உலகத்துக்கு இப்படி எல்லாம் இம்சையரசராக மாறுவாரென்று நான் நினைத்திருக்கவில்லை.

ஈராக்கிலிருந்து மூன்று நான்கு போர் விமானங்களை மீளப்பெற்றுவிட்டு 200 காலாட் படைகளை அனுப்பி வைத்தது அமைதி விரும்பி செய்யும் கடமையல்ல. ரஷ்ய எல்லை நாடுகளில் நேட்டொ குவிக்கும் படைகளில் ட்ரூடோவின் படைகள் முன்னணி வகிக்குமாம். சவூதி கொலையரசர்களுக்கு கோடி கோடியாக ஆயுதங்களை வழங்கியமை அப்பட்டமான நபும்சகத்தனம்.

பல வருடங்களுக்கு முன்னர் ஊரிலிருந்து வந்தவர் ஒருவர் சொன்ன கதை இது.

ஒருவருக்கு ஒரு இயக்கத்தில்  சேர விருப்பம். உள்ளூர் ஆள்பிடி காரரை அணுகி யபோது  அவரது நோஞ்சான் உடலின்  வீரம் போதாது என்று சந்தியில் வைத்து அவமானப் படுத்தி விடடார். . மனம் குழம்பிப் போன வீரவான் கொஞ்சம் பொறு நான் யாரெண்டு காட்டிறன் என்று வீட்டுக்குப் போய்  கோடரி ஒன்றைக் கொண்டு வந்து சந்தியில் நின்ற ஒரு முதியவரைக் கொத்திக் கொலை செய்து விட்டு ‘இப்போ நான் வீரனில்லையா’? என்று கேடடாராம்.

இது ஒரு செவி வழிக்கதை எனவே எனக்குத் தெரிந்தது. அன்றய சூழழில் இது நடந்திருக்க வாய்ப்பிருந்தது என்பது மட்டும் உண்மை.

ட்ரூடோவின்  நகர்வுகளை பார்க்க இந்த நோஞ்சானின் கதை தான் நினைவுக்கு  வந்தது. ‘நானும் ரவுடி தாண்டா’ என்று வடிவேலு போலீஸ்காரரிடம் கைது செய்யும்படி கெஞ்சுவதைப் போல இருக்கிறது ட்ரூ டோவின் நடவடிக்கைகள்.

எவ்வளவு எதிர்ப்புகள் இருந்தாலும் அதையும் மீறி உலக சமாதானத்தைக் கொண்டு வருவதும் ஒரு வகை வீரம் தான். 1964 இல் பல எதிர்ப்புகள் மத்தியிலும் அமெரிக்க குடியுரிமைச் சட்ட த்தில் கையெழுத்திட்டு நிறப் பிரிகைச் சடடத்தை இல்லாதொழித்த ஜனாதிபதி லிண்டன் ஜோன்சன்  போன்றவர்களைத் தான் நான் வீரர் என்று சொல்லுவேன்.

ஒவ்வொரு வாரமும் ஆளில்லா விமானத்தை ஏவுவதன் மூலம் பெண்களையும் குழந்தைகளையும் கொன்றுவிட்டு உலக சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்றுக்  கொண்ட பராக் ஒபாமா வீரர் அல்ல.

ஹார்ப்பரை வெறுப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அது நடிக்காமையின் விளைவு. ட்ரூ டோவைப்  பலர் விரும்புவதற்குக் காரணம் அவர் சிறந்த நடிகனாக இருப்பதனால் எனவும் பார்க்கலாம். அரசியலுக்கு வருவதற்கு முதல் அவர் ஒரு நாடக ஆசிரியர்.

உள்நாட்டில் நிலைமை சீராக இருக்க வேண்டுமானால் வெளியுறவுக் கொள்கை நன்றாக இருக்க வேண்டும். இதை புரிந்துகொள்ள ஒருவர் ஐன்ஸ்டினாக இருக்க வேண்டுமென்பதில்லை.

உலகின் இன்றய நிகழ்வுகள் பேரழிவுக்கான கட்டியத்தைக் கூறுபனவாகவே இருக்கின்றன.



அமெரிக்காவில் துரும்பரின் வருகை வெள்ளை அதிகாரத்தின் மீளெழுச்சியின் அறிவிப்பு. நீண்ட காலமாகக் கைவிடப்படட சாமான்ய வெள்ளையரின் சுனாமியைத் திசை திரும்பியவர் தான் துரும்பர். அதில் அடிபடப்  போவது வெள்ளையரல்லாதோர் தான். கிளின்ரன் ஒபாமா போன்றோரைப்  பாவித்து தமது இலாபங்களை பெருக்கிய பெரு வணிக நிறுவனங்களின் உலக மயமாக்கலின் சோபை இழந்துபோன அமெரிக்காவை மீட்டெடுக்கப் போவதாக உருக்கொண்டிருக்கும் துரும்பரை  இந்தத் தடவை யாராலும் நிறுத்த முடியாது. என்றுதான் படுகிறது.

உலக நிகழ்வுகள் இந்த உருவுக்கு வேப்பிலையாட்டும். பிரித்தானியாவின் உடைவு இந்தப் பெரு விளையாட்டின் ஒரு அங்கம் தான்.

மத்திய கிழக்கில் மேற்கு நாடுகள் விளையாடிய இராணுவ விளையாட்டுக்களின் பெறுபேறுகளை அப்பாவிகள் தான் அனுபவிக்கின்றனர். பிணை வாடைகள் பெரு வணிகர்களை எதுவும் செய்யாது.

புஷ் ஆட்சியை விட கிளின்ரன் ஆட்சியின் போது தான் அதிக உலக நாடுகளில் குண்டுகள் போடப்பட்டன. அதிக எண்ணிக்கையில் கறுப்பர்களைச் சிறையில் தள்ளியது கிளின்ரன் அரசு தான். அடுத்த கிளின்ரன் ஆட்சிக்கு வந்தாலும் அவர் முதலில் செய்யப் போவது ஏதோ ஒரு நாட்டுடன் போர் தொடுப்பதே. அவர் வணிக முதலைகளின் சேவகி. போர் பணம் செய்யும். நோஞ்சான்களை வீரர்களாகக் காட்டும்.

துரும்பர் நிறைய சவுண்ட் கொடுக்கிறார். கடிப்பார் மாதிரித் தெரியவில்லை. எனக்குப் பயம் சிரிப்பவர்கள்  மீதுதான்.

ஜூலை 19, 2016 – ஈகுருவி பத்திரிகையில் பிரசுரமானது

[wp-rss-aggregator]