Cinema

இளையராஜா: ‘கடவுளுக்கு கொஞ்சம் கீழே..’ – வழக்கறிஞர்

இசையமைப்பாளர் இளையராஜா மீதான காப்புரிமை வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏப்ரல் 17 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது “இளையராஜா எல்லோரையும் விட மேலானவர் ஆனால் கடவுளுக்கு கீழானவர்” என அவரது மூத்த வழக்கறிஞர் கூறியமை நீதிபதியின் கண்டனத்துக்குள்ளாகியிருக்கிறது.

1970 கள் முதல் 80 கள் வரை வெளிவந்த சுமார் 1000 திரைப்ப்டங்களில் ஒலித்த 4,500 பாடல்களுக்கான தார்மீக உரிமை இளையராஜாவுக்கு கொடுக்கப்படவேண்டும் என 2019 இல் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக ‘எக்கோ ரெக்கோர்டிங்’ என்னும் நிறுவனம் செய்திருந்த மேன்முறையீடு மீதான வழக்கின் விசாரணையின்போதே மேற்படி சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

நீதிபதிகள் ஆர். மஹாதேவன் மற்றும் மொஹாமெட் ஷஃபீக் ஆகியோரால் விசாரிக்கப்ப்ட்ட இவ்வழக்கில் ஏப்ரல் 10 அன்று இளையராஜா சார்பாகத் தோன்றிய மூத்த வழக்கறிஞர் சதிஷ் பராசரன் “இளையராஜா எல்லோரையும்விட மேலானவர் ஆனால் கடவுளுக்குக் கீழானவர்” எனக் கூறியிருந்தமை தொடர்பாகப் பதிலளித்த நீதிபதி மஹாதேவன்”இசையின் மும்மூர்த்திகளான முத்துஸ்வாமி தீட்சிதர், தியாகராஜர், ஸ்யாமா சாஸ்திரி ஆகியோர் வேண்டுமானால் எல்லோரையும்விட மேலானவர்கள் எனக் கோரலாம் ஆனால் உம்மால் அப்படிக் கூறமுடியாது” எனத் தெரிவித்திருக்கிறார்.

“தான் மற்றவர்கள் எல்லோரையும்விட மேலானவர் என இளையராஜா நினைக்கிறார்” என எக்கோ ரெக்கோர்டிங் நிறுவனத்தின் சார்பில் தோன்றிய வழக்கறிஞர் விஜே நாராயன் கூறியதற்கு பதிலளிக்கும்போது “ஆம். நான் எல்லோருக்கும் மேலானவன். அகங்காரம் பிடித்தவன் என நினைக்கலாம் ஆனால் அதுவே நான். ஆனால் நான் கடவுளுக்கு மேலானவனல்ல ஆனால் மற்றவர்கள் எல்லோருக்கும் மேலானவன்” என இளையராஜா சார்பில் பராசரன் பதிலளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காமையால் இளையராஜாவின் மற்றுமொரு வழக்கறிஞரான ஏ.சரவணன் நீதிபதியிடம் “இளையராஜா ஒருபோதும் இப்படியான பிரகடனத்தைச் செய்யவில்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பாடல்களுக்கான உரிமை பற்றி எக்கோ ரெக்கோர்டிங் நிறுவனம் எழுப்பிய கேள்விக்கான பதிலாக மட்டுமே அதைப் பார்க்கவேண்டும்” எனக் கோரியதன் பின்னர் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இப்பாடல்களுக்கான காப்பு உரிமங்கள் அனைத்தையும் எக்கோ ரெக்கோர்டிங் அப்படங்களின் தயாரிப்பாளர்களிடமிருந்து ஏற்கெனவே கொள்முதல் செய்துவிட்டது. தற்போது இப்பாடல்களை ஸ்பொட்டிஃபை போன்ற ஒலிபரப்புத் தளங்கள் மூலம் கேடபவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் நிதியின் ஒரு பகுதியை இளையராஜாவுக்குக் கொடுக்கவேண்டுமென 2019 இல் நீதிபதி ஒருவர் தீர்ப்பு வழங்கியிருந்தார். இத் தீர்ப்பிற்கு எதிராகவே எக்கோ ரெக்கோர்டிங்க்’ மேன்முறையீடு செய்திருந்தது.