இளவரசர் சார்ள்ஸ் வைரஸ் தொற்றுக்குள்ளானார்

Spread the love

பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் கொறோணாவைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

71 வயதுடைய இளவரசர் சார்ள்ஸ் ஆரம்ப நோயறிகுறிகளைக் காட்டி வருவதாகவும், அதற்கப்பால் அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் எனவும் இன்று (புதன்) அவரது உத்தியோகபூர்வ அலுவலகம் தெரிவித்ததாக அறியப்படுகிறது. தற்போது அவர் ஸ்கொட்லாந்தில் இருக்கும் அவரது விடுமுறை இல்லத்தில் சுய தனிமையில் இருப்பதாகத் தெரிகிறது.

அவரது துணைவியார் கமிலாவுக்கு நோய்த் தொற்றில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான தகமைகளை இருவரும் கொண்டிருந்த படியால் அபெடீன்ஷையரிலுள்ள தேசிய சுகாதார சேவைகளினால் இருவரும் பரிசோதிக்கப்பட்டதாக உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கடந்த சில வாரங்களில், பல பொது வைபவங்களில் கலந்துகொண்டிருந்த படியால் இளவரசருக்கு நோய் எங்கிருந்து தொற்றியது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

தற்போதுள்ள அரசாங்க பணிப்புகளின் பிரகாரம், ஒருவருக்கு தீவிரமான அறிகுறிகள் காணப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அவர் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும். கடந்த வாரம் அதை விரிவுபடுத்துவதென தேசிய சுகாதார சேவைகள் திணைக்களம் முடிவெடுத்திருந்தது.

கடந்த சில வாரங்களில் லண்டனில் வதிபவர்களும் இதர நகர்வாசிகளும் ஸ்கொட்லாந்து, பிரித்தானிய தீவுகள் போன்ற இடங்களிலுள்ள கோடை விடுமுறை இல்லங்களுக்குச் சுய தனிமைக்கெனச் செல்வது வழக்கமாகவிருந்தது. அங்குள்ள மருத்துவ சேவைகள் இப்படியான நோய்த் தொற்றுக்களைச் சமாளிக்கும் வசதிகளற்ற படியால், சுயதனிமைக்காக அங்கு வரவேண்டாமென்று அப்பிரதேச மக்கள் கேட்டுக்கொண்டிருந்தனர்.



மாட்சிமை தங்கிய மகாராணியார் சுகதேகியாக இருக்கிறார் எனவும், மார்ச் மாதம் 12ம் திகதி கடைசியாக இளவரசரை அவர் சந்தித்திருந்தார் எனவும், அவரது ஆரோக்கியம் தொடர்பாகச் சகல நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது. (ராய்ட்டர்ஸ்)

Print Friendly, PDF & Email
Related:  பயங்கரவாதத் தடைச் சட்டம் மீள்பரிசீலனை செய்யப்படும் - தினேஷ் குணவர்த்தனா

Leave a Reply

>/center>