இளவரசர் கோதபாய ராஜபக்சவுக்கு முடிசூட்டு விழா!

Spread the love
சிவதாசன்

‘சோதிடர்கள் தேர்ந்தெடுத்த சுபதினமொன்றில் இளவரசருக்கு முடிசூட்டு விழா நடந்தேறியது. இளவரசர் கோதாபயரின் கட்டளைப்படி தமிழர்கள் அலங்கார வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தார்கள். அவர்களை மண்டபத்துக்குள் அனுமதிக்க இளவர்சர் மறுத்திருந்தார். அயல்நாட்டு மந்திரி பிரதானிகள் தவறாக நினைத்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு’ -மகாவம்சம் இன்னுமொரு தடவை திருத்தி எழுதப்பட்டால் இப்படியும் எழுதப்படலாம்.

….

முடிவுகளை ஏற்றுக்கொள்ள மனத்திற்கு இசைவில்லை, ஆனால் இது கொம்புத் தேன், ஆசைப்பட மட்டுமே அருகதையுண்டு.

முன்னெப்போதும் இல்லாதவாறு நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் மகளையும் உணர்வு பூர்வமாக ஈடுபடுத்தியிருந்தது இத் தேர்தல். காரணம் இத் தேர்தலின் வேட்பாளர்களில் முக்கியமானவரான கோதபாய ராஜபக்ச.


கோதபாயவின் வெற்றி ஆணித்தரமானது. 2015 தேர்தலைவிட அதிகமான வாக்குகளைப் பெற்று அவர் வென்றிருக்கிறார். மஹாவம்சம் மீண்டுமொருதடவை வென்றிருக்கிறது. இது எங்கள் நாடு என்பதைச் சிங்கள மக்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். தமிழர்கள் தோற்றுப் போனவர்கள். ஆசைப்படவும் கனவு காண்பதற்கும் மட்டுமே அவர்களுக்கு உரிமையுண்டு, இப்போதைக்கு.

எதிர்க்கட்சிகள் வெல்வது -பொதுவாக -ஆளும் கட்சியினரின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக என்பது வழக்கம். இந்த தடவை ஐ.தே.கட்சியிடம், தேர்தலை இழக்குமளவுக்கு, ஆட்சியில் தவறிருந்ததாகத் தெரியவில்லை. பொருளாதாரக் கொள்கைகள் சகல இலங்கையருக்கும் ஓரளவு திருப்தி தருவதாக இருந்தது. அல்லது உணரும்படியான பாதிப்பு எதையும் அது கொடுக்கவில்லை. ஊழலும், ஊழலின் உறவுகளான இதர பிணிகளும் அங்கிருந்தன. ஆனால் ராஜபக்ச ஆட்சியில் போல் இருக்கவில்லை. நாட்டின் பிரதான அன்னிய செலாவணியான சுற்றுலாத் துறை அமோக வளர்ச்சி கண்டிருந்தது. வெளிநாட்டு முதலீடுகள், குறிப்பாகத் தமிழரின் பணம் வந்து கொட்டியது. ஆசிய நாடுகளில் பொறாமைப்படுமளவுக்கு நிலைமைகள் இருந்தன.

எல்லாவற்றுக்கும் மேலாக ராஜபக்சக்களின் ஆட்சியில் சீரழிக்கப்பட்ட தனிமனித சுதந்திரம், சட்டம் ஒழுங்கு, அதை நிர்வகிக்கும் சுதந்திரமான அரச நிறுவனங்கள் ஆகியன நாட்டில் சகல இன மக்களும் அமைதியாக நடமாடக்கூடிய சுதந்திரமான வெளியை நல்லாட்சி அரசு பெற்றுக் கொடுத்திருந்தது. இவற்றை அது பெற்றுக் கொடுத்திருக்காவிட்டால் இன்றும் இராணுவத் தடைகளைத் தாண்டி மக்கள் நடமாடியிருப்பர். ராஜபக்சக்கள் சிங்கள மக்களின் மனங்களில் எதிரிகளாகவே இருந்திருப்பார்கள்.

கோதபாய, சஜித் இருவருமே சிங்களத் தேசியவாதிகள் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. கோதபாய பிறப்பினால் தேசியவாதி, சஜித் சூழலினால் (அரசியல்) தேசியவாதி. இருவரும் பெரும்பான்மையினத்தின் உணர்வுகளைப் பிரதிபலிப்பவர்கள். ஒன்றுபட்ட தேசத்தின் அரசியல் சகதிக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட தமிழர்களுக்கு இவர்கள் இருவரைத் தவிர வேறு வழியிருக்கல்லை.  தமிழருக்கான மீட்பர் இன்னும் வரவில்லை. வருவார் என பிரசங்கிகள் சொல்வார்கள். ஊரெல்லாம் தேவ வடிவங்களில் பலர் உலா வருகிறார்கள். எல்லாரும் கடவுளின் சாயலில் இருப்பதால் எளிய சனங்கள் மீட்பரைக் காண்பதற்குச் சிரமப்படுகிறார்கள். அதுவரை இவர்கள்தான்.

இந்தத் தேர்தலில் கோதபாயவைத் தமிழரின் மீட்பராகப் பலர் உருவகித்தார்கள். அவர் மீட்பாரோ இல்லையோ முள்ளிவாய்க்காலை மீண்டும் திறந்துவிடாதுபோனாலே இப்போதைக்குப் போதும்.

Related:  தேர்தலைப் பின்போடும்படி த.தே.கூ. அரசாங்கத்திடம் கோரிக்கை

இத் தேர்தல் சில விடயங்களை உணர்த்தியிருக்கிறது.

  1. சிங்கள மக்கள் இன்னும் மகாவம்ச மனநிலையில் தான் இருக்கிறார்கள். பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்ட பிறகும் தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்று சிந்திக்கும் நிலையில் அவர்கள் இல்லை.
  2. தமிழர் ஏகோபித்த நிலையில் கோதபாயவை நிராகரித்திருக்கிறார்கள். அதே வேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குச் செருப்பைக் காட்டித் தங்களை மாற்றுத் தலைமைகளாகக் காட்ட முற்பட்டவர்களையும் அடியோடு நிராகரித்திருக்கிறார்கள்.
  3. பொது வேட்பாளர் என்று காதில் பூ வைக்க முற்பட்டவர் கோதாவின் நியமனமென்பதைச் சிங்கள வாக்குகளே காட்டிக்கொடுத்துவிட்டன.
  4. தமிழ் மக்கள் மிகவும் தெளிவாகச் சிந்திக்கிறார்கள். கோதபாய தோற்றால் தாம் ஆபத்துக்குள்ளாவோம் என்ற பயம் இல்லாது தாம் ஒரு தேசமாகச் சிந்திக்கிறோம் என்பதை வலியுறுத்தியிருக்கிறார்கள்.
  5. இத்தனை தமிழ் மக்களும் ஏன் எதிராகவே தொடர்ந்தும் வாக்களித்து வருகிறார்கள், அவர்களின் பிரச்சினைகள் என்ன என்று எந்தவொரு சிங்கள அரசியல்வாதியோ, கல்விமானோ, பொதுமகனோ விசாரணை ஏதும் செய்யாது ‘தமிழர்கள் எப்போதும் எதிரிகள்’ என முத்திரை குத்தும் பெரும்பான்மை மனப்பாங்கை உறுதிப்படுத்தியதன் மூலம், தமிழர்கள் பிரிந்து போவதற்கான அந்தஸ்தை உடையவர்கள் என்பதை வெளியுலகுக்கு உணர்த்தியுள்ளது சிங்களம்.
  6. கோதபாயவினால் மட்டுமே தமிழர்களுக்கான தீர்வைக் கொடுக்க முடியுமென அப்பாவித் தனமாகவோ, அரசியற் தனமாகவோ சிந்திக்கும் தமிழர்களுக்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழஙகியிருக்கிறது. இது வெறும் சுய இன்பம் தரும் விடயமல்லவென்பதை சிங்களம் தான் நிரூபிக்க வேண்டும்.

ஐ.தே.கட்சியின் தோல்வியை நிதர்சனப்படுத்தியதில் பெரும்பங்கு தமிழர் தரப்பின் 13 அம்சக் கோரிக்கைகளுக்கு இருக்கிறது என்பது பரவலான நம்பிக்கை. இது ஒரு ‘கூட்டணியின்’ முயற்சி எனவும், அதை உருவாக்கியதில் ‘பல்கலைக்கழக மாணவர்களுக்கு’ முக்கிய பங்குண்டு எனவும் கூறப்படுகிறது. கூட்டமைப்பின் முயற்சியில் இது உருவானதல்ல எனினும் கூட்டமைப்பு இதில் பங்குகொண்டிராவிட்டல அவர்கள் வரலாற்றுத் துரோகிகளாக்கப்பட்டிருப்பார்கள் என்பது நிச்சயம். பலருக்கு இது உவப்பாக இருக்காது. கூட்டமைப்புக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எதிரிகள் அதிகம். காரணம் அது ஒன்றுதான் இப்போதைக்குக் காய்க்கின்ற மரம். முன்னேற இடமுண்டு என்பவர்களுடன் நானும் உடன்படுகிறேன்.

ஒப்பந்தங்களைச் சிங்களம் ஒருபொழுதும் மதிப்பவர்கள் இல்லை. அந்த வரலற்றைத் தெரிந்து கொண்டவர்களாகவோ அல்லது புரிந்துகொண்டவர்களாகவோ இக் கூட்டணி இருக்கவில்லை. முஸ்லிம் தரப்பும் இப்படியான டீல்களைப் பலதடவை செய்திருப்பார்கள். அவற்றைப்பற்றி அடிமட்ட முஸ்லிம்கள் கவலைப்படுவதில்லை, அதில் அவர்கள் சம்பந்தப்படுவதுமில்லை.

இவ்வொப்பந்தம் சிங்கள இனவெறியாளரால் எப்படி ஆயுதமாக்கப்படும் எனபதைப் பற்றி இக் கூட்டணி கொஞ்சமும் சிந்திக்கவில்லை. விளைவு, அது இன்னுமொரு ‘பண்டா செல்வா ஒப்பந்தமெனும்’ அளவுக்குச் சிங்களத்தால் திரிக்கப்பட்டது. பசில் ராஜபக்சவின் கீழ் இயங்கிய கோதாவின் பிரச்சாரத் தந்திர இயந்திரம் இதை முழுமையாகப் பயன்படுத்தியது. சஜித் பிரேமதாசவிற்கும் கூட்டமைப்பிற்குமிடையே இரகசிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது எனவும் வடக்கிலுள்ள சிங்கள மக்களை வெளியேற்ற இவ்வொப்பந்தம் வழி செய்கிறது எனவும் தகவல் கசியவிடப்பட்டதெனத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் லங்கா நியூஸ் வெப் என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. அது தேர்தல் தந்திரம், மேற்கு நாடுகள் பல நூற்றாண்டுகளாகச் செய்துவருமொன்று. தமிழர் தரப்புக்கு மட்டும் புரிந்திருக்கவில்லை.

கடந்த ஐந்து வருடங்களில் நல்லாட்சி அரசின் எதிர்க்கட்சியாகவிருந்து தமிழர் தரப்பு என்னத்தைக் கிழித்தார்கள் என்று கடந்த கால்நூற்றாண்டாகக் கனடாவில் வாழும் பிரகிருதி ஒன்று கிழிக்கிறது. ‘இவன்’ சம்பந்தனுக்கு கார்களும், பங்களாவும், காவற்காரரும் கொழும்பில் சுகபோக வாழ்வு. கோதா சுமந்திரனின் பாதுகாப்பை எடுக்கப்போறான் அதுக்குப் பிறகு இவன் ஒழிக்கத்தான் போறான், நானும் பாக்கத்தான் போறன்’ என்று முழங்கினார் அரை வய்துக்காரர். இதயம் கனத்தது.

Related:  கோவிட் 'கட்டு' | வெல்லப்போவது யார்?

தமிழரசுக் கட்சி, அதன் உருவாக்கத்திலிருந்து வடகிழக்குக்கு அபிவிருத்தியைக் கொண்டுவருவோமெனத் தேர்தலில் நிற்கவில்லை. தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தான் இன்றுவரை அவர்கள் போராடுகிறார்கள். கார்ப்பெற் வீதிகளைப் போடுவதற்கென அவர்களை மக்கள் அனுப்பவில்லை. தமிழ்க் காங்கிரஸ் கட்சி சில தொழிற்சாலைகளை வட கிழக்குக்குப் பெற்றுக் கொடுத்தது. அப்படியும் அக்கட்சியை மக்கள் வளர்த்தெடுக்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவராக வந்த பின்னரும் தலைவர் சம்பந்தன், இத்தனை வயதிலும், மூன்று மாடிக் கட்டிடத்தில் படியேறி ஒரு அறையில் முடங்கி வாழ்ந்தவர். சுகயீனம் காரணாமாக, அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் பின்னர் பங்களாவிற்கு மாறினார்.

காணாமற் போனவர்கள் சார்பிலும், பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் சார்பிலும் பல வழக்குகளைச் சுமந்திரன், கே.வி.தவராசா போன்றவர்கள் இலவசமாகப் பேசிவருகின்றனர். அதை அவர்கள் நெற்றியில் ஒட்டிக்கொண்டு திரிவதில்லை.

மக்கள் காலம் காலமாக அவர்களைத் தெரிந்து பாராளுமன்றம் அனுப்புகிறார்கள். அவர்களுக்கான மாற்றுத் தலைமகள் மக்களிடமிருந்து தான் வரவேண்டும். உரிய காலத்தில் மக்கள் அதைச் செய்வார்கள்.

உணர்ச்சிவசப்பட்டவர்கள் தமிழ், சிங்களத் தரப்புகள் இரண்டிலும் இருக்கிறார்கள். இது கட்டில்லாத சமூகவலைத்தளங்களின் யுகம். நொடிப் பொழுதுகளில் தர்மவான்களைக் கொலைகாரர்களாகும் வல்லமை அவற்றுக்குண்டு.

சிங்கள பெளத்த தேசத்துக்கு ஆபத்து என்பதை அவர் உடுக்கடித்து சொல்லி மக்களை உணர்ச்சிவசப்படுத்தி வாக்களிக்கச் செய்ய அவருக்கு நல்லதொரு உடுக்குத் தேவைப்பட்டது. நாங்கள் கொடுத்திருக்கிறோம்.

தமிழரின் எதிர்காலம் இருண்டு நெடுங்காலம். விளக்குகள் இல்லையென்பதில்லைப் பிரச்சினை. அணைப்பவர்கள்தான் அதிகம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>