ArticlesColumnsEntertainmentசிவதாசன்

இளசுவின் மாறாட்டம்

இளசு எனப்படும் இளையராஜா கனடாவுக்கு வருகிறார், மன்னிக்க வேண்டும் கொண்டுவரப்  படுகிறார். சில இசை ரசிகர்களுக்குச் சந்தோசம் தான். அந்த சிலரை விட மீதிப் பேருக்கு பயங்கர கடுப்பு.

இளசைப்பற்றி பல வருடங்களாகவே எனக்குள் அபிப்பிராய மோதல்கள் நிகழ்ந்து வருவது உண்மை. எண்பதுகளின் ஆரம்பத்தில் இவர் பங்குபற்றிய தமிழ்நாட்டு நிகழ்வொன்றில் (அப்போது இவரை வெளிநாட்டுக்கு கொண்டுவருமளவுக்கு தமிழ் வியாபாரிகள் வெளிநாடுகளில் இருக்கவில்லை) யாரோ மண்டபத்தின் பின்வரிசைகளிலிருந்து கூச்சல் போட்டதைச் சகிக்க முடியாமல் ‘யாரடா அங்க சிலோன் காரங்களா  குழப்பம் செய்யிறாங்க? அவங்களைப்  பிடிச்சு வெளியே தள்ளுங்கடா’ என்று கர்ச்சித்ததாகக்  கேள்விப்  பட்டேன். அச் செய்தி பொய்யாகவும் இருக்கலாம். இருப்பினும் மனம் அருவருத்தது.

தொடர்ந்து வந்த காலங்களில் அவரது இசையின் ஆக்கிரமிப்பால் நினைவில் உலர்ந்து போய்க்கொண்டிருந்த அவர் பற்றிய குறைபாடுகள் புறந்தள்ளப்படடன. சமீப காலங்களில் அவரது கர்ச்சிப்புகளையும் வித்துவச் செருக்கு என்ற அம்சத்துக்குள் அடக்கிவிட்டுப் போய்க்கொண்டே இருந்தேன். ஆனால் சென்ற தடவை அவரைக் கனடாவுக்குக் கொண்டு வந்தபோது அவர் நடந்து கொண்ட விதம் உண்மையில் என்னை இந்த ‘கடுப்புக்’ கோஷ்டியிடம் தள்ளி விட்டது.

இளசு ‘சிலோன்’ காரங்களை மதிப்பதில்லை. இளசு மட்டுமல்ல பல தமிழ் நாட்டு சினிமாக் காரன்கள் சிலோன் காரங்களை மதிப்பதில்லை. அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. அது பற்றி இன்னொரு தடவை பார்ப்போம்.

இளசுவை சென்ற தடவை கனடாவுக்குக்  கொண்டு வந்தபோது அவர் நடந்து கொண்ட விதம் கனடாவுக்கு உரியதல்ல. ஒன்று அவருக்கு நாகரிகம் பண்பாடு தெரியாமல் இருந்திருக்கலாம். அல்லது ‘இவங்கள் சிலோன் காரங்கள் தானே, இவங்கெல்லாம் யாரு எனக்கு?’ என்ற மமதையின் காரணமாகவிருக்கலாம். எதுவாக இருந்தாலும் அவர் பல இலங்கைத் தமிழரைக் கோபப் படுத்தியிருக்கிறார்.

இந்த தடவை கொண்டுவரப்படும் போது எப்படி நடந்து கொள்வாரோ தெரியாது. ஆனால் பல இலங்கைத் தமிழர்கள் அவரைப் பார்க்கத் துடிப்பார்கள் என்று அவரோ கொண்டு வருபவர்கள்  எதிர்பார்க்க மாடடார்கள் என்று நினைக்கிறேன். (இப்போதே டிக்கட்டுகள் அரை விலைக்குக் கூவப்படுவதாகக்  கேள்வி).

பாவம் இந்த இறக்குமதி வியாபாரிகள். இளசுவைக் கொண்டுவந்து, சென்ற வாரம் ஊடக பவனி செய்தார்கள். சில ‘சிமார்ட் போன்’ ஊடகக்காரர் சத்தமின்றிக் காட்சிப்படுத்தியதில் சிலரின் வாயசைப்புகள் நம்பிக்கையை அளிக்கவில்லை. இறுக்கமாக இருந்த இளசுவின் முகம் இளகத் தொடங்கியபோது  பல ‘சிலோன் காரங்கள்’ அவருக்குப் பாத பூசை செய்து கொண்டிருந்தார்கள். பணமும் பாத பூசையும் கிடைத்துவிடடால் அவருக்குப் போதும் தானே. ‘முடடாள்கள்’ என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டு அவர் அடுத்த மெட்டை  அவர் முணு முணுத்திருக்கலாம்.

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த  கதை போல இளசு செய்த இன்னுமொரு விடயம் இறக்குமதிக்  காரருக்கு வயித்தில்  புளியைக் கரைத்திருக்கலாம். ஈஸ்டரும் அதுவுமாக இயேசு நாதர் உயிர்த்தெழவில்லை என்பதை விஞ்ஞான பூர்வமாக  ‘யூ டியூப்’ மூலம் தான் நிறுவி விட்டதாகப் பேசியிருக்கிறார் இளசு. தான் வழிபடும் ரமண மகரிஷி மட்டுமே  உண்மையில்  உயிர்த்தெழுந்தவர் என்பதை  ‘யூ டியூப்’ எதுவுமில்லாமலேயே நிறுவி விடுகிறார். அவரது இசையை விரும்பும் பக்தர்களில் கிறிஸ்தவர்களும் இருக்கலாம் என்பதையோ அவர்களது மனங்களைப்  புண்படுத்தக் கூடாது என்பதையோ, அல்லது தனது இறக்குமதி வியாபாரிகள் நட்டமடையக் கூடாது என்றோ இளசு யோசிக்கவில்லை.

இளசுவின் இந்துத்துவம் பற்றி எனக்கு விருப்பு வெறுப்பு எதுவுமில்லை. அவரது இசையில் இன்னும் எனக்கு வெறுப்பு எதுவும் ஏற்படவுமில்லை. அவரது மேதாவித்தனம் மீதும் எனக்கு அக்கறையுமில்லை. அவரைக் கடுப்பேத்துவதற்காக மட்டும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

தயவு செய்து humbleness என்றால் என்னவென்று சில  ‘யூ டியூப்’ வீடியோக்களைப்  பாருங்கள்.

வெளிநாடுகளில் வதியும் பாத பூசைதாரிகளுக்கு: நிமிர்ந்து நிற்பது எப்படி என்று நமது பொது எதிரி மகிந்த ராஜபக்சவிடம் கற்றுக் கொள்ளுங்கள்.