இலோன் மஸ்க் உருவாக்கவிருக்கும் புதிய சமூக வலைத்தளம்
தொழில்நுட்பம்
முகநூல், ருவிட்டர் போன்று புதியதொரு சமூக வலத்தளமொன்றை உருவாக்க ரெஸ்லா அதிபர் எலோன் மஸ்க் திட்டமிட்டு வருவதாக நம்பப்படுகிறது. வாசகர் ஒருவர் ருவிட்டரில் விடுத்த கேள்விக்கு சனியன்று (நேற்று) அவர் அளித்திருந்த குறுஞ்செய்தியொன்று இச் சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.
“‘ஓப்பிண் ஸோர்ஸ்’ எனப்படும் கட்டற்ற கட்டளை மென்பொருள் மூலத்தைக் கொண்டு புதியதொரு சமூகவலைத்தளமொன்றைக் கட்டியெழுப்பும் எண்ணம் உண்டா?” என வாசகர் ஒருவர் இலோன் மஸ்க்கிடம் ருவிட்டரில் கேள்வியெழுப்பியிருந்தார். ருவிட்டர் குறுஞ்செய்திகள் மூலம் தனது அரசியல், வர்த்தக, தொழில்நுட்பச் செய்திகளைத் தயங்காமல் எடுத்துக்கூறி சமூகப் புரட்சியை உருவாக்கும் புதிய ரக தொழில் முனைவர்களில் மஸ்க் முன்னிலையில் இருப்பவர்.
தற்போதுள்ள எல்லா சமூக வலைத்தளங்களினதும் ஒட்டுமொத்த நோக்கம் ‘தரவு வழிப்பறி’யாகும் (data mining). அதாவது அப்பாவிப் பாவனையாளர்களின் பிரத்தியேக விடயங்களை அமுக்கி வணிக முதலைகளுக்கு விற்றுப் பணம் சம்பாதிப்பது. முகநூல், வட்ஸப், இன்ஸ்ராகிராம் போன்ற அனைத்தும் இதன்மூலமே கொள்ளை இலாபங்களை ஈட்டுகின்றன. இவை எப்படி இவ்வழிப்பறிக் கொள்ளைகளைச் செய்கின்றன என்பதை இன்னொருவர் அறிந்துகொள்ளமுடியாதவாறு அவற்றின் மென்பொருள்களை வடிவமைத்திருக்கிறார்கள். ஆனால், இலோன் மஸ்க்கிடம் வாசகர் கேட்டது ‘ஓப்பிண் ஸோர்ஸ்’ முறையிலான மென்பொருளைக் கொண்டு கட்டமைக்கப்படும் வலைத்தளம். இம் மென்பொருள் மூலம் உருவாக்கப்பட்ட தளங்களில் என்ன நடைபெறுகின்றன என்பதை எவரும் அறிந்துகொள்ள முடியும். இதனால் திருடர்கள் இவ்வகையான மென்பொருள்களைப் பாவித்து தமது கோட்டைகளைக் கட்டிக்கொள்வதில்லை.
சமீப காலங்களில் இலோன் மஸ்க் தன்னை ஒரு ‘சுதந்திரப் போராளி’யாகக் காட்ட முற்படுகிவதுபோலத் தெரிகிறது. அமெரிக்காவின் ‘குடியரசுப் போராளிகளுக்கு’ ஆதரவாகவும், பாரவண்டி சாரதிகளின் ஊர்வலங்களுக்கு ஆதரவாகவும் அவர் வெளியிட்ட குறுஞ்செய்திகளைப் பார்க்கும்போது அவர் ஒரு வகையான விவேகமான ட்றம்ப் ரகமாகத் தோற்றமளிக்கிறார். அதே வேளை ருவிட்டர் போன்ற தளங்கள் ட்றம்ப்பின் செய்திகளைத் தடைசெய்தது மற்றும் முகநூல் ரஸ்யாவுக்கு எதிரான சமூக எழுச்சியைத் தூண்டும் செய்திகளை அனுமதித்தது போன்ற தன்னிச்சையான, எகத்தாளமான நடவடிக்கைகள் இலோன் மஸ்க் போன்ற சுதந்திரப் பிரியர்களை இவ்வலைத்தளங்கள் எரிச்சலூட்ட ஆரம்பித்திருந்தன. இதனால் அவர் தனது சொந்தமான சமூக வலைத்தளமொன்றை உருவாக்கும் எண்ணத்தை எடுத்திருப்பதாக நம்பப்படுகிறது. ‘ஓப்பிண் ஸோர்ஸ்’ மூலம் இத்தளத்தைக் கட்டியெழுப்பினால் அதன் செல்வாக்கு ஏனைய தளங்களை ஓரிரவிலேயே முடக்கிவிடக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. இளொன் மஸ்க் தொட்டதெல்லாம் பொன்னாக மிளிர்ந்துகொண்டிருக்கும் இக் காலத்தில் உலகமும் புதிய ஒழுங்கொன்றினை நாடி மாறிவரும் வேளையில் பொது மனிதனுக்கு இது நல்ல விடயமாகவே இருக்கும்.
சமீப காலங்களில் ருவிட்டர் நடந்துகொள்ளும் முறைகளால் எரிச்சலுற்ற மஸ்க் சில நாட்களின் முன் ருவிட்டரில் கருத்துக் கணிப்பொன்றை நிகழ்த்தியிருந்தார். “தனிமனித பேச்சுச் சுதந்திரத்தைப் பேணும் வகையில் ருவிட்டர் நடந்துகொள்கிறதா?” என்றொரு கேள்வியை அவர் அதில் கேட்டிருந்தார். 70 வீதமான வாசகர் அதற்கு ‘இல்லை’ என்றே பதிலளித்திருந்தார்கள். அத்தோடு “இக் கருத்துக்கணிப்பின் விளைவுகள் மிக முக்கியமானவை எனவே கவனமாக உங்கள் வாக்குகளை அளியுங்கள்” எனவும் அவர் அதில் கேட்டிருந்தார்.
அவர் அதில் குறிப்பிட்ட ‘விளைவுகள்’ என்ன என்பது இப்போது புரிகிறது. அதிலொன்றுதான் புதிய சமூக வலைத்தளம் என நம்பலாம். இனி வருங்காலங்களில் மக்களது அபிப்பிராயங்களைக் கட்டியெழுப்பும் வகையிலான ஊடகங்களது தேவைகள் அருகிப்போய் ஒவ்வொரு தனிமனிதனதும் சுய கருத்துக்களே ஜனநாயகத்தை வழிநடத்தப்போகின்றன என்பது நிதர்சனமாகிக்கொண்டிருக்கும் வேளையில் இலோன் மஸ்க்கின் இம் முயற்சி அவரது ஏனைய முயற்சிகளைப் போலவே ஒருபாரிய பாய்ச்சலாக இருக்குமென எதிர்பார்க்கலாம்.
ட்றம்பின் Truth Social மற்றும் ருவிட்டருக்குப் போட்டியாக இயங்கும் Gettr, Parler, காணொளி வகையில் Rumble ஆகியவற்றால் இதுவரை கூகிள், முகநூல் ஆகிய ஜாம்பவான்களை இதுவரை அண்ட முடியவில்லை. ஆனால் இலோன் மஸ்க்கின் பணம் பத்தும் செய்யும் பலத்தைக் கொண்டது என்பதையும் மறுப்பதற்கில்லை.