இலங்கையைக் கடுமையாகச் சாடும் ஐ.நா. மனித உரிமைகள் சபை அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும்
இலங்கையைக் கடுமையாகச் சாடும் அறிக்கையொன்றை, ஐ.நா. மனித உரிமைகள் சபை ஆணையாளர் மிஷெல் பக்கெலெ அடுத்த மாதமளவில் சமர்ப்பிக்கவுள்ளாரென கொழும்பு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்படுமுன்னர் அதற்கு இலங்கையின் பதிலைப் பெறுவதற்காக அறிக்கையின் பிரதியொன்று முற்கூட்டியே இலங்கை அரசுக்கௌ அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அப்பதில் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் உட்தரப்புச் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வருடம் பெப்ரவரி 22 முதல் மார்ச் 19 வரை, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46வது அமர்வு நடைபெறவிருக்கிறது. ஆனால் அதற்கு முதலே இவ்வறிக்கையை வெளியிட ஆணையாளர் விரும்புவதாகவும் அதற்கு முன்னர், அறிக்கைக்குப் பதிலளிக்கும் உரிமையை இலங்கைக்கு அளித்து அதன் பதிலுக்காகக் காத்திருக்கிறார் எனவும் டெய்லி மிரர் தெரிவிக்கிறது.
இவ்வமர்வின்போது ஐ.நா. தீர்மானம் 30/1 இல் குறிப்பிட்டபடி நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், தொடர்பான இலங்கையின் நடவடிக்கைகள் மீதான விபரமான அறிக்கையை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ளார். இதன்போது, இத் தீர்மானத்தில் இணக்கம் தெரிவித்தபடி, தற்போதைய, முந்திய அரசாங்கங்கள் மேற்கொள்ளத் தவறிய விடயங்கள் பற்றி அவர் காட்டமான விமர்சனங்களை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீர்மானம் 30/1 மற்றும் ரணில் அரசினால் இணைந்து முன்மொழியப்பட்ட 30/1 உடன் தொடர்புடைய தீர்மானமான 40/1 ஆகியவற்றிலிருந்து தாம் விலகுவதாக தற்போதைய அரசு அறிவித்திருந்தது. இருப்பினும், இவ்விரு தீர்மானங்களிலும் குறிப்பிட்டிருக்கும் விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு, 2015 முதல், மார்ச் 2021 வரை ஐ.நா. கால அவகாசம் கொடுத்திருந்தது. ஆனால், இலங்கை அரசு இவற்றை உதாசீனம் செய்து வருகிறது என சர்வதேச சமூகமும், பல மனித உரிமை அமைப்புகளும் குற்றஞ்சாட்டியுள்ளன.
கடந்த வருடம் புதிய அர்சு பதவியேற்றதும் ஐ.நா. தீர்மானங்களிலிருந்து விலகுவதற்குக் காட்டிய அவசரம் தனக்கு மிகவும் குழப்பம் தருவதாகவும், இலங்கை தொடர்பாக சபை அதிக கவனத்தைச் செலுத்தவேண்டுமெனவும் ஆணையாளர் பக்கெலெ தெரிவித்திருந்தார்.