India

இலட்சத் தீவில் இந்தியாவின் இரண்டாவது கடற்படைத் தளம்

இந்தியாவின் மேற்குக்கரையோரம் இருக்கும் இலட்சத் தீவில் இரண்டாவது கடற்படைத் தளமொன்றை இந்தியா நிர்மாணிக்கிறது. புதிய ஜனாதிபதி மொஹாமெட் முயிஸ்ஸுவின் ஆட்சியின் கீழ் மாலை தீவு சீனாவுடன் நெருக்கத்தைப் பேணுவதுடன் இந்தியாவிடமிருந்து அந்நியமாகி வருவதன் காரணமாக இந்தியா இந்நகர்வை மேற்கொள்வதாக அறியப்படுகிறது.

இந்தியாவின் கேரள மானிலத்திற்கு மேற்கே 36 தீவுகளைக் கொண்ட இத் தீவுக்கூட்டத்தில் சிலவற்றிலேயே மக்கள் வாழ்கிறார்கள். இவற்றிக்குப் போவதற்கு இந்தியாவிடம் அனுமதி பெறவேண்டும். கவராத்தி என்ற தீவே அதிகம் அபிவிருத்தியடைந்த தீவாகும். இத்தீவுக் கூட்டத்தில் தென் மேற்கு திசையிலுள்ள மின்கோய் தீவிலேயே புதிய இந்திய கடற்படைத் தளம் அமையவிருக்கிறது. மார்ச் 6 ஆம் திகதி ஐ.என்.எஸ் சடாயு என்ற கப்பல் மூலம் முதலாவது படைப் பிரிவு இங்கு செல்லவிருக்கிறது. மேற்கு அரபிக் கடலில் நடைபெறும் கடற் கொள்ளை மற்றும் போதைப் பொருட் கடத்தல்களை முறியடிப்பதற்காகவே இந்தியா இந்த நகர்வை எடுப்பதாக அறிவித்துள்ளது.

இவ்வருட ஆரம்பத்தில் இலட்சத் தீவுகளில் சுற்றுலாவை அதிகரிக்கும் திட்டம்பற்றி அறிவித்தபோது மாலைதீவின் ஜனாதிபதி அதற்குக் கண்டனம் தெரிவித்திருந்தார். மாலை தீவு முற்று முழுதாக சுற்றுலா வருமானத்தில் தங்கியிருப்பதும் இங்கு செல்லும் சுற்றுலாவாசிகளில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பதும் லட்சத்தீவு சுற்றுலா அதிகரிப்பினால் மாலை தீவின் வருமானம் பாதிக்கப்படும் என்பதும் இதற்குக் காரணமாகவிருக்கலாம்.

இரு நாடுகளுக்குமிடையே எழுந்த முறுகல் நிலைக்கு மாலை தீவில் நிலைகொண்டிருக்கும் இந்திய கடற்படையும் ஒரு காரணம். முயிஸ்ஸு தனது தேர்தல் பிரசாரத்தின்போது “நான் ஜனாதிபதியாக வந்தால் இந்திய கடற்படையை அகற்றுவேன்” எனக்கூறியிருந்ததுமல்லாது தேர்தலில் வென்றதும் கடற்படையை அகற்றும்படி இந்தியாவிடம் எழுத்து மூலம் கோரிக்கையும் விட்டிருந்தார். அதில் மார்ச் 15 இற்குள் கடற்படை அகற்றப்படவேண்டுமெனக் கால எல்லையும் வழங்கப்பட்டிருந்தது. கடந்த வாரம் இந்திய கடற்படைத் தொழில்நுட்ப அணியொன்று படையினரின் போக்குவரத்துக்காக விமானமொன்றை அனுப்பியிருந்தது.

இந்து சமுத்திரத்தில் அதிகரித்துவரும் சீன ஈடுபாடு குறித்து இந்தியா கடந்த பல வருடங்களாகத் தனது அதிருப்தியைத் தெரிவித்து வந்தது. ஜனவரியில் சீன உளவுக் கப்பலொன்று ஆய்வுக்கப்பலென்ற பெயரில் மாலை தீவின் தலைநகரான மாலிக்குச் சென்றது குறித்து இந்தியா தனது எதிர்ப்பை மால தீவிடம் தெரிவித்திருந்தது. ஆனால் அது ஆளணி மாற்றத்திற்காகவே அங்கு வந்தது என மாலை தீவு தெரிவித்திருந்தது.

இதற்கு முன்னர், இந்தியாவிற்கு விடும் எச்சரிக்கையாக ” எம்மை நிர்ப்பந்திக்கும் அதிகாரம் எந்தவொரு நாட்டுக்கும் இல்லை” என்னும் கருத்துப்பட மாலை தீவின் ஜனாதிபதி கூறியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் ” அயலவர்கள் துன்பப்படுகையில் நிர்ப்பந்திப்பவர்கள் $4.5 பில்லியன்களைக் கொடுத்து உதவ மாட்டார்கள்” என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜயசங்கர் தெரிவித்திருந்தார். (Pics Credit: Wikipedia)