News & AnalysisSri Lanka

இலஞ்சம், ஊழல் மூலமாக ஆட்சியாளரை இணங்க வைத்துச் சுரண்டுவதே சீனாவின் பழக்கம் – பேரா.நெடலகமுவெ தம்மதின்ன தேரர்

“மற்றய நாடுகளின் ஆட்சியாளருக்கு இலஞ்சத்தைக் கொடுத்து தமது வழியில் இணங்கவைத்து காரியங்களைச் சாதிப்பதுவே சீனாவின் வழமை” என மார்ச் 28 அன்று றிடீகமவில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசும்போது பேராசிரியர் நெடலகமுவெ தம்மதின்ன தேரர் தெரிவித்தார்.

” முதலாளிகளையும் அதிகாரிகளையும் பணத்துக்கு வாங்கியவுடன் அடிமைகள் தாமாகவே அவர்களைப் பின்தொடர்வார்கள். அதுதான் வழமை. ஒரு விடயத்தைச் சாதிக்க வேண்டுமென்றால் எந்த வழியினாலானாலும் அதைச் சாதித்துக்கொள்வதுவே அவர்களது பழக்கம்.

“இது ஒரு தார்மீகமற்ற, ஒழுங்கற்ற, சட்டத்துக்குப் புறம்பான முறை. அரச நிறுவனங்கள், உள்ளூரிலோ அல்லது வெளிநாடுகளிலோ வியாபார ஒப்பந்தங்களுக்கு கமிஷன் கொடுக்கக் கூடாது என்கிறது அமெரிக்க அரசியலமைப்பு. சீனாவிலோ நீங்கள் 15% கமிஷன் கேட்டால் முழுவதையும் உடனே கொடுக்கிறது அந்நாடு. யோசித்துப் பாருங்கள்.

“எங்கள் நாட்டில் மிக நல்ல உதாரணம் நுரைச்சோலை. 300 மெகா வாட் மின்சாரம். ஆனால் அதில் 270 மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. மீதி 30 இற்கும் என்ன நடந்தது? தரமான இயந்திரங்களை இறக்குமதி செய்தால் கமிஷன் கிடைக்காது. கமிஷனைப் பெறுவதற்காகவேதான் தரமற்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. சாதாரண பொதுமக்களுக்கு இது தெரியப்போவதில்லை. அரசியல்வாதிகளும், எஞ்சினியர்களும் சொல்வதையே மக்கள் நம்புகின்றனர். இந்த இரண்டு தரப்பினருக்கும் கமிஷன் கொடுக்கப்படுவதாலேயே அது சாத்தியமாகிறது” எனத் தெரிவித்தார் தேரர்.