EconomyNews & AnalysisSri Lanka

இலங்கை | GSP+ வரிச் சலுகையை மீளப்பெற ஐரோப்பிய ஒன்றியம் யோசனை

பயங்கரவாத தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யத் தவறியமை காரணம்

இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதிச் சந்தையான ஐரோப்பிய ஒன்றியம், இதுவரை இலங்கைக்கு வழங்கி வந்த ஜி.எஸ்.பி.பிளஸ் தீர்வைச் சலுகையைத் தற்காலிகமாக நீக்குவதற்கு யோசித்து வருகிறது.

705 அங்கத்தவர்களைக் கொண்ட ஐரோப்பிய பாராளுமன்றத்தில், இது தொடர்பாக எடுக்கப்பட்ட வாக்களிப்பில் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த வரிச் சலுகையைத் தற்காலிகமாக நீக்குவது என்று முன்மொழியப்பட்ட தீர்மானத்திற்கு 628 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கு ஏற்றுமதியாகும், ஆடை, பீங்கான் ஓடு, ரப்பர் உள்ளிட்ட பல பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பாரிய வரிச் சலுகையைக் கொடுத்து வருகிறது. இதற்கு முன்னரும் இவ் வரிச்சலுகையை மீளப்பெற்றிருந்த ஒன்றியம், மிகவும் மோசமானதென வர்ணிக்கப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மாற்றீடு செய்யும்படியான நிபந்தனையொன்றின் பேரில், 2017 இல் திரும்பவும் அதை அனுமதித்திருந்தது. அப்போது ஆட்சியிலிருந்த நல்லாட்சி அரசு அதற்கு இணங்கி அச் சட்டத்தை மாற்றீடு செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது. அதே வேளை அச்சட்டத்தைப் பிரயோகம் செய்வதிலும் அவ்வரசு அதிக ஆர்வம் எடுத்திருக்கவில்லை.

2019 இல் கோதாபய ராஜபக்ச ஆட்சியைக் கைப்பற்றியதும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மாற்றீடு செய்ய மறுத்ததுடன், அதைப் பாவித்து தொடர்ச்சியாக பல மனித உரிமை மீறல்களைச் செய்து வருவதை ஐரோப்பிய ஒன்றியம் அவதானித்து இத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இத் தீர்மானத்தின் அடுத்த நடவடிக்கையாக, ஏற்கெனவே கொடுக்கப்பட்ட நிபந்தனையை மீறியமை தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவைகள் ( European External Action Service), இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதோடு, ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை இடைநிறுத்துவது குறித்து யோசிக்கும்படியும் கோரியிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந் நிலைப்பாடு திடீரென எடுக்கப்பட்டதொன்றல்ல. மார்ச் 2021 இல் இலங்கை, ‘மத, இன, சமூக ஒற்றுமையைக் குலைக்க முயற்சிக்கும் எவரையும் நீதிமன்றத்திற்கு கொண்டுவராமல் 2 வருடங்களுக்குச் சிறையில் வைத்திருக்க முடியுமென’ பயங்கரவாத தடைச் சட்டத்தை விரிவுபடுத்தியிருந்தமை ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனத்தை ஈர்த்திருந்தது. பல தமிழ் இளைஞர்கள், இளம் முஸ்லிம் கவிஞர் அஹ்னாஃப் ஜசீம், வழக்கறிஞர் ஹேஜாஸ் ஹிஸ்புல்லா போன்ற பலர், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் தள்ளப்பட்டுள்ளமை பற்றியும் ஒன்றியம் கவனம் செலுத்தி வருகிறது. அத்தோடு, முன்னாள் குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபயசேகரா மற்றும் ஏனையவர்கள் தொடர்பாக, அவர்களை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சரியான குற்றங்களைப் பதிவு செய்யும்படியும் தவறினால் அவர்களை விடுதலைசெய்யும்படியும், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்தைக் கோரியிருந்தது.

அரசியலமைப்பின் மீதான 20 ஆவது திருத்தம், நீதித்துறையின் சுயாதீனத்தை மட்டுப்படுத்தியதோடு, அதிகாரம் பராளுமன்றத்திலிருந்து படிப்படியாகப் பிடுங்கப்பட்டு ஜனாதிபதியிடம் குவிக்கப்பட்டு வருவது தொடர்பாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இத் தீர்மானம் கருத்திலெடுத்துள்ளது.

இந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற , ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வின்போது, தனிப்பட்ட நாடுகள் தம்மாலியன்ற அளவு இலங்கை அரசின் மீது பொருளாதார, பயணத் தடைகள் மற்றும் இருதரப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இலங்கை அரசைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்படி ஆணையாளர் மிஷேல் பக்கெலெ கோரியிருந்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகை நிறுத்தம், அமெரிக்காவில் காங்கிரஸில் முன்வைக்கப்பட்டிருக்கும் பிரேரணை #413 போன்றவை, ஆணையாளரின் வேண்டுகோளை நிறைவேற்ற எடுக்கப்படும் முயற்சிகளோ எனச் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஏற்கெனவே கோவிட் தொற்று, சீனாவின் தலையீடு போன்றவற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரம் ஒன்றியத்தின் வரிச்சலுகை அகற்றப்பட்டால் மேலும் அதல பாதாளத்திற்குள் தள்ளப்படுமென அவதானிகள் கருதுகிறார்கள். இத்தோடு, இலங்கையின் நோய்த்தொற்றும் நிர்வாகச் சீர்கேடுகளால் மிக மோசமான நிலைக்குச் சென்றுகொண்டிருப்பதால், இலங்கை தன் வருமானத்துக்காக நம்பியிருக்கும் சுற்றுலாத்துறையும் மிக மோசமாகப் பாதிக்கப்படுமெனெ எதிர்பார்க்கப்படுகிறது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீள் பரிசீலனை செய்யப் போவதாக, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு, கோதாபய அரசு முன்னர் வாக்குறுதியளித்திருந்தாலும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுபவர்களைத் தடுத்து வைப்பதற்காக புதிய சிறைச்சாலை ஒன்றை உருவாக்குவதென சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்தமை, அரசாங்கம் மேலும் பல கைதுகளுக்குத் தயாராகிறது என்பதையே காட்டுகிறது .

ஐரோப்பிய ஒன்றியத்தின் இவ் வரிசலுகை நிறுத்தம், அமெரிக்காவின் பயணத் தடைகள், பொருளாதாரத் தடை போன்றவை நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் இலங்கையின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, மக்கள் எழுச்சி காரணமாக, தற்போதைய அரசு தூக்கியெறியப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமுள்ளன என அவதானிகள் கருதுகிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆங்கிலத்தினாலான தீர்மானத்தை முழுமையாகப் பார்வையிட இத் தொடுப்பை அழுத்தவும்.