• Post category:SRILANKA
  • Post published:October 23, 2020
Spread the love

சமாகி ஜன பலவேகய, தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து முஸ்லிம் கட்சிகள், அரவிந்த குமார் வெளியேற்றப்படலாம்?

இலங்கை அரசியலமைப்பின் 20 வது திருத்தம் இரண்டாவது வாசிப்பைத் தொடர்ந்து, சில திருத்தங்களுடன், மூன்றில் இரண்டு பெரும்பானமையுடன் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இச் சட்டமூல வாக்கெடுப்பில் 156 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும் 65 பேர் எதிராகவும் வாக்களித்தனர். பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகய கட்சியைச் சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இத் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

இவர்களின் பெயர்கள் பின்வருமாறு: டயானா கமகே, இஷாக் ரஹ்மான், எம். ரஹீம், நசீர் அஹ்மட், மொஹாமெட் ஹறிஸ், ஃபைசால் காசிம், அரவிந்த் குமார், எம்.எஸ்.தெளஃபீக்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன வாக்கெடுப்பின்போது சமூகமளித்திருக்கவில்லை.

வாக்கெடுப்பிற்கு முன்னர், எதிர்க்கட்சியைச் சேர்ந்த 20 உறுப்பினர்கள் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கத் தயார் நிலையில் இருந்ததாகச் செய்தியொன்று கசிந்திருந்தது.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்களில் 4 பேர் ஆதரவாக வாக்களித்தனரெனவும் ராவுஃப் ஹக்கீம் மட்டும் எதிராக வாக்களித்திருந்தார் எனவும் அறியப்படுகிறது.



ஆளும் கட்சியைச் சேர்ந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, விஜேதாச ராஜபக்ச போன்ற எதிர்ப்பாளர்களை 21ம் திகதி இரவு ஜனாதிபதி சந்தித்து மிகவும் உருக்கமாக வேண்டிக்கொண்டதையடுத்து அவர்கள் தமது எதிர்ப்பைக் கைவிட்டதாகத் தெரிகிறது. இவர்களில் பெரும்பாலோரது எதிர்ப்பு இரட்டைக் குடியுரிமை தொடர்பானது எனவும் இன்னும் ஒரு வருடத்துக்குள் உருவாக்க்கப்படவிருக்கும் புதிய அரசியலமைப்பில் இரட்டைக் குடியுரிமை விவகாரம் கவனத்துக்கு எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி உத்தரவாதமளித்ததைத் தொடர்ந்து அவர்கள் தமது எதிர்ப்பைக் கைவிடுவதாக அறிவித்தனர் எனவும் கூறப்படுகிறது.

சமாகி ஜன பலவேகய, தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து முஸ்லிம் கட்சிகள், அரவிந்த குமார் வெளியேற்றப்படலாம்?

சமாகி ஜன பலவேகய கட்சிக் கூட்டணியிலிருந்து ராவுஃப் ஹக்கீம் மற்றும் றிஷாட் பதியுதீன் ஆகியோரை வெளியேற்றுமாறு அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கட்சி நிர்வாகத்தைக் கேட்டுள்ளார். இரண்டு முஸ்லிம் கட்சிகளையும் சேர்ந்த அத்தனை உறுப்பினர்களும் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். 20 வது திருத்தத்துக்கு எதிராக வாக்களிப்பதாக கூட்டணி ஏகமனதாகத் தீர்மானித்திருந்தது எனவும் இறுதியில் இவர்கள் கட்சி தாவிவிட்டார்கள் எனவும் விதானகே ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.

தடுப்புக்காவலில் இருந்து பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்ட றிஷாட் பதியுதீன், மற்றும் ராவுஃப் ஹக்கீம் ஆகியோர் 20 வது திருத்தத்துக்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

அதே வேளை, 20 வது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த சமாகி ஜன பலவேகய கட்சியின் ஒரே சிங்கள பாராளுமன்ற உறுப்பினரும் தேசியப் பட்டியல் மூலம் தெரியப்பட்டவருமான டயானா கமகேயைக் கட்சியிலிருந்து விலத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கட்சியின் பேச்சாளர் ரவி ஜயவர்த்தன ‘இக்கோணொமி நெக்ஸ்ட்’ இணையத்தளத்துக்குத் தெரிவித்திருந்தார். அப்ப்டி விலத்தப்படும் பட்சத்தில் கமகே தனது ஆசனத்தை இழக்க நேரிடும். தான் தனது மனச்சாட்சியின்படி வாக்களித்திருப்பதாகவும், ஜனாதிபதி ராஜபக்ச மீது தனக்கு நம்பிக்கையுள்ளதாகவும் கமகே ஊடகவியலாளரிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த அரவிந்த குமாரும் கூட்டணியின் முடிவுக்கு எதிராக அரசாங்கத்துக்கு ஆதரவாக வக்களித்திருந்தார். அவரைக் கட்சியிலிருந்து விலக்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தன் முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email