Sri Lanka

இலங்கை | 20 வது அரசியல் யாப்புத் திருத்த வரைவு தயார் – 19 இல் பாரிய மாற்றங்கள்


செப்டம்பர் 03, 2020: இலங்கையின் அரசியலமைப்பின் 20 வது திருத்த வரைவு தயார் செய்யப்பட்டு நீதியமைச்சினால், வர்த்தமானி மூலம் இன்று பொது அறிவிப்பிற்கு விடப்படுகிறது. இதில், 19 வது திருத்தத்திலுள்ள முக்கிய அம்சங்கள் பல மாற்றப்படுகின்றன என அறியப்படுகிறது.

இவ் வரைவில் முன்மொழியப்பட்ட முக்கிய மாற்றங்கள்:

அரசியலமைப்புச் சபை (Constitutional Council)

அரசியலமைப்புச் சபை (Constitutional Council) பாராளுமன்றச் சபை (Parliamentary Council) எனப் பெயர் மாற்றப்படுகிறது. தற்போது இருக்கும் அரசியலமைப்புச் சபையில் 10 அங்கத்தவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து பரிந்துரைக்கப்படும் ஐவர் (நியமன உரிமை ஜனாதிபதிக்குண்டு), பாராளுமன்ற உறுப்பினர்களால் தெரியப்படும் ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சி அல்லாத கட்சிகளைச் சேர்ந்த ஒருவர் எனப் 10 பேர் அடங்குவர். இதில் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து பரிந்துரைக்கும் 5 பேரில் மூவர் வெவ்வேறு சபைகளை அல்லது பொது அமைப்புக்களைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். 3 வருட தவணையைக் கொண்ட இப்பதவிகளில், ஆரம்பத்தில் (2015-2018) ஏ.ரி.ஆரியரத்னா (சிங்களவர்), ராதிகா குமாரசாமி (தமிழர்) மற்றும் சிப்லி அசிஸ் (முஸ்லிம்) ஆகியோர் இருந்தார்கள். பின்னர் (2018-2021), ஜயந்த தனபால, நாகநாதன் செல்வகுமாரன், ஜாவிட் யூசுஃப் ஆகியோர் இப்பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

பாராளுமன்றச் சபை (Parliamentary Council)

புதிதாக மாற்றீடு செய்யப்படும் பாராளுமன்றச் சபையில் 5 பேர் மட்டுமே அடங்குவர். இதில் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமரால் பரிந்துரைக்கப்படும் ஒருவர், எதிர்க்கட்சித் தலைவரால் பரிந்துரைக்கப்படும் ஒருவர் ஆகியவர்கள் அடங்குவர். பரிந்துரைக்கப்படும் இருவரும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களா என்பது பொறுத்திருந்து பார்க்கவேண்டிய விடயம்.

ஜனாதிபதியின் அதிகாரங்கள்

19 வது திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதி எந்தவித அமைச்சுப்பதவிகளையும் வைத்திருக்க முடியாது மட்டுமல்ல அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரமும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டிருந்தது. 20வது திருத்த வரைவில், ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வகிக்கலாம் என்பது மட்டுமல்ல அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரமும் உள்ளது.



சுயாதீன ஆணையங்கள்

20 வரைவின்படி, சுயாதீன ஆணையங்களின் தலைவர்களையும், உறுப்பினர்களையும் நியமிக்கும் அதிகாரமும் ஜனதிபதியிடம் கொடுக்கப்படுகிறது. (1) தேர்தல் ஆணையம், (2) பொதுச் சேவைகள் ஆணையம் (3) தேசிய பொலிஸ் ஆணையம் (4) மனித உரிமைகள் ஆணையம் – இலங்கை (5) இலஞ்ச ஊழல் ஆகியவற்றை விசாரிப்பதற்கான ஆணையம் (6) நிதி மற்றும் வரம்பியற்றல் ஆணையம் ஆகியவை சுயாதீன ஆணையங்கள் பட்டியலில் அடங்கும்.

இதைவிட, சட்டமா அதிபர், கணக்காலர் நாயகம், பாராளுமன்ற நிர்வாக ஆணையர், பாராளுமன்ற சபையைக் கண்காணிக்கும் அதிகாரத்துடனான பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியவர்களை நியமிக்கும் அதிகாரமும் ஜனாதிபதியிடம் போகிறது.

இதை விடவும், ஜனாதிபதியிடம் செல்லும் முக்கியமான அதிகாரங்களில் ஒன்று, அமைச்சரவையில் அமைச்சர்களை நியமிக்க்கும் மற்றும் அமைச்சுக்களின் கடமைகள், பணிகள் என்னவென்பதை வரையறுப்பதும். இதற்காக அவர் விரும்பினால் பிரதமருடன் கலந்தாலோசிக்கலாம்.

இதர மாற்றங்கள்:

  • இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் பாராளுமன்ற அரசியலில் பங்குபற்றலாம்
  • ஜனாதிபதியாக இருப்பவரின் வயத்துத் தகமை 35 இலிருந்து 30 ஆகக் குறைக்கப்படுகிறது
  • ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஒரு வருடத்தில் கலைக்கலாம்
  • பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் உரிமை ஜனாதிபதிக்கு உண்டு

இவ் வரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு மோன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அங்கீகரிக்கப்பட்டால் இம் மாற்றங்கள் நடைமுறைக்கு வரும்.

முழுமையான வரைவைத் தமிழில் தரவிறக்க இதை அழுத்தவும்