இலங்கை: 1985 வரைபடத்திற்கமையவே மீள்குடியமர்வு – ஜனாதிபதி அறிவிப்பு
மலையகத் தமிழர்களுக்கு காணி உரிமைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்
ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானங்களின் படி சகல இலங்கை மக்களினதும் இன்னும் நிறைவேற்றப்படாமலிருக்கும் குறைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது என ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். டிசம்பர் 27 அன்று பதுளை, குருத்தலாவ முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடைபெற்ற நூற்றாண்டுவிழாக் கூட்டமொன்றில் பேசும்போது அவர் இப்படித் தெரிவித்தார்.
போரினால் தமது நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியேற்றும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் 1985 ஆம் ஆண்டில் இருந்த வரைபட எல்லைகளுக்கமையவே இக்குடியேற்றம் நிகழுமெனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
“வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் தமது காணிகளுக்கான உரிமைகளை மீளப்பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அத்தோடு காணாமற் போனவர்கள் குறித்து அவர்களுக்கான நட்ட ஈடுகளை வழங்கவும் நாம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு பொருளாதாரங்களை வளர்ப்பது, மலையகத் தமிழர்களின் காணி, கல்விக்கான உரிமைகளை வழங்குவது பற்றியும் ஜனாதிபதி இக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். முஸ்லிம்களின் உடலடக்கம் மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பின்னான கட்டுப்பாடுகளை நீக்குதல் போன்ற விடயங்களிலும் தான் கவனம் செலுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
