LIFEScience & Technology

இலங்கை வேடுவர் ஒடிஷா மற்றும் திராவிட பூர்வீகத்தைக் கொண்டவர்கள் – மரபணு ஆராய்ச்சி

இலங்கையின் ஆதிக்குடிகளான வேடுவர் ஒடிஷாவைச் சேர்ந்த முண்டாமொழி பேசும் சாந்தல் மற்றும் ஜுவாங் குலத்தவர்களும் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட மொழி பேசும் இருளர், பனியர் மற்றும் பள்ளர் குலங்களைச் சேர்ந்தவர்களுமென சமீபத்திய மரபணு ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மரபணு விஞ்ஞானியான கயநேஸ்வர் சோபே அவர்களின் தலைமையில் இலங்கை மற்றும் இந்திய விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஒடிஷா, திராவிட குலங்களுக்கிடையேயான ஒற்றுமைகள் பல புலப்பட்டிருப்பதாக இவ்வாரம் வெளியாகிய ‘மைற்றோகொண்ட்றியோன்’ சஞ்சிகை குறிப்பிடுகிறது.

இலங்கையில் தற்போது வாழும் தமிழரும் சிங்களவரும் மரபணு வேறுபாடுகளை அறியமுடியாத அளவுக்கு கலந்துவிட்டிருக்கின்றனர் எனவும் ஆனால் வேடுவர் குறிப்பிடக்கூடிய அளவுக்குத் தமது தனித்தன்மையைப் பேணிவருகின்றனர் எனவும் இச்சஞ்சிகை குறிப்பிடுகிறது.

அகழ்வாராய்ச்சி முடிவுகளின்படி நவீன இலங்கையின் குடிகள் கடந்த 30,000 த்திற்கும் மேலான வருடங்களாக இலங்கையில் வாழ்கின்றனர் என அறியப்பட்டாலும் அதன் வேடுவர் தான் அங்கு தொடர்ச்சியாக வாழ்ந்துவரும் ஆதிக்குடிகள் என இவ்வாராய்ச்சி கூறுகிறது. வேடுவர்களின் தனித்தன்மையான மொழியும் கலாச்சாரமும் மானிடவியலாளர்கள், வரலாற்றாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு மிக நீண்டகாலமாக புதிராக இருந்துவந்தது என இவ்வாராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானி குமாரசாமி தங்கராஜ் தெரிவித்துள்ளார். இவ்வாராய்ச்சியில் கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அஞ்சனா வெலிகல மற்றும் ருவாண்டி ரணசிங் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இந்திய துணைக்கண்டத்திலேயே மிகவும் அரிதாகப் பேசப்படும் மூன்று மொழிகளில் இவ்வேடர்களின் மொழியாக இருப்பது தமக்கு வியப்பாக இருந்தது என தலைமை விஞ்ஞானி சோபே தெரிவித்துள்ளார். இவ்வாராய்ச்சிக்காக ஒருவருக்கொருவர் உறவில்லாத 37 ஆரோக்கியமான வேடுவ சமூகத்தினரிலிருந்து பெறப்பட்ட இரத்த மாதிரிகள் இதர இலங்கையரின் இரத்த மாதிரிகளோடு ஒப்பிடப்பட்டிருந்தது.

சுமார் 55,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆபிரிக்கா கண்டத்திலிருந்து புலம் பெயர்ந்த குலங்களின் வழித்தோன்றல்களே தற்போது ஆசியாவிலும் இந்தியாவிலும் வாழும் நவீன மனிதர்கள் என தாய்வழிச் சமூக ஆராய்வுகள் தெரிவிக்கின்றன. கலங்களில் காணப்படும் மைற்றோகொண்ட்றியா எனப்படும் சக்தி பிறப்பாக்கிகள் தாய் வழி மூலம் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. எனவே ஒருவரது கலத்தின் மைற்றோகொண்ட்றியாவில் கணப்படும் DNA யை ஆராய்ந்தால் அவர் எந்த தாய்வழிச்சமூகத்தின் வழித்தோன்றல் என்பது புலனாகும். (Sorce an Image: The Telegraph)