NewsSri Lanka

இலங்கை: வீடுகளில் பெற்றோல் வைத்திருப்பதால் விபத்துக்கள் அதிகரிப்பு

ஜனவரியிலிருந்து எரி விபத்து மரணங்கள் 20% த்தினால் அதிகரித்திருக்கிறது

இலங்கையின் பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக வீடுகளில் சிறிய கலங்களில் மக்கள் பெற்றோலைச் சேமித்து வைத்திருப்பதும் இதனால் தீ விபத்துக்கள் நடைபெறுவதும் வழக்கமாகி விட்டன என சுகாதார திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக முச்சக்கர ஆட்டோ சாரதிகள் நீண்ட நேரங்களுக்கு வரிசையில் நின்று பெற்ற பெற்றோலை பாதுகாப்பற்ற முறையில் வீடுகளில் சேமித்து வைக்கிறார்கள். நகர்ப்புற நெருக்கமான குடிசைகளில் இடத் தட்டுப்பாடு காரணமாக இவை சமையல் செய்யும் இடங்களுக்கு அருகில் பதுக்கி வைக்கப்பட நேரிடுகிறது. அதே வேளை இலங்கையில் நிலவும் உயர் வெப்பநிலை காரணமாக இக் கலங்களிலிருந்து பெற்றோல் ஆவியாகி தீப்பற்றக் காரணமாகின்றது.

“ஜனவரி மாதம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நாங்கள் ஓரிரு எரி காயங்களுக்கான சிகிச்சைகளையே மேற்கொண்டிருந்தோம். மார்ச் மாதத்தில் நாளொன்றுக்கு குறைந்தது 6 எரி காயச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெற்றோல் விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் 20% த்தால் அதிகரித்திருக்கின்றது. இது இரண்டு நாட்களுக்கு ஒரு மரணம் என்ற வீதத்தில் இருக்கிறது” என்கிறார் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரியும் பிளாஸ்டிக் சேர்ஜன் டாக்டர் கயன் முனசிங்க.

“மண்ணெண்ணையைப் போலல்லாது பெற்றோல் இறுக்கமாக மூடப்பட்ட கலங்களில் சேமித்து வைக்கப்பட வேண்டும். ஆவியாகும் பெற்றொல் வாயு நிலையில் கசிந்து சிறிய காற்றோட்டமில்லாத் வீடுகளில் தேங்கி நிற்கும்போது அடுப்பில் சமைக்கும்போதோ அல்லது வீட்டினுள் புகை பிடிக்கும்போதோ இவ்வாயு தீப்பிடித்துக் கொள்கிறது. பலருக்கு பெற்றோலை எப்படிச் சேமித்து வைப்பது என்ற அறிவு இல்லை. இதனால் அநியாயமாகச் சாவது குழந்தைகள் மற்றும் வீட்டிலுல்ள வயோதிபர்கள் தான்” என்கிறார் டாக்டர் முனசிங்க.

ஒரு உடல் 20 வீதத்துக்கு மேல் எரிந்துவிட்டால் அது உயிராபத்தை விளைவிக்கும் சாத்தியமுண்டு. அத்தோடு இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை காரணமாக மருந்துகளின் விலையும் மிக மோசமாக அதிகரித்துள்ளதால் அத்ற்கான தட்டுப்பாடும் நிலவுகிறது. ஒரு எரிகாய நோயாளியை 24 மணித்தியாலங்கள் உயிரோடு வைத்திருப்பதற்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய்கள் தேவைப்படுகின்றன. இப்படிப் பலநாட்கள் ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளித்தாலும் பலதடவைகள் அது பலனற்றுப் போகிறது எனக் கூறுகிறார் டாக்டர் முனசிங்க.

இன்று கிராண்ட்பாஸிலுள்ள கஜிம்வத்தை என்னுமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

(தி ஈக்கொனோமி நெக்ஸ்ட்)