இலங்கை: விலகிய 41 பா.உ.க்களுடனும் ஜனாதிபதி அவசர சந்திப்பு!
இடைக்கால அரசாங்கம் ஒன்றை நிறுவுவதற்கு முயற்சி
சிறீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் உட்பட ஆளும் கட்சிக் கூட்டணியிலிருந்து விலகிய 41 உறுப்பினர்களுடனும் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச இன்று மாலை 7:00 மணிக்கு அவசர சந்திப்பொன்றுக்குத் தயாராகிறார். தற்போது நிலவும் பொருளாதார, அரசியல், சமூக குழப்ப நிலைகளுக்கு உடனடியான தீர்வொன்றைக் காண்பதற்கென இச் சந்திப்பு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதென சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
இன்று காலை சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ” இச்சந்திப்பின் பிரதான நோக்கம், ராஜபக்சக்கள் இல்லாத, சகல கட்சி அமைச்சரவையுடன் கூடிய ஒரு இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதியை இணங்கவைப்பதுவே ” என சிறிசேன தெரிவித்துள்ளார்.
இடைக்கால அரசாங்கம் ஒன்றை நிறுவுவதற்கு முன்னர் 19 ஆவது திருத்தம் திருத்தங்களுடன் மீளவும் நடைமுறைப்படுத்தப்பட்டு ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டுமெனத் தாம் கேட்டுக்கொள்ளப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை, நேற்று காலிமுகத் திடலில் ஆரம்பமான பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச பதவியிலிருந்து விலகும்வரை தாம் எங்கும் போய்விடப் போவதில்லை என அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்து வருகிறார்கள்.
கோதாபய ராஜபக்சவைச் சட்டபூர்வமாகப் பதவியிலிருந்து இறக்குவது சுலபமான ஒரு விடயமல்ல என்பதோடு அதற்குப் பல நாட்கள் எடுக்கும் என்பதால் மக்களது உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இடைக்கால அரசாங்கம் ஒன்று அவசியம் என்பது இக் கட்சிகளின் நிலைப்பாடு. இதே வேளை பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயவும், ஜே.வி.பி. யும் ஜனாதிபதி பதவி இறங்கும் மட்டும் இடைக்கால அரசு ஒன்றுக்குத் தாம் தயாரில்லை என அறிவித்து விட்டார்கள். இது நாட்டு மக்களின் இன்னல்களுக்கு எதுவித உதவியையும் செய்யப் போவதில்லை. எனவே ஒரு ஸ்திரமான அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டியது அவசியம் என சிறீசேன தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள 20 ஆவது திருத்தத்தை அகற்றிவிட்டு 21 ஆவது திருத்தமாக 19 ஆவது திருத்தத்தையும் அதன் திருத்தங்களையும் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பானமை தேவைப்படும். பிரதான எதிர்க்கட்சியின் பங்களிப்பு இல்லாமல் அது நிறைவேறுவதற்குச் சாத்தியமில்லை. அதற்குள் சர்வதேச நாணைய நிதியத்தின் தலையீட்டுடன் நாட்டை ஓரளவுக்கு சீர் செய்துவிட முடியுமானால் மக்களின் போராட்டங்கள் தளர்த்தப்படச் சாத்தியமுண்டு என ராஜபக்ச தரப்பு நம்புவதாகத் தெரிகிறது. எனவே இச் சந்திப்பு ராஜபக்ச தரப்பினால் விலகியவர்களை மீண்டும் உள்வாங்குவதற்குப் பேரம் பேசும் முயற்சிக்கான ஒன்றாகவும் இருக்கலாம் எனவும் பேசப்படுகிறது.