இலங்கை: விரைவில் தேர்தல்கள்?
பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் சவாலை ஏற்றது எதிர்க்கட்சி
சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் ஒழுங்குசெய்யப்பட்டு அனுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சி விடுத்த சவாலைத் தாம் ஏற்றுக்கொள்வதாகவும், எந்தவித தேர்தலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் சமாகி ஜன பலவேகய கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரும் அக் கட்சியின் பேச்சாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
“உள்ளுராட்சித் தேர்தல்களை உடனே நடத்துவதற்கு கோவிட் பெருந்தொற்று சவாலாக இருக்கிறது எனத் தொடர்ந்து கூறிவந்த பொதுஜன பெரமுன அனுராதபுரத்தில் தமது பேரணியை வைத்தமை வேடிக்கையாகவிருக்கிறது. இதன் பிரகாரம் அரசாங்கம் முன்னர் அறிவித்தபடி மார்ச் மாதம் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கான தேர்தல் ஆணையத்தின் அறிவ்த்தலை நாம் எதிர்பார்த்துள்ளது மட்டுமல்லாது அதற்கு நாங்கள் தயாராகவும் இருக்கிறோம்” என ரஹ்மான் ‘தி ஐலண்ட்’ பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.
கோவிட் நிலவரங்களை உதாரணமாகக் காட்டி, மார்ர்ச் மாதம் 3 ஆம் வாரம் நடைபெறவிருந்த உள்ளூராட்சித் தேர்தல்களை விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அரசாங்கம் பின்போட்டிருந்தது. அனுராதபுர சவாலைத் தாம் ஏற்றுக்கொள்கின்ற படியால் இந்த வர்த்தமானி அறிவிப்பை மீளப்பெற்று, மார்ச் மாதம் தேர்தல்களை நடத்துமாறு எதிர்க்கட்சி கேட்டுள்ளது.
இதே வேளை, எதிர்க் கட்சிகள் இன்னும் தேர்தல்களை எதிர்கொள்ளத் தயாரில்லை எனவும், சூழல் இன்னும் தமக்குச் சாதகமாக இருக்கின்ற காரணத்தால் உடனடியாகப் பாராளுமன்றத் தேர்தல்களை நடத்தவேண்டுமென பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச விரும்புவதாகவும் முன்னர் செய்திகள் வெளிவந்திருந்தன. அனுராதபுரத்தில் நடந்துமுடிந்த கூட்டம் மக்களின் ஆதரவைக் கணிப்பதற்காக பெரமுனவால் நடத்தப்பட்டிருந்தது எனவும் அதில் தற்போது ஆளுங்கூட்டணியில் இருக்கும் பங்காளிக்கட்சிகள் அழைக்கப்படாமை தங்கள் பலத்தை அளவிடுவதற்கு மட்டுமே நடத்தப்பட்டது எனவும் கருதப்படுகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச ஆகியோர் கலந்துகொண்ட அனுராதபுரக் கூட்டத்தில் பேசியபோது “எதிர்க்கட்சியின் சவாலை ஏற்று நாம் தேர்தல்களை நடத்தத் தயாராகவிருக்கிறோம். தேவையேற்படின் உள்ளூராட்சித் தேர்தல்களுக்கான திகதிய மாற்றவும் நாம் தயாராகவுள்ளோம்” என மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
இதேவேளை, மார்ச் மாதம் நடைபெறவிருந்த தேர்தல்களைப் பின்போட்டதற்கான காரணங்களில் ‘கோவிட் நிலவரம்’ ஒரு காரணியாக ராஜாங்க அமைச்சர் ரணசிங்கவினால் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும் அரசாங்க உத்தரவிட்டால் தேர்தல்களை நடத்துவதற்கு தாம் தயாராக உள்ளதாகவும் தேர்தல் ஆணையகத் தின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா ‘தி ஐலண்ட்’ பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள ஆளும் கூட்டணியில் 145 அங்கத்தவர்கள் இருக்கிறார்கள், அவர்களில் பொதுஜன பெரமுன அங்கத்தவர்கள் 117 பேரும், சுதந்திரக் கட்சியிலிருந்து 14 பேரும் மீதிப் பேர் உதிரிக் கட்சிகளின் அங்கத்தவர்களாகவும் இருக்கிறார்கள். எதிர்க்கட்சியில் 54 அங்கத்தவர்கள் இருப்பினும், அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் மற்றும் துறைமுக நகர ஆணையத்தின் உருவாக்கத்தின்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்காக ஆளும்கூட்டணி எதிர்க்கட்சி அங்கத்தவர்கள் பலரை ‘வாங்கியிருந்தது’.
சமாகி ஜன பலவேகய கட்சியிலும் உட்கட்சிப் போர் இன்னும் உக்கிரமாகவே இருக்கிறது எனவும் அது தேர்தலுக்கு இன்னும் தயாராகவில்லை எனவும் ஆளும் கட்சி நம்புகிறது. எனவே உள்ளூராட்சித் தேர்தல்களையோ அல்லது பாராளுமன்றத் தேர்தல்களையோ நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகுவதாக நம்பப்படுகிறது.