மாயமான்

இலங்கை | வாங்குக்கு வந்த தமிழ் அரசியல்

மாயமான்

தமிழ் அரசியல்வாதிகளின் நிலையைப் பார்த்தால் பரிதாபமாகவிருக்கிறது. 75 ஆவது சுதந்திரதினத்துக்கு முன்னர் அரசியல் தீர்வென முழங்கித் தள்ளிய ரணிலுக்கும் அதே நிலைமைதான். ஆனால் அவரது தோல் எருமையினுடையது. சொல்வதைக் காப்பாற்றவேண்டுமென்ற கடமை அவருக்கு மட்டுமல்ல சிங்கள அரசியல்வாதிகள் எவருக்கும் இல்லை. அதே போல சொன்னதைச் செய்யவில்லை என்று குற்றம்சாட்டும் பண்பு தமிழ் அரசியல்வாதிகளிடம் மட்டுமே இருக்கிறது.

தமிழரசுக்கட்சி ஆரம்பத்ததிலிருந்து இப்போது கூட்டமைப்பாகப் பிரிந்துநிற்கும்வரை அவர்கள் தமிழரின் உரிமைகளுக்காகவும் அரசியல் தீர்வொன்றுக்காகவும் மகா பாட்டுபட்டு வருகிறார்கள் என்பதில் உண்மையுண்டு. அவர்களும் விரும்பியிருந்தால் லஞ்ச வருமானம் குறைந்த மீன்பிடி அல்லது தபால் விநியோக அமைச்சுகளை எடுத்துக்கொண்டு தமது உறவினரையும் நன்பர்களையும் அரச சேவைகளில் அமர்த்தி, கூடவே தமிழித் தேசத்தின் மண்ணையும், தெற்கிற்கு அனுப்பி சம்பாதித்திருக்கலாம். அதைச் செய்யாமல் 75 வருடங்கள் தாக்குப் பிடித்திருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய விடயம். “கார்ப்பட் ரோட்டுகளைப் போடவோ அல்லது தமிழ் அரசியல் கைதிகளைச் சிறை மீட்கவோ முடியவில்லை. பின்ன என்ன ம***கு பாராளுமன்றம் போகிறார்கள். ரணிலுக்கு முண்டு கொடுக்க மட்டுமே அவர்களுக்குத் தெரியும்” என்றுதான் பலரும் திட்டுகிறார்கள். அதே வேளை அங்கு சென்றிருக்கும் மீதி வாயில்லாப் பிராணிகள் பற்றி எவருமே அலட்டிக் கொள்வதில்லை. எனவே இங்கு நான் குறிப்பிடும் தமிழ் அரசியல்வாதிகள் என்பது பெரும்பாலான தமிழரசுக் கட்சியினரை மட்டுமே என்பது நிரூபணமாகிறது.

சமீபத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வியறிவு பற்றிய பட்டியல் வந்தது. சம்பந்தன் ஐயா, சுமந்திரன், சாணக்கியன், அங்கஜன் போன்ற சிலரைத் தவிர ஏனைய தமிழர்கள் க.பொ.த. வுடன் படிப்புக்குக் காலை வாரியவர்கள். போராட்ட சூழ்நிலையும் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். பாராளுமன்றத்தில் அரசியல் கைதிகளின் விடுவிப்பு பற்றி வாய் திறக்காத இவர்கள் பாராளுமன்றத்தில் என்ன புடுங்கிக் கொட்டுகிறார்கள் என யாரும் கேட்பதில்லை. ஆனால் திட்டுவது முழுவதும் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரை மட்டும்தான். இதில் கோவணம் கட்டிக்கொண்டு முன்னிற்பவர்கள் பலர் வாக்குகளையோ பணத்தையோ அள்ளிக் கொடுக்காத புலம்பெயர்ந்த தமிழர்கள். இதனால் தான் தமிழ் அரசியல்வாதிகள் மீது பரிதாபம் பொங்குகிறது.

சுமந்திரனுக்கு திமிர் சற்று அதிகம்தான். ஆனால் அது அவரது திறமையால் வந்த திமிர். அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் அந்த மனிசன் நல்லாகச் சம்பாதித்திருக்கலாம். வெள்ளவத்தை லொட்ஜ்ஜுகளில் இருந்து படுக்கையறை உடுப்புக்களோடு தமிழரை இரவிரவாகத் தூக்கி வாகனங்களில் ஏற்றி கோதாபய நகர்கடத்தல் செய்தபோது அவர்களுக்காக கட்டணமின்றி நீதிமன்றங்களில் வாதாடிய சுமந்திரனை சம்பந்தன் ஐயா வலுக்கட்டாயமாக இழுத்துவந்து கட்சிக்குள் சேர்த்தார் எனக் கூறுவார்கள். நல்லாட்சியின்போது 19 ஆவது திருத்தம், அரசியலமைப்ப பற்றி தென்னிலங்கை முழுவதும் பிரசாரம் செய்தவர் சுமந்திரன். சட்டங்களில் இருக்கும் ஓட்டைகளைப் புட்டுப் புட்டு வைக்கும் வல்லமை கொண்ட ஒருவர் அவர். இந்த அரசியல் திமிர் அவருக்கானது மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழருக்குமானது, அவசியமானதும் கூட.

****

தேர்தலில் வெல்ல முடியாத ரணில் எப்படி அரகாலயா பிரச்சினையை வெட்டியோடி இந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்பது அவருக்கும் ‘அமெரிக்க ‘பிரின்சிப்பல்’ தலைமையிலான மேற்கிற்கும் மட்டுமே வெளிச்சம். விரும்பாதவர்களைப் போட்டுத்தள்ளியதுமல்லாது பிடிபடாமல் தப்பித்துக்கொள்ளும் வல்லமை கொண்ட கோதாபயவே வாலைச் சுருட்டிக்கொண்டு தப்பியோடினார் என்றால் அதற்கு ‘பிரின்சிப்பலின்’ வெருட்டு காரணமில்லையெனக் கூறமுடியாது. அமெரிக்கத் தூதுவரான பெண்மணி இப்படியான கைங்கரியங்களை இலகுவாகச் சாதிக்கக்கூடியவர் என்பது தெரிந்த விடயமே. இலங்கையில் சீனா காலூன்றுவதைத் தடுக்க ஒரு கொரிய-அமெரிக்கப் பெண்ணினால் முடியும் என்பதை அவர் ஓரளவு நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார். அரகாலயாவும் அவரது படைப்புக்களில் ஒன்று என்பாரும் உளர்.

இப்போது மாட்சிமை தங்கியவர் யாழ்ப்பாணம் போயிருக்கிறார். பிள்ளைகளைத் தொலைத்த தாய்மார் முற்றுகை பலமாகவிருக்கிறது. ஆனாலும் பூசாரிகள் மணிகளைக் கிலுக்கிக்கொண்டு அவரைப் பொட்டும் பூவுமாய்க் கெளரவிக்கிறார்கள். இதற்கு முன்னர் மஹிந்த வந்த போதும் இதே அமர்க்களமான வரவேற்புத் தான். மாட்சிமை இல்லாமல் ரணில் வந்தபோதும் இதே வரவேற்புத்தான். 13 ஐக் கழுத்தில் தொங்கப்போட்டுக்கொண்டு யாழ்ப்பாணம் வரும் எவருக்கும் வரவேற்பு அமோகமாகவே இருக்கும். நல்லாட்சி ஜனாதிபதி மைத்திரி வந்தபோது பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்மார்கள் காலில் விழுந்து கதறினார்கள். மஹிந்தவின் வரவையும் ரணிலின் வரவையும் அவர்கள் அரகாலயாவாகவே எதிர்கொள்கிறார்கள். அவர்கள் கார்ப்பட் ரோட்டுகளையல்ல காணாமலாக்கப்பட்டவர்களைப் பற்றியே கேட்கிறார்கள். உலக மனித உரிமை அமைப்புக்களுக்கு இவர்கள் தான் எப்போதுமே ‘காட்சிப் பொருட்களாக’ இருக்கிறார்கள். அதுவும் தேவைதான். அவர்களை ஏற்றி இறாக இலவச வாகனங்கள் ஓடோடி வருவதில்லை. அவர்கள் பின்னால் அரசியல்வாதிகள், சிவில் சமூகத்தினர் இல்லையெனக் கூறமுடியாது.

****

இதற்கிடையில் உள்ளூராட்சித் தேர்தல் களம் சூடுபிடித்திருப்பதும் இதில் தமிழ் அரசியல்வாதிகளின் தோல்கள் உரிக்கப்படுவதும் நகைச்சுவையாக இருக்கிறது. அமெரிக்காவின் mid-term தேர்தல்கள் போல இலங்கையிலும் உள்ளூராட்சித் தேர்தல்கள் மக்களின் அரசியல் நாடிகளைப் பிடித்துப் பார்க்கும் ஒன்று. அடுத்த பாராளுமன்றம் யார் கைகளில் போகப்போகிறது என்பதை இத் தேர்தல்கள் ஓரளவு காட்டிக் கொடுக்கும். சென்ற தடவை உள்ளூராட்சித் தேர்தல்களில் ராஜபக்சக்கள் கண்ட வெற்றியே அவர்களைப் பாராளுமன்றத்திற்குள்ளும் தள்ளியது. இந்தத் தடவை ராஜபக்சக்கள் மங்கிப் போனார்கள். வழக்கம்போல ஏதாவது அதிர்ஷ்டம் அல்லது ஜில்மால்களைச் செய்தேனும் அவர்கள் ஆட்சியைப் பிடிக்க முயலலாம். அதிலொன்று ராஜபக்சக்களின் SLPP யும் ரணிலின் UNP யும் சேர்ந்து ‘சிங்களத் தேசியக் கூட்டமைப்பு’ ஒன்றை உருவாக்குவது. ஏனைய கட்சிகள் பலவீனப்பட்டுப்போய் இருக்கும்போது இது சாத்தியமாகலாம். எப்படி ரணிலைத் தம்பக்கம் வைத்திருப்பதன் மூலம் பிரின்சிப்பலின் பிரம்புக்குத் தப்பலாம் என ராஜபக்சக்கள் திட்டம் போடலாம்.

தமிழர் தரப்பில் ஏற்கெனவே புடுங்குப்பட்டுக்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ கணக்கில் உடைந்தும் உடையாமலும் தேர்தல் வியூகங்களை வகுத்து நிற்கின்றனர். உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழரசுக் கட்சி தனியாகப் போட்டியிடத் தீர்மானித்துவிட்டது. விலத்திவிடப்பட்டவர்கள் பாவம். இப்போது அவர்கள் (சித்தர், செல்வம்) தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களோடு சேர்ந்து ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (DTNA) என்றொரு அமைப்பை உருவாக்கியிருக்கிறார்களாம். பின்னணியிலுள்ள பதாகையில் ‘D’ என்பதை எவ்வளவு சிறியதாக அழகாகப் போட்டு ஜமாய்த்திருக்கிறார்கள். வாக்காளர்களை முட்டாள்களாக்க நினைத்து தாமே பெரிய முட்டாள்கள் என சிரமங்கள் எதுவுமில்லாது நிரூபித்திருக்கிறார்கள். இத் சிறுவர்கள் அனைவரும் ஒரு வாங்கில் அமர்ந்து இருப்பதைப் பார்க்க மாதாந்த உதவிப்பணத்தைப் பெறுவதற்காக காத்திருப்பவர்கள் போல் பரிதாபமாக இருக்கிறது. விக்கியரும் மணிவண்ணனும் ‘சின்னப் பிரச்சினையைப்’ பெரிய பிரச்சினையாக்கி விட்டுவிட்டுப் போய்விட்டார்களாம். அவர்களும் இந்த வாங்கில் இருந்தால்? நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது.

****

சமீபத்தில் சில நண்பர்களோடு காரசாரமாக விவாதிக்கவேண்டி ஏற்பட்டது. ரணிலுக்கு முண்டு கொடுப்பது முதல் யாழ்ப்பாணத்துக்கு ‘கார்ப்பட் ரோட்’ போட்டதுவரை மா மீண்டும் மீண்டும் அரைக்கப்பட்டது. நல்லாட்சிக் காலத்தில் ரணிலுக்கு கூட்டமைப்பு முண்டு கொடுத்தது உண்மை. அப்போது அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தமும் அதைத் தொடருமென நம்பிய அரசியல் தீர்வும் கூட்ட்மைப்ப்பு பற்களைக் கடித்துக்கொண்டு சகித்துப் போகவேண்டிய நிலையில் அவர்களை வைத்திருந்தது. ஏமாற்றப்படலாம் என்ற நிலையிலும் அதைத் தவிர அவர்களுக்கு வேறு வழிகளில்லை. MBRL களும் AK47 களும் மெளனமாக்கப்பட்ட நிலையில் அவர்களிடம் வேறெந்த ஆயுதமும் இல்லை. அப்படியிருந்தும் ரணிலைத் திட்டிய பலர் இந்நல்லாட்சியின்போது குடும்பச் சுற்றுலா சென்று வீடுகளைத் திருத்திவிட்டு பூட்டிப்போட்டு வந்திருக்கிறார்கள்.

கார்ப்பட் ரோட் இன்னுமொரு விடயம். பிரித்தானிய ஆட்சியில் இலங்கை இருந்தபோது அவர்கள் முதலில் போட்டது தார் (கார்ப்பட்) ரோட்டுக்களைத் தான். மலையகத்தில் உள்ளூர் மக்களின் விவசாயங்களை அழித்து பெருந்தோட்டங்களை நிறுவியபோது இத் தெருக்கள் அவர்களுக்கு அவசியமாக இருந்தன. பெருந்தோட்டங்களை எதிர்த்து மக்கள் புரட்சி செய்தார்கள். 1848 இல் நடைபெற்ற ‘மாத்தளைப் புரட்சி’யின்போது அதை இலகுவாக அடக்குவதற்கு ‘அப்போதைய கார்ப்பட் ரோட்டுகள்’ தான் பயன்பட்டன. சீனக் கடனில் 10 வீதத்தைச் சுருட்டிக்கொண்டு ராஜபக்சக்கள் யாழ்ப்பணத்துக்கு கார்ப்பட் ரோட் போட்டது எதற்கென்று இப்போது புரிந்திருக்கும். 300,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினரும் விரைவாகப் பயணிக்க வல்ல ‘கார்ப்பட் ரோட்’ கொழும்பில் வாடகைக் கார் எடுத்துக்கொண்டு யாழ்ப்பாணம் சுற்றிப்பார்க்க வரும் கனடியத் தமிழரைப் புல்லரிக்க வைத்திருக்கலாம். அதனால் மட்டும் ராஜபக்சக்கள் ரணிலைவிடச் சிறந்தவர்கள் ஆகிவிட முடியாது. முள்ளி வாய்க்காலில் விளக்குக் கொழுத்த அனுமதித்தமைக்காவது ரணிலுக்கு கொஞ்சம் நன்றி சொல்லலாம்.

****

தமிழருக்கு இன்னும் நிறைய வேலை இருக்கிறது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தமிழருக்குப் புதியதொரு சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறது. புலம் பெயர்ந்த தமிழர்களின் தலைகளில் தான் இப் பொறுப்பு ஏற்றப்பட்டிருக்கிறது. உள்ளூர் அரசியல்வாதிகளைப் பலமிழக்கச் செய்வதால் நாம் எதையும் சதித்துவிடப் போவதில்லை. எமது அரசியலுக்காக அவர்களைப் பிரித்து உள்ளூராட்சி மன்றங்களிலோ, பாராளுமன்றத்திலோ நமது எண்ணிக்கையைக் குறைத்து எவ்வித பிரயோசனமுமில்லை. புலம்பெயர்ந்தோரது பொருளாதார, கல்வி சார்ந்த ஆதரவுகள் வெவ்வேறு தளங்களில் செயற்படுவதே நல்லது. எனவே பிரித்தல், கழித்தல் வாய்பாடுகளை விட்டுவிட்டு கூட்டல், பெருக்கல் வாய்பாடுகளை மனனம் செய்வது நன்மை பயக்கும்.

பிரிந்தாளும் பலம் இருக்கிறது என்பதற்காக உள்ளூராட்சித் தேர்தல்களின்மூலம் தமிழரை மேலும் பலவீனமாக்கிவிட வேண்டாம் என்பதே நான் கேட்டுக்கொள்வது.