இலங்கை: வடமாகாண அபிவிருத்திக்கென முதலீட்டு சபையால் மூன்று வலயங்கள் தேர்வு
காங்கேசந்துறை, பரந்தன், மாங்குளம் ஆகிய பிரதேசங்கள் முதலீட்டு வலயங்களாகத் தெரிவாகியதைத் தொடர்ந்து இப்பிரதேசங்களின் உட்கட்டுமானங்களைத் துரிதப்படுத்துமாறு முதலீட்டுச் சபைத் தலைவர் அர்ஜுனா ஹேரத் சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். முதலீட்டு சபைத் தலைவராகப் பதவியேற்றபின் முதல் தடவையாக யாழ்ப்பாணம் வருகை தந்த அவர் இவ்வலயங்கள் தொடர்பாக ஆளுனர் அலுவலகத்தில் நடத்திய சந்திப்பின்போதே அவர் இக்கோரிக்கையை விடுத்திருக்கிறார். உட்கட்டுமானப் பணிகள் முடிவடைந்தால் இவ்வருடத்தின் மூன்றாம் காலாண்டின் போது முதலீட்டாளர்கள் தமது கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க முடியும் என அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
ஆளுனர் என். வேதநாயகம் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில் புதிய முதலீட்டு வலயங்களுடன் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள், முதலீட்டாளர்கள் மற்றும் வடமாகாண வர்த்தக சம்மேளனத்தின் அங்கத்தவர்கள் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். இவ்வலயங்கள் முற்றாக இயங்குநிலைக்கு வரும்போது அது 16,000 பேருக்கு நேரடிப் பணிவாய்ப்புக்களையும், 50,000 பேருக்கு தொடர்பு நிலை பணிவாய்ப்புக்களையும் வழங்க முடியுமென முதலீட்டு சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வலயங்களில் நிறுவப்படும் உற்பத்தி ஆலைகள் சுற்றுச்சூழல் விடயங்களில் நட்புள்ளனவாகவும் பசுமை சார்ந்த உத்திகளைக் கையாள வல்லனவாகவும் இருக்குமெனவும் இவ்விடயத்தில் அவை சர்வதேச தரத்திற்கு இணையானவையாக இருக்குமெனவும் இதனால் வெளிநாடுகளின் நேரடி முதலீடுகளைப் பெறக்கூடியதாக இருக்கமுடியுமெனத் தாம் நம்புவதாகவும் முதலீட்டு சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காங்கேசந்துறை முதலீட்டு வலயத்திற்கு கடல், வான், தரை ஆகிய முவ்வழித் தொடர்புகள் இருப்பதால் இங்கு முதலிடுவதற்குப் பல நிறுவனங்கள் இணக்கப்படலாம் எனத் தாம் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் வடமாகாண ஆளுனர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட ச் செயலாளர்கள், வடமாகாணசபையின் முதன்மைச் செயலாளர் மற்றும் யாழ் வர்த்தக சம்மேளன சபை அலுவலர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
