இலங்கை | மேலும் இரு இராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா பயணத்தடை
வசந்த கரன்னகொட மன்னிப்பு, பதவி நியமன எதிரொலி?
போர்க்குற்றம் சாட்டப்பட்ட மேலும் இரு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்குமெதிராக மனித உரிமை மீறல்களுக்காக அமெரிக்கா பயணத்தைடைகளை விதித்திருக்கிறது.

2008-2009 இல், ‘திருகோணமலை 11’ என அழைக்கப்படும் 11 பேர் காணாமலாக்கப்பட்டமை தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்டவரான கடற்படை அதிகாரி ‘நேவி சம்பத்’ என அழைக்கப்படும் லெப்டினண்ட் சந்தனா ஹெட்டியாராய்ச்சி மற்றும் 2000 ஆம் ஆண்டு மிருசுவிலில் 8 தமிழர்களைக் கொன்றதாகச் சிறைத்தண்டனை தீர்க்கப்பட்டு ஜனாதிபதியால் மன்னிப்பு வழங்கப்பட்ட சுனில் ரத்நாயக்கா ஆகிய இருவரும், அவர்களது உடனடியான குடும்ப உறுப்பினர்களும் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டவர்கள் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
2020 இல் இலங்கை இராணுவத் தளபதி சவேந்திரா சில்வா மீதான பயணத்தடையை அமெரிக்கா விதித்திருந்தது. இறுதிப் போரின்போது சில்வா கட்டளைத் தளபதியாக இருந்த படைப்பிரிவினர் மீக மோசமான மனித உரிமை மீறல்களைச் செய்திருந்தமைக்கான ஆதாரங்கள் இருப்பதை முன்வைத்து அப்போது அமெரிக்கா அம்முடிவை எடுத்திருந்தது.
“மனித உரிமை மீறல்களை எமது வெளிநாட்டுக் கொள்கையின் மையமாகக் கொள்ளும் எமது நிலைப்பாட்டை நாம் மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்கிறொம். உலகில் எங்கு அவை நடைபெற்றாலும் அவற்றை உரியமுறையில் எமது கருவிகலையும், அதிகாரங்களையும் பாவித்து கண்காணித்து அவற்றுக்கான பொறுப்புக்கூறலைச் சுட்டிக்காட்டுவதில் நாம் உறுதியாகவிருக்கிறோம்” என இது தொடர்பான நேற்று மாலை வெளியிடப்பட்ட அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

“மனித உரிமை மீறல்கள், பொறுப்புக்கூறல் விடயங்கள் தொடர்பாக நாம் எடுக்கும் நடவடிக்கை இந்த இருவரின்மீது விதிக்கும் பயணத்தடையோடு மட்டும் முடிந்துவிடப்போவதில்லை” என்ற எச்சரிக்கையையும் ராஜாங்க திணைக்களம் விடுத்திருப்பது இலங்கை தொடர்பில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் மேலும் பாரிய மாற்றங்கள் வரவிருப்பதை உணர்த்துகின்றன.
‘திருகோணமலை 11’ என அழைக்கப்படுபவர்க: கஸ்தூரியாராய்ச்சி ஜோன், தியாகராஜா ஜெகன், ராஜிவ் ஜோகநாதன், சூசைப்பிள்ளை அமலன், சூசைப்பிள்ளை ரொஷான், கஸ்தூரியாராய்ச்சி அன்ரன், பிரகீத் விஷ்வநாதன், திலஏஸ்வரன் ராமலிங்கம், மொஹாமெட் டிலான், மொஹாமெட் சாஜிட் மற்றும் அலி அன்வர் ஆவார். 17 முதல் 50 வயதுடைய இவர்களில் இரு தந்தைகளும் அவர்களது பிள்ளைகளும் அடங்குவர்.
இலங்கையில் நடைபெற்ற, பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை ஐ.நா. மனித உரிமைகள் சபை தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகிறது. தமக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் ஒன்றாவது ஆதாரங்களற்றவை எனக் கூறமுடியாது என ஆணையாளர் மிஷெல் பக்கெலெ தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அதே வேளை, டிசம்பர் 9 இல் அமெரிக்க காங்கிரஸில் நடைபெற்ற ரொம் லாண்டோஸ் ஆணைய விசாரணயில் சாட்சியமளித்த இலங்கை மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறல்களுக்குப் பொறுப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் (HRW) சேர்ந்த ஜோன் சிஃப்டன் இலங்கை மீது அமெரிக்கா காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமெனக் கேட்டிருந்தார்.
இதேவேளை, சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.