News & AnalysisSri Lanka

இலங்கை | முப்படைகள் உசார் நிலையில், நீடிக்கும் மர்மம்?

இலங்கை | முப்படைகள் உசார் நிலையில், நீடிக்கும் மர்மம்?

மாயமான்

நாடு தழுவிய ரீதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்குமாறு முப்படைகளுக்கும் கட்டளை பிறப்பிக்கும் உத்தரவு ஒன்று , நேற்று (22) ஜனாதிபதி அலுவலகத்தினால் விசேட, அசாதாரண வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசியலமைப்பின் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 12 ஆவது பிரிவின் பிரகாரம், ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச இவ்வறிவித்தலைப் பிரகடனம் செய்திருக்கிறார்.

இவ்வறிவித்தலின்படி, நிர்வாக மாவட்டங்களான, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, புத்தளம் ஆகியவற்றில் பாதுகாப்பைக் கவனித்துக்கொள்ளுமாறு முப்படைகளுக்கும் கட்டளை விடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இதைப் பற்றிய செய்திகள் எதுவும் தென்னிலங்கைப் பத்திரிகைகளில் பிரசுரமாகவில்லை.

மாகாணசபைத் தேர்தல்கள், துறைமுக நகரம், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணை, அரசியற் பழிவாங்கல் விசாரணை, கோவிட் தொற்று, சிங்கராஜா காடழிப்பு போன்ற பல விடயங்களில் ஆளும் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளுக்கும் பிரதான இலங்கை பொதுமக்கள் முன்னணி கட்சிக்குமிடையில் நடந்துவரும் உட்கட்சிப் போர் முற்றி வரும் நிலையில், பங்காளிக் கட்சிகளான 11 கட்சிகளும் மே தின ஊர்வலத்தைத் தனியாக நடத்துவதற்குத் தீர்மானித்திருந்தனர். அதைத் தடுப்பதற்காக, அரசு கோவிட் பெருந்தொற்றைக் காரணம் காட்டி அனைத்து பொதுமக்கள் கூடல்களையும் தடை செய்திருந்தது.

இச் சூழ்நிலையில் நாட்டின் பாதுகாப்பு முப்படைகளிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது பலத்த சந்தேகத்தை எழுப்பி வருகிறது. அத்தோடு இது பற்றிய செய்திகள் இருட்டடிப்புச் செய்யப்படுவதன் காரணமும் அதை மேலும் வலுவாக்குகிறது.

துறைமுக நகரத்தின் ஆணையாளர் குழுவில் சீனர் இருக்கலாமா கூடாதா என்பது பற்றிய விவாதம் முற்றிவரும் நிலையில், பாராளுமன்றத்தில் சட்ட வரைவு இன்றோ நாளையோ நிறைவேற்றப்படலாம். மக்களுக்குக் கூறப்பட்டதைவிட இத் துறைமுகநகரம் மிக மோசமான இரகசியங்களை உள்ளடக்கியிருப்பது படிப்படியாக எதிர்க்கட்சி உறுப்பினர்களினால் கொண்டுவரப்படுகிறது. இதினின்றும் மக்களது கவனத்தைத் திசை திருப்புவதற்காக, தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் முப்படைகளையும் உசார் நிலையில் வைத்திருப்பதும் அரசாங்கத்தின் கபட நோக்கங்களில் ஒன்றாக இருக்கலாம்.

துறைமுக நகரம் மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் விடயத்தில் புத்த மகாசபை கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது. அதை மெளனமாக வைத்திருப்பதற்கான இன்னுமொரு நடவடிக்கையையும் கோதாபய அரசு செய்து வருகிறது. பல புத்த மகாசபி பீடாதிபதிகளையும் மஹிந்த தரப்பு தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தாலும் இன்று (வெள்ளி) ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச அனைத்து புத்த மகா சபையினரையும் ஒன்றாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார். இதன்போது நாட்டின் பொருளாதார நிலை மிக மோசாமாகப் போவது பற்றி விளக்கமளித்த ஜனாதிபதி, துறைமுக நகரம் ஒன்றினால்தான் எமது பொருளாதாரத்தை நிலைநிறுத்தி, அதன் மூலம் இலங்கையை வெளிநாடுகளில் தங்கியிருக்காத ஒன்றாகப் பார்த்துக்கொள்ளலாம் எனக்கூறியதைத் தொடர்ந்து புத்த மகாசபை ஜனாதிபதியோடு இணங்கிப் போவதாக அறிவித்திருப்பதாகவும் தெரிகிறது. இதன் மூலம் தனது ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதை ராஜபக்ச தரப்பு வெற்றிகரமாகச் சமாளித்திருக்கிறது எனவும் நம்பலாம்.

இதே வேளை, ராஜபக்ச தரப்புக்கு எதிராக மக்களது நியாயமான கோபம் இருக்கிறது என்றாலும், அதற்கான பலவகையான காரணங்களும் ஆதாரங்களும் கைவசம் இருந்தும் அவற்றை உபயோகிக்க வலுவில்லாத நிலையில் எதிர்க்கட்சி இருந்து வருகிறது. சஜித் பிரேமதாசவின் எதிர்க் கட்சி தோற்றுப் போகவேண்டுமென ரணில் விக்கிரமசிங்கவும், இச்சந்தர்ப்பத்தில் தமது கட்சியை மீளக் கட்டியெழுப்ப சுதந்திரக் கடசியும் தனித்தனியே முயல்வதாலும், சஜித் பிரேமதாச மிகவும் பலவீனமான ஒரு தலைவராக இருப்பதாலும், ராஜபக்ச தரப்புக்கு இருக்கக்கூடிய ஒரே எதிர்க்கட்சி, அவர்களது பங்காளிக் கட்சிகளும், புத்த மகா சபையும்தான்.

அச்சத்தின் காரணமாகவோ அல்லது விலைபோன காரணமாகவோ ஊடகங்களும் ராஜபக்ச தரப்பிற்காக ஒத்தூதி வருகின்றன. நீதிமன்றங்கள், நீதிபதிகள், விசாரணை ஆணையங்கள் என எல்லாமே அரச தரப்பாக மாறிவிட்ட நிலையில் துறைமுக நகர சட்ட வரைவு நிறைவேற்றப்படும் சாத்தியங்கள் நிறையவுண்டு. ஹரின் ஃபெர்ணாண்டோ, மனுஷா நாணயக்காரா போன்ற சிலரது குரல்களைத் தவிர ஏனையவை எல்லாம் நசிக்கப்பட்ட நிலையில் சீனா தனது நாட்டை இலங்கைத் துறைமுகத்தில் அமைத்துவிடும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை.