இலங்கை: முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் கைது!
பிள்ளையான் என அழைக்கப்படுபவரும் முன்னாள் கிழக்க்மு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் திங்களன்று (07) குற்ற விசாரணைப் பிரிவினால் மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பிள்ளையானின் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அலுவலகத்திற்கு சிவில் உடைகளில், அடையாளப்படுத்தப்படாத வாகனத்தில் வந்த சிலர் அவரைக் கைது செய்திருக்கிறார்கள். கைதுக்கான காரணம் இன்னும் கூறப்படவில்லையாயினும் 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளில் பிள்ளையான் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக அவர் கைதுசெய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளின்போது சுமார் 250 பேர் கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தும் இருந்தனர்.
‘கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கான தனித்துவமான ஒரு அரசியல் கட்சியை கடந்த மாதம் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனும் பிள்ளையானும் இணைந்து உருவாக்கியிருந்தார்கள். நீண்ட காலத்திற்குப் பிறகு இவ்விரு முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்படத் தீர்மானித்திருந்தார்கள் எனக் கூறப்படுகிறது.
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் கொழும்பு உட்பட இலங்கையின் பல இடங்களிலும் நடைபெற்ற கொலைகளுக்கும் காணாமலாக்கப்பட்ட சம்பங்களிற்கும் பின்னால் பிள்ளையான் தலைமையில் இயங்கிய கும்பல் காரணமாக இருந்தது எனக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இக்குழுவில் ஒருவரும், கருணா அம்மானுக்கு மிக நெருங்கியவருமான அசாத் மெளலானாவின் சாட்சியங்களை முன்வைத்து பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட விவரணப்படமொன்றில் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புடன் பிள்ளையனைத் தொடர்புபடுத்திக் கூறப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாது 2005 ஆம் ஆண்டு நத்தார் தொழுகையில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரான ஜோசெப் பரராஜசிங்கத்தின் கொலையுடன் தொடர்பு இருந்ததாகக்கூறிக் கைது செய்யப்பட்ட அவர் பின்னர் அரசியல் காரணங்களுக்காக 2021 இல் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
சனல் 4 நிகழ்ச்சியைத் தொடர்ந்து அக்டோபர் 2023 இல் மீண்டும் கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் “இக்கைதுகளெல்லாம் கிழக்கு மாகாணத் தமிழர்களைத் தண்டிப்பதற்காகவே நடைபெறுகிறது” எனக் கூறிய பிள்ளையான் “நான் குற்றவாளியாகக் காணப்பட்டால் தூக்குப் போட்டு மரணித்து விடுவேன்” என எச்சரித்திருந்தார். பிள்ளையானை விசாரிக்க அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட ஆணையம் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் ஆதாரமற்றவை எனக்கூறி அவரை விடுதலை செய்திருந்தது. இப்படியான இக்கட்டான சந்தர்ப்பங்களில் பிள்ளையானும் கருணா அம்மானும் தம்மைக் கிழக்கு மாகாணத்தின் காவலர்களாகக் கூறி மக்களின் ஆதரவைத் தேடிக்கொள்வது ச்கஜமாக இருந்து வருகிறது. ஆனால் சமீபத்திய பிள்ளையானின் கைதைத் தொடர்ந்து மட்டக்களப்பில் பலர் வெடி கொழுத்தி அவரது கைதைக் கொண்டாடியுள்ளதாகத் தெரிகிறது.
இதே வேளை கிழக்கு மாகாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் அவர்கள் காணாமலாக்கப்பட்ட விடயம் தொடர்பாக அதன் பின்னால் பிள்ளையான் இருந்தார் என்ற குற்றசாட்டும் முன்வைக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற விஞ்ஞானிகள் மாநாடு ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றிருந்த பேராசிரியர் ரவீந்திரநாத் டிசம்பர் 15 அன்று காணாமற் போயிருந்தார். இவர் காணாமலாக்கப்பட்டமையின் பின்னால் பிள்ளியான் அணி இருந்ததாகவும் அப்போது சந்தேகிக்கப்பட்டது.
