News & AnalysisSri Lanka

இலங்கை | பேர்க்காவிற்கு தடை, 1,000 மார்க்கப் பள்ளிகளும் மூடப்படும்

இலங்கையில் முஸ்லிம் பெண்கள் பேர்க்கா ஆணிவதற்குத் தடை, 1,000 மார்க்கப்பள்ளிகளும் மூடப்படும்

இலங்கையில் முஸ்லிம் பெண்கள் தங்கள் முகங்களை மூடி அணியும் பேர்க்கா எனப்படும் முகக் கவசங்கள் தடி செய்யப்படுகிறது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

அத்தோடு 1,000 த்திற்கும் மேற்பட்ட, இலங்கையில் இஸ்லாம் மதத்தைத் போதிக்கும் மதராசாஸ் எனப்படும் மார்க்கப் பள்ளிகளையும் மூடப்படுமென அரசு அறிவித்துள்ளது.

“முகக் கவசம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தருவது” எனக் கூறி அதன் தடைக்கான உத்தரவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரா இன்று கையெழுத்து வைத்துள்ளார்.

” எங்களுக்கு நிறைய முஸ்லிம் நண்பர்களுண்டு. அவர்கள் ஒருபோதும் பேர்க்கா அணிந்ததில்லை. இது மதத் தீவிரவாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு விடயம். எனவே அதை நாம் தடை செய்கிறோம்” என்கிறார் அமைச்சர் வீரசேகரா.

“இந் நாட்டில் 2,000 த்துக்கும் மேற்பட்ட மார்க்கப் பள்ளிகள் உள்ளன. இங்கு ஒருவர் ஒரு பள்ளிக்கூடத்தை ஆரம்பித்துவிட்டு தான் விரும்பியதைக் கற்பிக்க முடியாது. எல்லா பாடசாலைகளும் தேசிய கல்விக் கொள்கையையே பின்பற்ற வேண்டும். இதனால் 1,000 த்தும் மேற்பட்ட மார்க்கப் பள்ளிகளை நாம் மூடப் போகிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

பொது இடங்களில் முகக் கவசங்கள் அணிவதைத் தடை செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தை ஒரு மாதத்திற்கு முன்னரே தாம் கோரியிருந்ததாகவும், இது தேசிய பாதுகாப்பு சம்பந்தமான விடயமே தவிர ஒரு குறிக்கப்பட்ட சமூகத்தைக் குறிவைத்துச் செய்யப்படும் விடயமல்ல என நீதி அமைச்சர் அலி சப்றி தெரிவித்துள்ளார்.

பல மனித உரிமை அமைப்புகள் இத் தடைக்கு எதிராகக் குரல்கொடுத்து வருகின்றன. மத காரணங்களுக்காகப் பெண்கள் அணியும் கவசத்தைத் தடை செய்வது பெண்களை இலக்குவைத்துச் செயற்படும் ஒரு செயல் என சர்வதேச மன்ன்னிப்பு மையத்தின் தென்னாசியப் பணிப்பாளர் தினுஷிகா திசநாயக்கா தெரிவித்துள்ளார்.