இலங்கை மீது தடைகளை விதிக்குமாறு சீன உர நிறுவனம் சீன அரசுக்கு வலியுறுத்து
ஆப்பிழுத்த நிலையில் இலங்கை?
‘சீவின் பயோரெக்’ எனும் சீன நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்திருந்த இயற்கை உரத்தில் மண்ணுக்குக் கெடுதல் விளைவிக்கும் நுண்ணுயிர்கள் இருப்பதாகக் கூறி இலங்கை அரசு அதை நிராகரித்திருந்ததைத் தொடர்ந்து இப் பிரச்சினை இரு நாடுகளுக்குமிடையில் தற்போது பாரிய அரசியல் பிரச்சினையாக வெடித்துள்ளது.
இவ்வுரத்தின் தரத்தைப் பரிசோதிக்க முன்னரே விவசாய அமைச்சு அதற்கான இறக்குமதி ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டதுடன், அதன் கொடுப்பனவுக்காக சுமார் 6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான வங்கிப் பத்திரத்தை (letter of credit (LC)) மக்கள் வங்கி மூலம் அனுப்பியிருந்தது. பின்னர் இலங்கையின் தரக் கட்டுப்பாட்டு நிர்வாகம் இம்மண்ணைப் பரிசோதித்தபோது அதில் மண்ணுக்கும், ஏனைய தாவரங்களுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய பக்டீரியா இருப்பதாகக் கூறி இவ்விறக்குமதியை நிராகரித்திருந்தது. ஆனால் அதையும் மீறி ஒப்பந்தத்துக்கு அமைய, சீன நிறுவனம் விடாப்பிடியாக அந்த உரத்தைக் கப்பலில் ஏற்றி இலங்கைத் துறைமுகத்துக்கு அனுப்பிவிட்டது.

விவசாய அமைச்சின் முறையற்ற நடத்தையினால் நடந்த இந்த விபரீதத்திற்கு மாற்றீடாக, சம்பந்தப்பட்ட சீன நிறுவனம் இலங்கை மக்கள் வங்கி மீது சர்வதேச சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுத்திருந்தது. வழங்கப்பட்ட பத்திரத்துக்கான நடைமுறையை மதித்து வங்கி பணத்தை வழங்க வேண்டுமென அது நிர்ப்பந்தித்தது. வெளிநாட்டுச் செலாவணிப் பற்றாக்குறை இருந்தபோதும் வேறு வழியேதுமின்றி இணங்கப்பட்ட US6 மில்லியனைக் கொடுக்க இலங்கை அரசு சம்மதித்திருந்தது. ஆனால் இப்போது அச் சீன நிறுவனம் உரத்துக்கான முழுக் கொள்வனவுச் செலவையும் கொடுக்கவேண்டுமென இலங்கை அரசை நிர்ப்பந்தித்திருக்கிறது. அதைச் செலுத்த முடியாத பட்சத்தில் இலங்கை மீது சர்வதேச விதிகளின்படி தடைகளை விதிக்கும்படி அந் நிறுவனம் சீன அரசை வலியுறுத்தியுள்ளது.
இந் நிலையில் ஏற்கெனவே இறக்குமதிப் பண்டத் தட்டுப்பாடு, உள்நாட்டு உற்பத்திப் பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியேற்றம் போன்ற பல காரணங்களினால் பொருளாதார, அரசியல் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கும் இலங்கை ஆட்சியாளர் தாம் கடன் பெற்றிருக்கும் சீனாவுடன் முரண்பட வேண்டி ஏற்பட்டிருப்பது இலங்கையை மேலும் பேராபத்தான நிலைக்குள் தள்ளியிருக்கிறது என அஞ்சப்படுகிறது.
உரத்தையும் பெறாது அதற்கான முழுக் கொடுப்பனவையும் செய்யவேண்டி ஏற்பட்ட்டுள்ள நிலையில் சீன-இலங்கை அரசுகளுக்குள் ஏற்பட்டிருக்கும் இம் மோதல் நிலை அரசியல் ரீதியாக ஆட்சியாளர்களுக்கு மேலும் நெருக்கடியைக் கொண்டுவந்துள்ளது.
இதே வேளை, இவ்வுரத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்த சீன நிறுவனம் தனது பணத்தை மீட்டுக்கொள்ள சர்வதேச விதிகளைப் பாவீத்து இலங்கை மீது சட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருகிறது. இதன் மூலம் இலங்கைக்கு வேறு நாடுகள், நிறுவனங்கள் பண்டங்களை ஏற்றுமதி செய்வதில் பல தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அத்தோடு சீன அரசு இலங்கை மீது தடைகளை விதிக்குமானால் இலங்கையைப் பேராபத்து எதிர்நோக்கியிருக்கிறது என அவதானிகள் கருதுகின்றனர்.