இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் மாபெரும் ஊர்வலம்
ஐ.நா.மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானத்தில் இலங்கை மீது சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ளும் பொறிமுறைகள் உள்ளடக்கபடவேண்டுமெனக் கோரி மார்ச் 17, 2021 அன்று, யாழ்ப்பாணத்தில் மாபெரும் ஊர்வலமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பிரித்தானியாவின் தலைமையில் கொண்டுவரப்படும் இத் தீர்மானம் பலரின் எதிர்ப்பார்ப்பையும் மீறி, மிகவும் ஏமாற்றம் தருவதாக இருப்பதாக பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள், மற்றும் உலகம் பூராவுமுள்ள தமிழர் அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. மனித உரிமை ஆணியாளர் மிஷெல் பக்கெலெயின் அறிக்கையில் கூறப்பட்ட விடயங்களைக்கூட இத் தீர்மானம் உள்ளடக்கவில்லை. மாறாக, எதிர்காலத் தேவைகளுக்காக ஆதாரங்களைச் சேகரிக்க வேண்டும் என்பதே இத் தீர்மானத்தில் முன்வைக்கப்படுகிறது.
மனித உரிமைகள் சபைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வூர்வலத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் சமூகத் தலைவர்கள், மாணவர்கள் எனப் பலரும் பங்குபற்றியிருந்தனர். தலைகளில் கருப்புப் பட்டி, கருப்பு சேலைகளை அணிந்து பெரும்பாலான தாய்மார்கள் காணாமலாக்கப்பட்ட தங்கள் உறவினர்களது படங்களுடன் யாழ்ப்பாணத் தெருக்களில் நடந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையைப் பாரப்படுத்தக் கோரி அவர்கள் கோஷமெழுப்பினர்.