இலங்கை மீதான தீர்மானம் ஐ.நா.மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்படும் – மைய நாடுகள்


எதிர்வரும் ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 46 வது அமர்வில் இலங்கை மீதான தீர்மானமொன்றைச் சமர்ப்பிக்க மையநாடுகள் தயார் என அக் குழுவின் அங்கத்துவநாடுகளில் ஒன்றான பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இது குறித்து பிரித்தானியாவுக்கான ஐ.நா.வின் நிரந்தரப் பிரதிநிதி ஜூலியன் பிரெய்த்வெயிட் நேற்று (திங்கள்) மனித உரிமைகள சபைக்கு அறிவித்துள்ளார். பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொண்டிநீக்ரோ, வட மகெடோனியா ஆகிய நாடுகள் இக் குழுவில் அங்கம் வகிக்கின்றன.

இந்த வருடத்துக்கான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46 வது கூடலின் முதலாவது அமர்வு, பெப்ரவரி 22 முதல் மார்ச் 23 வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.

சமர்ப்பிக்கப்படவுள்ள இத் தீர்மானம் இலங்கை தொடர்பாக ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் தொடர்ச்சியாகவும், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை முன்னெடுத்தல் போன்ற விடயங்களை வலியுறுத்துவதாகவும், சமீபத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிஷெல் பக்கெலெயின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்குமெனெ பிரெத்வெயிட் தெரிவித்துள்ளார்.



போருக்குப் பின்னான நல்லிணக்க, பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் விடயத்தில் முந்தைய அரசாங்கம் மேற்கொண்ட சிறிய அளவிலான முயற்சிகளைக்கூட தற்போதய அரசாங்கம் பிந்தள்ளிவிட்டதெனவும், அதைவிட மேலதிகமான, மிக மோசமான வழிகளில் அது செல்கிறது எனவும் இக் காரணங்களுக்காக அங்கத்துவ நாடுகள் இலங்கை மீது மிகவும் விழிப்புடன் செயலாற்றவேண்டுமெனவும் ஆணையாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அத்தோடு போர்க்குற்றங்களைப் புரிந்தவர்கள் மீது சர்வதேச சட்ட வரம்புகளுக்கமைய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமெனவும் அவர் கேட்டுள்ளார்.

கடந்த அரசாங்கம் இணைந்து முன்மொழிந்த தீர்மானத்திலிருந்து தற்போதய ஆட்சியாளர் ஒருதலைப்படசமாக விலகியிருந்தாலும்,தகவற் பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டும்படி கோரி, ஆணையாளர் தனது அறிக்கையை இலங்கை அரசுக்கு சம்பிரதாயத்திற்காக அனுப்பியிருந்தார். இலங்கை அதற்கு பதிலேதும் கொடுக்கவில்லை என்பதோடு, மைய நாடுகள் தயாரிக்கும் தீர்மானத்தில் தமது பரிந்துரைகள் சேர்க்கப்படுமெனவும் எதிர்பார்த்திருந்தது. இந்நிலையில், தற்போது மையநாடுகள் தயாரித்திருக்கும் தீர்மானம் ஆணையாளரின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு வெளிவருமென அறிவிக்கப்பட்டுள்ளது.