NewsSri Lanka

இலங்கை: மார்ச்சில் பாராளுமன்றம் கலைக்கப்படலாம்?

பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிட முடிவு

பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டுப் புதிய தேர்தல்களை நடத்துவதற்கு சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளதாகவும் இந்தத் தடவை பங்காளிக் கட்சிகளை விட்டுவிட்டுத் தனியே தேர்தல்களை எதிர்கொள்ளவிருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

எதிர்க்கட்சிகள் இன்னும் தம்மைத் தயார் செய்துகொள்ளாத நிலையில் திடீர் தேர்தலை நடத்துவதற்கு பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச ஆலோசனை தெரிவித்திருந்ததாக சில நாட்களாகச் செய்திகள் வெளிவந்திருந்த நிலையில் தற்போது அது ஓரளவுக்கு உறுதி செய்யப்படும் நிலையிலுள்ளதென கொழும்பு சார்ந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தப்படி பெப்ரவரி 20ம் திகதிக்குப் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரமுண்டு எனவும் இதன் பிரகாரம் மார்ச் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்படலாமென உட்கட்சிவட்டாரங்கள் தெரிவித்ததாகத் தெரிகிறது.

இதை மனதில் வைத்துத்தான் கட்சி தனது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை கட்சி புனிதபூமியாகக் கருதும் அனுராதபுரத்தில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தது என ஊகம் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்க்கட்சியிலுள்ள பலர் எந்தவேளையும் கட்சி மாறக்கூடியவர்களாக இருப்பதால் அவர்கள் எந்தக்கட்சியில் வென்றாலும் அவர்களைத் தம்பக்கம் இழுக்கும் வல்லமை ராஜபக்சக்களுக்கு உண்டு எனவும் தேர்தல் முடிவுகள் எப்படியானதாக இருந்தாலும் பொதுஜன பெரமுன கட்சி ஆட்சியை அமைக்குமென அது நம்புவதாகவும் கூறப்படுகிறது.