Sri Lanka

இலங்கை: மாகாணசபை முறைமை ஒழிக்கப்படவேண்டும் – மிலிந்த மொறகொட

மாகாணசபைகளை ஒழித்துவிட்டு உள்ளூராட்சி, நகர, மாநகர சபைகளை வலுப்படுத்தவேண்டுமென இந்தியாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

“22 மில்லியன் மக்கள் தொகைக்கு மாகாணசபை நிர்வாகம் மேலதிக செலவுகளைத் தரும் ஒன்று. மாறாக உள்ளூராட்சி சபைகள் மக்களுடன் நெருக்கமாக இருந்து அவர்களது தேவைகளை அறிந்து செயற்படக் கூடியவை. எனவே அடுத்துவரும் தேசிய தேர்தல் விஞ்ஞாபனங்களில் அனைத்துக் கட்சிகளும் இவ்விடயத்தை முன்னிலைப்படுத்தும் நிலைப்பாடுகளை அறிவிக்கவேண்டும்” என மொறகொட கேட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரமும் ஆட்சி முறைமையும் நவீனமயப்படுத்தப்படவேண்டும் எனவும் இதற்காக மாகாணசபைகளை ஒழித்துவிட்டு மக்களை மையமாகக்கொண்டதும் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை அலுவலகங்கள், இதர பங்காளர்கள் ஒன்றிணைந்ததுமான ஒரு செயற்பாட்டு முறையை வரித்துக்கொள்ளவேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

“1987 இல் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கென மாகாணங்களுக்கான சுயாட்சியை அதிகரிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. ஆனால் இம்முறைமை செலவுகளை அதிகரிப்பதானதாகவும், வினைத்திறனற்றதாகவும், பிரிவுகளை வளர்ப்பதாகவும், பிரயோசனமில்லாத ஒன்றாகவும் இருக்கிறது. இதற்குப் பதிலாக மத, சிறுபான்மை, பிராந்திய பன்முகத்தன்மை ஆகியவற்றை மேற்பார்வை செய்யும் வகையில் மேல் சபை (செனட்) ஒன்றை உருவாக்கி அதற்கு அதிகாரங்களை வழங்குவது சிறந்தது. நாடு எதிர்கொள்ளும் சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பலமான மேல்சபை ஒன்றினால் தான் முடியும்” என மொறகொட மேலும் தெரிவித்தார். (Pic. Credit: Facebook)