இலங்கை மனித உரிமைகள் ஆணையம் ஐ.நா.வினால் தரமிறக்கப்பட்டது

தேசிய மனித உரிமைகள் ஆணையங்களின் சர்வதேச கூட்டமைப்பினால் (Global Alliance of National Human Rights Institutions (GANHRI)) இலங்கை மனித உரிமைகள் ஆணையம் ‘B’ தரத்திற்கு இறக்கப்பட்டுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. 1993 ‘பாரிஸ் பிரின்சிப்பல்ஸ்’ (Paris Principals (1993)) மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கிணங்க GANHRI ஒரு ஐ.நா. சபையின் அங்கமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.



இத் தரமிறக்கல் ஜூன் 2021 இல் நடைபெற்றிருந்ததாயினும் இப்போதுதான் அது பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கிறது. தரமிறக்கப்படுவது இலங்கை மனித உரிமைகள் ஆணையத்துக்கு இது இரண்டாவது தடவையாகும். 2007 இல் தரமிறக்கப்பட்டிருந்த இந்த அமைப்பை முந்தைய நல்லாட்சி அரசு ‘A’ தரத்துக்குக் கொண்டுவந்திருந்தது. ராஜபக்சக்களின், அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தம் இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் தரத்தைக் குறைத்துவிட்ட பின்னர் 19 ஆவது திருத்தத்தின் மூலம் அது தனது ‘A’ தரத்தை மீண்டும் பெற்றிருந்தது. ஆனாலும் 20 ஆவது திருத்தம் தை மீண்டும் ‘B’ தரத்துக்கு இறக்கிவிட்டிருக்கிறது.

“இவ்வமைப்பின் தனித்துவமும் செயற்திறனும் பாரிஸ் தத்துவங்களுக்கமைய இருக்கவில்லை. தடுப்புக்காவலில் நடைபெற்றனவெனக் கூறப்படும் மரணங்கள், சித்திரவதைகள் ஆகியன உட்பட்ட இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள்களை, அது உரிய முறையில் விசாரணை செய்ததோ அல்லது அவற்றைப்பற்றிப் பேசியதோ இல்லை. மனித உரிமைகளை முன்னெடுக்கும் அல்லது பாதுகாக்கும் வகையில் இவ்வமைப்பின் செயற்பாடுகள் இருக்கவில்லை. அத்தோடு ஐ.நா.மனித உரிமைகள் சபைக்கு அது தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கக்கூட இல்லை” என இத்தரமிறக்கலைச் செய்த அமைப்பான SCA தெரிவித்துள்ளது.