இலங்கை: மண்ணெண்ணை வாங்க வரிசையில் நின்ற வயோதிபர் மரணம்!

நேற்று (மார்ச் 19), மண்ணெண்ணை வாங்குவதற்கென பலமணி நேரம் வரிசையில் நின்ற வயோதிபர் ஒருவர் மரணமாகியுள்ளார்.

கண்டி பிரதேசத்திலுள்ள வத்தேகம என்னுமிடத்தைச் சேர்ந்த 71 வயதுடைய இம் முதியவர் சனி காலையிலிருந்து மண்ணெண்ணை வாங்குவதற்கென வரிசையில் நின்றிருந்தார் எனவும் பிற்பகல் அவர் மயக்கமடைந்து விழுந்தார் எனவும் பொலிஸ் பேச்சாளர் எஸ்.எஸ்.பி. நிஹால் தால்டுவ தெரிவித்துள்ளார்.

அங்கு நின்ற சிலரால் முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டதோடு பின்னர் மருத்துவமனைக்கு எடுத்துச்ச்செல்லப்பட்ட போதும் முதியவரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

எண்ணை மற்றும் அத்தியாவசிய பண்டங்களை வாங்குவதற்கு பணம் இல்லாமையால் நாடெங்கும் பண்டங்களின் விலைகள் அதிகரித்தும், அத்தியாவசியப் பண்டங்களுக்குத் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.

இதே வேளை கொழும்பு நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் தூண்டுதல் இல்லாமலேயே மக்கள் தாமாக வீதிப் போராட்டங்களில் இறங்கி வருகிறார்கள்.