World

இலங்கை போர்க்குற்ற விசாரணை தொடர்பில் பிரித்தானிய போர்க்குற்ற பொலிஸ் பிரிவு தகவல் கோருகிறது

2000 ஆம் ஆண்டுகளில் இலங்கை இனப்போர் மும்முரமாக இருந்த காலத்தில் புரியப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக பிரித்தானிய பயங்கரவாதத் தடுப்பு பொலிஸ் பிரிவு மேற்கொண்டு வரும் விசாரணைகளின் பெறுபேறாக இருவர் லண்டனில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இக்கைதுகளைத் தொடர்ந்து மேலதிக தகவல்களை அறிந்துவைத்திருப்பவர்களைத் தம்மோடு தொடர்புகொள்ளும்படி இப்பொலிஸ் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டம் 2001 இன் 51 ஆவது பிரிவின் பிரகாரம் கைதுசெய்யப்பட்ட இருவர் தற்போது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் “இப்படியான குற்றங்கள் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் ஆகியோரின் வாழ்வில் எப்படியான தாக்கத்தைக் கொண்டுவந்திருக்கும் என்பதை நாம் அறிந்துள்ளோம். இக்குற்றங்கள் எவ்வளவு மோசமானவை என்பதையும் அதை நாம் எவ்வளவு தீவிரமாகக் கையாண்டுவருகிறோம் என்பதையே இக்கைதுகள் காட்டுகின்றன” எனவும் இப் பொலிஸ்பிரிவின் கட்டளை அதிகாரி கொமாண்டர் டொமிநிக் மேர்ஃபி குறிப்பிட்டுள்ளார்.

“எல்லா முக்கியமான வழக்குகளிலும் போல ஒரு வழக்கை உறுதியாகக் கட்டியெழுப்ப எமக்கு நேரில் பார்த்த சாட்சியங்களே அவசியம். இலங்கை இனப்போரின்போது நடைபெற்ற மோசமான குற்றங்களை நேரில் கண்ட சாட்சிகள் பலர் உங்கள் மத்தியில் இருப்பின் தயவு செய்து முன்வாருங்கள். எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு எப்போதும் நாம் ஆதரவாக இருப்போம். உங்கள் அடையாளங்கள் எப்போதும் மிகவும் இரகசியமாகப் பாதுகாக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில், குறிப்பாக 2000 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் , வாழ்ந்தவர்களோ அல்லது அக்காலத்தில் இலங்கையில் வாழ்ந்து தற்போது வெளிநாடுகளுக்கு வந்துவிட்ட அவர்களது உறவினர், நண்பர்களோ பார்த்த, அறிந்த விடயங்களைத் தம்முடன் பகிர்ந்துகொள்ளும்படி இப் பொலிஸ் பிரிவு கேட்டுக்கொள்கிறது. தகவல்களைத் தர விரும்புபவர்கள் போர்க்குற்றப் பிரிவிற்கு நேரடியாக SO15Mailbox.WarCrimesTeam@met.police.uk. என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். அல்லது +44 (0)800 789 321 என்னும் தொலைபேசி இலக்கத்தில் இரகசியமாகத் தொடர்பு கொண்டு தகவல்களைத் தரமுடியும்.

கடந்த நவம்பர் 21, 2023 அன்று தென் லண்டனில் வசித்துவந்த 60 வயதுடைய ஒருவர் இப்போர்க்குற்றத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுப் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். 2001 இன் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரசியல் ஊர்வலம் ஒன்றின்போது இருவர் கொல்லப்பட்டமை தொடர்பாக இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பெப்ரவரி 2022 இல் இதே குற்றத்தில் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தில் 48 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தே இக்கைதும் நிகழ்ந்திருந்தது. 2000 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்கள் கொலைசெய்யப்பட்டமை தொடர்பாக இப்பொலிஸ் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளின் பெறுபேறாகவே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன. இவரும் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இவ்விரு கைதுகளும் 2017 இல் போர்க்குற்ற விசாரணை பொலிஸ் பிரிவிற்கு கொடுக்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்தே மேற்கொள்ளப்பட்டன. லண்டன் மெற்றோபொலிட்டன் பொலிஸின் பயங்கரவாதத்துக்கு எதிரான பிரிவினர் இவ்விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். போர்க்குற்றம், மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு உருவாக்கப்பட்ட இப்பிரிவு நாடு தழுவிய ரீதியில் செயற்பட்டு வருகிறது. இப்பிரிவு தொடர்பான தகவல்களைப் பெற https://www.cps.gov.uk/publication/war-crimescrimes-against-humanity-referral-guidelines என்ற இணைப்பை அழுத்தவும். இப்பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் உத்தியோகபூர்வ தமிழ் மொழிபெயர்ப்பைக் கீழே காணமுடியும்..