இலங்கை | பொதுப் பயன்பாடுகள் ஆணையத்தை மூட ஜனாதிபதி உத்தரவு – நிர்ப்பந்தத்தின் பேரில் ஆணையர் அனைவரும் பதவி விலகினர்
இலங்கையில் சில மின்சார வழங்கல் திட்டங்களைச் சீனாவிடம் கையளிப்பதற்காக ஜனாதிபதி கோதாபய திட்டமிட்டுள்ளதாகவும், பொதுப் பயன்பாடுகள் ஆணையம் (Public Utilities Commission (PUC)) இதற்கு ஆதரவளிக்காது என்பதனால் அவ்வாணையத்தின் ஐந்து ஆணையர்களையும் ஜனாதிபதியின் செயலாளர் மிரட்டிப் பதவிவிலகச் செய்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக பல அரசாங்க பா.உ.க்களும் அமைச்சர்களும் கடுமையான அதிருப்தியைத் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.
பொதுப் பயன்பாடுகள் ஆணையம், தேர்தல் ஆணையத்தைப் போலச் சுதந்திரமாக இயங்கி வந்தது. இலங்கையின் மின்வலு மற்றும் எரிசக்தி விடயங்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு இவ்வாணயத்துக்குண்டு. பேராசிரியர் கபில பெரேரா தலைமையில் 5 ஆணையர்கள் இதற்காக நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
இலங்கையில் பல மின்வலுத் திட்டங்களைச் சீனாவிடம் கையளிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகவும் அதற்குத் தடங்கலாக இந்த ஆணையம் இருக்குமென்பதால் அதைத் தன்னிச்சையாக மூடிவிட ஜனாதிபதி முயற்சித்தபோது சட்டம் அதற்கு இடம் கொடுக்காது என்பதனால் இவ்வாணையர்களைத் தாமாகவே பதவி விலகும்படி செயலாளர் பி.பி.ஜயசுந்தர மூலம் வற்புறுத்தியதாகவும் அதற்கு மறுக்கும் ஆணையர்கள் வேற்வழிகளில் பழிவாங்கப்படுவார்கள் என மிரட்டப்பட்டதால் அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக பதவி வில்கியுள்ளதாகவும் அறியப்படுகிறது.
ஜனாதிபதியின் இத் தன்னிச்சையான நடவடிக்கை அரசாங்கத்தில் பாரிய பிளவை உருவாக்கியுள்ளதாகவும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் பகிரங்கமாகக் குரலெழுப்ப ஆரம்பித்துள்ளார்கள் எனவும் அறியப்படுகிறது.
இந் நடவடிக்கை, ஏர்கெனவே நடைமுறையிலிருக்கும் பல திட்டங்களைக் குழப்பப் போகிறது எனவும் பல பாவனையாளர் திட்டங்கள் தடங்கலுக்குள்ளாகலாமென்றும் இதனால் இவ்வாட்சி மக்களிடையே கெட்ட பெயரை வாங்கப்போகிறது எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பகிரங்கமாகத் தன் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
இவ்வாணயத்துக்கு நேரடியாகப் பொறுப்புள்ளவரான மகிந்த ராஜபக்சவை மீறி ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கையை மகிந்த உடனடியாகத் தலையிட்டு நிறுத்தவேண்டுமென நாணயக்கார கேட்டுள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணையம் பதவியிலிருந்தால் சீனாவிடம் கையளிக்கப்படும் திட்டங்களில் வெளிப்படைத் தன்மை பேணப்படவேண்டி வரும் என்பதால் அந்த ஆணையத்தை மூடிவிட ஜனாதிபதி முடிவெடுதிருந்தார் எனவும் அது இலகுவான விடயமல்ல என்பதை அறிந்த அவர் ஆணையர்களைப் பதவி விலகும்படி தனது செயலாளர் மூலம் அச்சுறுத்தியிருந்தார் எனவும் பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கை மின்சாரசபை அதிகாரி ஒருவர் கூறியதாக கொலொம்பொ ரெலிகிராஃப் செய்தி வெளியிட்டுள்ளது.
2002 இல் உருவாக்கப்பட்ட இவ் பொதுப் பயன்பாட்டு ஆணயம், நாட்டின் எரிபொருள், மின்வலு, நீர் வழங்கல் ஆகியவற்றின் விநியோகம் பொருளாதார, விலை நிர்ணய, தகராறு தவிர்ப்பு தொடர்பான விடயங்களைக் கவனித்து வந்தது.