இலங்கை: பிளவுபடும் சட்டத்தரணிகள் சங்கம் (BASL)

பெரும்பாலானோர் அவசரகாலப் பிரகடனத்துக்கு ஆதரவு

கோதாகோகம ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்தது முதல் இளைஞர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவந்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (Bar Association of Sri Lanka (BASL)) ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்ததும் தனது ஆதரவை விக்கிரமசிங்க பக்கம் மாற்றிக் கொண்டுவிட்டது. அரகாலயர்களது கோரிக்கையான கோதாவை வீட்டுக்கு அனுப்புதல் நிறைவேறிவிட்டது என்பதால் அடுத்து வந்த ரணிலிந் ஆட்சிக்கு 6 மாதங்களாவது சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என்பது சட்டத்தரணிகள் சங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு. முந்தைய காலங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது அதை வன்மையாகக் கண்டித்துவந்த சங்கம் ரணில் விக்கிரமசிங்கவின் அவசரகாலப் பிரகடனத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதனால் அரகாலயர்களுக்கும் சட்டத்தரணிகள் சங்கத்துக்குமிடையேயான கசப்பு முற்றி வருகிறது.

இதன் விளைவாக இச் சங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்த்து இளைய சட்டத்தரணிகள் பலர் குரலெழுப்பி வருகின்றனர். ரணில் விக்கிரமசிங்கவின் வருகை ராஜபக்சக்களையும் அவர்களது ஊழல் கோஷ்டிகளையும் காப்பாற்றுவதே நோக்கம் அல்லாது நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது அல்ல என்பது அவர்களது வாதம். இவ்விளைய சட்டத்தரணிகள் அரகாலயா போராட்டங்களுக்குப் பின்னணியில் இருக்கும் முன்நிலை சோசலிசக் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துவருவதால் சங்கத்தில் பிளவு ஏற்படும் நிலை தோன்றியுள்ளது.

காலிமுகத்திடலில் அமைக்கப்பட்ட முகாம்களையும் வாடி வீடுகளையும் அகற்றும்படி கோட்டை பொலிசார் விடுத்த கட்டளைகளை நிறைவேற்றப்போவதில்லை எனவும் அவர்கள் என்ன நடவடிக்கைகளை எடுத்தாலும் தாம் அவற்றை எதிர்கொள்ளத் தயார் எனவும் முந்னிலை சோசசக் கட்சிக்கு ஆதரவான சட்டத்தரணி நுவான் போபகே தெரிவித்துள்ளார்.