இலங்கை | பிரதான எதிர்க்கட்சி தனியான பாராளுமன்ற அமர்வு!
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாம்
டிசம்பர் 3 அன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின்போது எதிர்க்கட்சி பா.உ. மனுஷா நாணயக்காரவிற்கும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்குமிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக மக்கள் சக்தி உறுப்பினர்கள் பாராளுமன்ற அமர்வைப் புறக்கணித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று (06), பாராளுமன்ற வரவேற்புக்கூடத்தில் ஆர்ப்பட்டத்தை முடித்துக்கொண்டு கட்சியின் தலைமை அலுவலகத்தில் தனியான பாராளுமன்ற அமர்வு ஒன்றை அரங்கேற்றியுள்ளர்.

டிசம்பர் 3 அன்று தான் பேசுவதற்கு அதிக நேரம் கேட்டு பா.உ. மனுஷா நாணயக்கார, சபாநாயகரின் மேசைக்குச் செல்லும்போது எழுந்த வாய்த் தர்க்கத்தைத் தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குமிடையில் தகராறு முற்றியிருந்தது. மறுநாள் (டிசம்பர் 04) அன்றும் உறுப்பினர் நாணயக்காரவுக்கும் ராஜாங்க அமைச்சர் காஞ்சனா விஜேசேகரவிற்குமிடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டது.
இச்சம்பவங்களைத் தொடர்ந்து தமக்குப் போதிய பாதுகாப்பு தந்தாலேயன்றித் தாம் அமர்வுகளில் கலந்துகொள்ளப் போவதில்லை என ஜனநாயக மக்கள் சக்தி உறுப்பினர்கள் அமர்வுகளிப் புறக்கணித்து பாராளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
இதே வேளை பாராளுமன்ற மண்டபத்தினுள் பாதுகாப்பு இல்லை எனக்கூறுபவர்கள் பாராளுமன்ற உணவுச் சாலையில் எந்தவித அசாமுமில்லாமல் இருந்து உணவு உண்கின்றனர் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கிண்டலடித்துள்ளார்.
நேற்று தலைமையகத்தில் மேற்கொண்ட பிரதான எதிர்க்கட்சியின் தனியான பாராளுமன்ற அமர்வு சமூக ப்வலைத் தளங்கள் மூலம் ஒளிபரப்பட்டிருந்தது.