NewsSri Lanka

இலங்கை | பிரதமர் தவிர்ந்த அனைத்து அமைச்சர்களும் பதவி விலகினர்!

  • மஹிந்த ராஜபக்சவின் பதவி விலகல் கோரிக்கையை ஜனாதிபதி மறுத்துவிட்டார்
  • இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படலாம்?
  • ட்ல்லஸ் அழகப்பெருமா இடைக்கால அரசாங்கத்தில் பிரதமாராகலாம்?
  • ராஜபக்ச குடும்பத்தினர் எவருக்கும் இடைக்கால அரசில் அமைச்சுப்பதவிகள் வழங்கப்பட மாட்டாது?

தொடரும் மக்கள் எழுச்சியின் விளைவாக பிரதமரைத் தவிர்ந்த இலங்கை அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களும் கூட்டாகப் பதவி விலகியுள்ளனர். அனைத்து அமைச்சர்களும் ஒரே கடிதத்தில் கையெழுத்திட்டு தமது பதவி விலகல் கோரிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்ததாகவும் அதை அவர் அங்கீகரித்துவிட்டதாகவும் தெரிகிறது. பிரதமர் ராஜபக்ச தனது பதவியிலிருந்து விலகிவிட்டதாக நேற்று வெளியான செய்தி பின்னர் பொய்யானதெனெக் கூறப்பட்டாலும் அவர்ரும் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருந்தார் எனவும் ஆனால் ஜனாதிபதி அதை ஏற்க மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது.

தற்போதுள்ள சூழ்நிலையில் இடைக்கால அரசாங்கம் ஒன்றே அவசியமானது என வீரவன்ச அணியிலுள்ள, சுதந்திரக் கடசி உட்பட்ட, அனைத்து உறுப்பினர்களும் கேட்டிருந்தார்கள் எனவும் பிரதமரும் ஜனாதிபதியும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் ஆளும் கூட்டணியிலிருந்து விலகுவது பற்றிய முடிவை சுதந்திரக்கட்சி நாளை எடுக்கவிருப்பதாகவும் இன்னுமொரு செய்தி குறிப்பிடுகிறது.

இதே வேளை சமூக ஊடகங்களைத் தடைசெய்ய பாதுகாப்பு அமைச்சு எடுத்த முடிவுக்கு எதிராக அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது எதிர்ப்பைத் தெரிவித்ததிலிருந்து நாமல் ராஜபக்சவுக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குமிடையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இப் பதவி விலகலை ஆரம்பித்து வைத்ததும் நாமல் ராஜபக்ச எனக் கூறப்படுகிறது.

இடைக்காலப் பிரதமராக டல்லஸ் அளகப்பெருமா?

இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டால் அதில் ராஜபக்ச குடும்பத்தினர் எவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படமாட்டாது என அறியப்படுகிறது. இதே வேளை 20 ஆவது திருத்தத்தின் கீழ் அதிகாரங்களைக் குவித்துவைத்துக்கொண்டிருக்கும் ஜனாதிபதியின் கீழான எந்தவொரு நிர்வாகத்திலும் தாம் கலந்துகொள்ளப் போவதில்லை என சஜித் பிரேமதாச தலைமையிலான சமாகி ஜன பலவேகய கட்சி த்ரிவித்துள்ளது.