Columnsமாயமான்

இலங்கை பாராளுமன்ற தேர்தல்கள்: தேசமாகப் பிரள்வோம்

அலை மீண்டும் கடலை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. கரையேற்றப்பட்டவர்களினதும் காவுகொண்டவர்களினதும் தலைகள் மெதுவாகப் புலப்பட ஆரம்பிக்கின்றன. சில எதிர்பார்க்கப்பட்டவை, சில அதிர்ச்சியைத் தருபவை. (இறுதி முடிவுகள்: NPP = 159, ITAK = 8)

மிக நீண்டகாலமாகக் கொள்ளையர் கூடாரமாக இருந்த நாட்டுக்கு ஒரு விடிவு கிடைத்திருக்கிறது என்பது உண்மை. அந்த வகையில் அதை பெற்றுத்தந்த அநுரா குழுவினருக்கு மக்கள் நன்றி சொல்லத்தான் வேண்டும். அந்த மக்களில் தமிழ் பேசும் மக்களும் இடம்பெறுவார்களா என்பதை அறிய இன்னும் சில காலம் பொறுத்தாகவேண்டும்.


அநுர குழு அதிர்ஷ்டம் செய்தது. சுனாமிக்குக் காரணமான அரகாலயா தோழர்கள் தான் பாவம். 2019 ஜனாதிபதி தேர்தலில் 3% வாக்குகளைப் பெற்ற அநுர, 2020 பாராளுமன்றத் தேர்தலில் இரண்டு ஆசனங்களை மட்டுமே பெற்ற ஜே.வி.பி இப்போது ஆட்சியயைக் கைப்பற்றியிருக்கிறதென்றால் அது ஒரு பாரிய மாற்றம். அரகாலயா அதை முடுக்கி வைத்தாலும் அம் மாற்றத்தை லாவகமாகவும் சாமர்த்தியமாகவும் நகர்த்தி இந்த வெற்றியைப் பெற்றமைக்கு ஜே.வி.பி.யினருக்கு வாழ்த்துக்கள்.

இரண்டு புரட்சிப் போர்களில் படுதோல்வியடைந்து, பெரும் உயிரிழப்புகளைச் சந்தித்தபின் ஜனநாயக ஓட்டத்தில் இணைந்து அவ்வோட்டத்தைப் பேரலையாக்கி ஆட்சியைக் கைப்பற்றிய அநுர குழு பாராட்டுக்குரியது. இதற்காக அவர்கள் ஈஸ்டர் குண்டுவெடிப்பை நிகழ்த்தியோ அல்லது இனத்துவேஷத்தைக் கிளப்பியோ, முஸ்லிம் மக்கள் மீது பிக்குகளைக் கொண்டு தாக்குதல்கள் நிகழ்த்தியோ மக்களை உசுப்பேத்தி வெற்றியை ஈட்டவில்லை. எந்தவித அசம்பாவிதமும் இல்லாமால், எந்த மேடைகளிலும் தமது ஈன நிலைக்கு இதர இனங்களே காரணம் எனத் திட்டாமல் முந்தைய ஆட்சியினரை மட்டும் அமைதியாக விமர்சித்து இம்மாற்றத்தை நாகரிகமாகச் செய்து முடித்திருக்கிறார்கள். அவர்களது இச்செயல்முறையிலிருந்து தமிழர்கள் கற்றுக்கொள்ள நிறையவிருக்கிறது.

ஆனாலும் ஒரு சிறு மாற்றம். வழமையாக தென்னிலங்கையில் நடைபெறும் அநாகரிக கீழ்த்தரமான அரசியல் இத்தடவை வடக்கிற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதைச் செய்தவர்கள் தமிழர்கள் மட்டுமே. தமிழர்களின் தளபதி சுமந்திரனை இறக்கிவிட்டுப் பைத்தியமொன்றைப் பல்லக்கில் வைத்து அனுப்புகிறார்கள். சிங்கக் கொடியின் கீழ் நின்று சத்தியப்பிரமாணம் எடுக்கமாட்டேன் என்ற இன்னுமொரு பைத்தியம் பாராளுமன்றத்தில் அதே கொடியின் கீழ் எதைப் புலம்பப்போகிறது எனத் தெரியவில்லை. இவர்களை நன்றாக அடையாளம் கண்ட பின்னரும் இவர்களுக்கு வாக்களித்து அனுப்பும் யாழ்ப்பாணத்து மக்களும் இவர்கள் ரகமெனவே கொள்ள வேண்டும்.

இவர்களை விட சங்கூதிகளின் அட்டகாசம் தாங்க முடியாது. வெளிநாட்டுப் பணமோகத்தில் விபச்சாரத்தில் இறங்கியவர்கள் இப்போது நிரந்தரமாகவே தெரூக்குக் கொண்டுவரப்பட்டு விட்டார்கள். பாஸ்கரர்கள் இவர்களுக்குத் தொடர்ந்தும் இறைக்கப் போவதில்லை. பாவம். அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்ட நிலை.

வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி எனக்கு ஒருகாலத்தில் மிகையான ஆர்வமிருந்தது. இத்தேர்தலின் பின்னர் அவ்வார்வம் குறைந்துவிட்டது. என்ன இருந்தாலும் கிழக்கு மாகாண மக்கள் தாம் தனித்துவமானவர்கள் என்பதை நிரூபித்துவிட்டார்கள். அது ஜயந்தன் படையணியாகவிருந்தாலென்ன சாணக்கியன் படையணியாகவிருந்தாலென்ன விளைந்தது வீர மண் என்பதை நிரூபித்துவிட்டார்கள். வடக்கினால் அது மாசுபடக்கூடாது.

கூழங்கைச் சக்கரவர்த்தி காலத்திலிருந்தே வடக்கின் நிலை இதுதான். பொறாமை, காட்டிக்கொடுப்பு ஆகியவற்றின் விளைநிலம் இது. இந்தத் தேர்தலில் சுமந்திரன் வென்றுவிடக்கூடாது என்பதற்காக அவரது கட்சியைச் சேர்ந்தவர்களே மாடாக உழைத்தார்கள். இந்த நண்டுக்கலாச்சாரம் எங்கும் போய்விடப் போவதில்லை.

இந்தத் தடவை யாழ்ப்பாணம் ஆளும் கட்சியின் மூன்று உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்பியிருக்கிறது. மலையகம் உட்பட மூன்று தமிழ்ப் பெண்களை பாராளுமன்றம் அனுப்பியிருக்கிறது. மக்களின் தேவைகளை இவர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்று நம்பலாம். தெரிந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும், உதவிகள் செய்தவர்களுக்கும் வேலைகள் கிடைக்கலாம். லைசென்ஸ்கள் கிடைக்கலாம். அவரவர் ஒழுங்கைகள் இருவழித் தெருக்களாக மாறலாம். தேவையற்ற மண் கும்பிகளைத் தெற்கிற்கு அனுப்பலாம். இவையெல்லாம் அப்பிரதிநிதிகளின் அடுத்த தவணையையும் உறுதி செய்யும். ஆனால் காணி விடுவிப்பு, விகாரைகள் விஸ்தரிப்பு, இராணுவக் குறைப்பு என்பவற்றில் இவர்களால் என்ன செய்யமுடியும் என்பதில் தான் இம்மாற்றம் கொண்டாடப்படவேண்டியதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க முடியும்.

அநுர குழு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றம் செல்கிறது. ஏற்கெனவே பிரகடனம் செய்தது போல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க இது அருமையான சந்தர்ப்பம். அதே வேளை புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கவும் இது வழிவகுக்கும். இதனால் ஏற்கெனவே அரசியலமைப்பில் ஒரு அங்கமாக இருக்கும் 13 ஆவது திருத்தம் காணாமாலாக்கப்படவும் சந்தர்ப்பமுண்டு. தமிழர்களுக்கு மிகவும் சாதகமான அரசியமைப்புச் சட்டத்தை உருவாக்கிய நீலன் திருச்செல்வம் தமிழர்களாலேயே கொல்லப்பட்டது போல இப்போதைக்கு எம்மத்தியில் இருக்ககூடிய அரசியலமைப்பு சட்ட நிபுணர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களும் அரசியல் கொலைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார். செல்வம் அடைக்கலநாதன், அருச்சுனா போன்றோர் இச்சட்ட உருவாக்கத்தில் கைகொடுத்தால் அது தமிழர்கள் செய்த பாக்கியமெனவும் சிலர் கூறலாம்.

தான் தேர்தலில் தோற்றால் தேசியப் பட்டியல் மூலம் உறுப்பினராக வரமாட்டேன் என்பதை சுமந்திரன் உறுதியாகத் தெரிவித்திருந்தார். அவர் மானஸ்தர். அவரது முடிவை நான் வரவேற்கிறேன். 2010 இல் அவரை அரசியலுக்குள் சம்பந்தன் ஐயா இழுத்து வருவதற்கு முன்னர் அவரது தொழில் ஓஹோ என்றிருந்தது. இலங்கை காவற்படைகளின் நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்ட பல அப்பாவித் தமிழர்களின் வழக்குகளை அவர் இலவசமாகப் (pro bono) பேசியிருந்தார். பல தமிழ்க் கைதிகளை விடுவித்திருந்தார். நட்புக்காக பல சக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் வழக்குகளிலும் இலவசமாகப் பேசியிருந்தார். ஆனால் அவர்களே சுமந்திரனின் கால்களுக்குக் கீழ் குழிபறித்து விழுத்தியிருக்கிறார்கள். அரசியலிலிருந்து ஒதுங்கும்படி அவரது குடும்பம் வற்புறுத்தியிருந்தும் அவர் தமிழருக்காக உழைத்து வந்தார். அவரது கைகளும் பைகளும் சுத்தம் அதற்காகவே அவர் பழிவாங்கப்பட்டார். அனுர உடபடப் பல சிங்கள் அரசியல்வாதிகள் சுமந்திரன் மீது நல்மதிப்பு வைத்திருக்கிறார்கள். சில வேளைகளில் அவரது ஆலோசனை அவர்களுக்குத் தொடர்ந்தும் தேவைப்படலாம். அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் அவரை மீண்டும் இணைத்துக்கொள்ள முயற்சிக்கலாம். இவ்விடத்தில் ஒரே ஒரு வேண்டுகோள். தயவு செய்து தமிழருக்காக என pro bono எதுவும் பேசிவிடாதீர்கள். இரண்டு யூ-ரியூப்களைப் பார்த்தவுடன் வெளிநாட்டுக் காசுகளை இறைக்க நிறைய பைத்தியங்கள் தயாராக இருக்கின்றன. The destiny of Tamils’ is in their own hands. You are still No.1. Your future is blessed. So long.

இந்தத் தேர்தல் இரண்டு உண்மைகளைத் தமிழருக்கு அறைந்து சொல்லியிருக்கிறது. ஒன்று: தமிழரசுக்கட்சிக்கு 8 ஆசனங்கள் கிடைத்தமை மூலம் கட்சியை எந்த பாஸ்கரர் பணமூட்டைகளாலும் சிதைக்க முடியாது என்பதையும் இரண்டு: தமிழ்த் தேசியத்தின் காவலர்கள் எனக் கூறிக்கொள்பவர்களாலேயே அது விரைவில் அழிக்கப்படலாம் என்ற எச்சரிக்கையும் தந்து செல்கிறது.