Sri Lanka

இலங்கை பாராளுமன்றத் தேர்தல்: SJB-UNP கட்சிகளிடையேயான பேச்சுவார்த்தை முறிவு

நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு SJB-UNP கட்சித் தலைவர்கள் எடுத்த இறுதி முயற்சியும் தோல்வியடைந்துவிட்டதென அறியப்படுகிறது. இதன் காரணமாக நாளை (04) அன்று ஆரம்பமாகும் வேட்பாளர் மனுத் தாக்கலின்போது SJB கட்சி தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளதாக அறியப்படுகிறது.

இணைந்து போட்டியிடுவதற்கான முயற்சிகளில் SJB கட்சி அதன் பொதுச் செயலாளர் றஞ்சித் மட்டுமபண்டார தலைமையிலும் UNP கட்சி அதன் உப தலைவர் றுவான் விஜயவர்த்தனவின் தலைமையிலும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தனர் எனவும் நேற்று, இப்பேச்சுவார்த்தை ஓரளவு முற்றுப்பெற்று இரு தரப்பும் இணக்கம் காணப்படும் நிலையில் இருந்தது என SJB பேச்சாளர் இம்தியாஸ் பகீர் மார்க்கார் தெரிவித்திருக்கிறார்.


இப்பேச்சுவார்த்தையின்போது UNP கட்சியின் தலைவராக ருவான் விஜயவர்த்தனவை நியமிக்கவேண்டுமெனவும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மூத்த தலைவர் பதவியை வழங்கவேண்டுமென்றும் SJB கேட்டிருந்தது. இதற்கு இரு தரப்பினரும் இணக்கம் காட்டியிருந்தாலும் இறுதி நேரத்தில் ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு பேச்சுவார்த்தைகளை முறித்துக்கொண்டு விட்டதாகவும் மார்க்கார் தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததும் அதில் விக்கிரமசிங்கவை ஆதரித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சஜித் பிரேமதாசாவை பிரதமராக ஆக்கும் முயற்சியில் அவரை ஆதரிக்கத் தயாராகின்றனர் என செப்டம்பர் 27 அன்று முன்னாள் ஆளுனர் நவின் திசநாயக்கா கூறியிருந்தார். இந்நிலையில் இருதரப்பினரிடையேயும் இணக்கப்பாடு ஏற்படுவது சாத்தியமில்லை என மார்க்கார் கூறியுள்ளார்.

இதே வேளை அக்டோபர் 11 மதியத்திற்கு முன்னர் 22 மாவட்டங்களிலுமுள்ள தேர்தல் அலுவலகங்களில் வேட்பாளர் மனுத் தாக்கல் நடைபெற்று முடிந்திருக்கவேண்டும் என தேர்தல் அலுவலகம் அறிவித்துள்ளது. (Image Credit: Ada Derana)