இலங்கை பாராளுமன்றத்தில் அமர்க்களம் – தோற்றுப்போன எதிர்க்கட்சிகள்!
- ரணில், மைத்திரிகளின் கபட நாடகங்கள் அம்பலம்
- 148 பா.உ.க்கள் ராஜபக்சக்களுக்கு ஆதரவு
- அரசுக்கு ஆதரவாக ரணில், மைத்திரி பிரச்சாரம்
- 65 பா.உக்கள் மட்டுமே எதிர்க்கட்சிக்கு ஆதரவு
உப சபாநாயகரை நியமிப்பதற்காக நேற்று (மே 05) பாராளுமன்றத்தில் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பின்போது அரசு சார்பான வேட்பாளர் ரஞ்சித் சியம்பலப்பிட்டியாவுக்கு ஆதரவாக 148 வாக்குகளும் எதிர்க்கட்சி சமாகி ஜனபலவேகய கட்சி வேட்பாளரான இம்தியாஸ் மரிக்காருக்கு ஆதரவாக 65 வாக்குகளும் கிடைத்து சியம்பலப்பிட்டிய மீண்டும் உபசபாநாயகராகத் தெரிவாகியுள்ளார்.
இந்த நடிகர்களும், கள்ளர்களும், பொய்யர்களும் ஒருபோதும் ராஜபக்சக்களுக்கு எதிராக வாக்களிக்கப் போவதில்லை
பா.உ. சாணக்கியன் ராசமாணிக்கம்
சில நாட்களுக்கு முன்னர் உபசபாநாயகராக நியமனம் பெற்றிருந்த சியம்பலப்பிட்டிய ராஜபக்சக்கள் மீது பொதுமக்கள் காட்டும் அதிருப்தி காரணமாகத் தனது பதவியைத் துறந்திருந்தார். இருப்பினும் மனம் மாறிய நிலையில், மீண்டுமொரு தடவை அவர் இப் பதவிக்குப் போட்டியிட்ட நிலையில் 148 பா.உ.க்களின் ஆதரவுடன் மீண்டும் உபசபாநாயகராகத் தெரிவாகியுள்ளார். அரசிலிருந்து விலகியிருந்த சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிரிசேன, இந்தத் தடவை ராஜபக்ச தரப்பைச் சேர்ந்த பா.உ. சியம்பலப்பிட்டியவை இப்பதவிக்கு முன்மொழிந்திருந்ததுமல்லாது அவருக்கு ஆதரவாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் ஆதரவு தேடிப் பிரச்சாரமும் செய்திருந்தார். அது மட்டுமல்லாது முன்னள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமாகிய ரணில் விக்கிரமசிங்கவும் அரசுக்கு ஆதரவாகப் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தாரென அறியப்படுகிறது. இறுதியில் எதிர்க்கட்சி வேட்பாளரான மரிக்காருக்கு 65 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த த.தே.கூ. பா.உ. சாணக்கியன் ராசமாணிக்கம் “இன்று இலங்கை மக்களுடன் ஆக 65 பாராளுமன்ற உறுப்பினர்களே நிற்கின்றனர். பாராளுமன்றத்தில் அரங்கேற்றப்பட்டுவரும் நாடகத்தின் திரை இன்று நீக்கப்பட்டு உண்மையான நடிகர்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாகப் பல உறுப்பினர்களை அணுகி சியம்பலப்பிட்டியவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுப் பிரச்சரம் செய்திருந்தார் எனவும், முன்னாள் ஜனாதிபதி சிரீசேன, சியம்பலப்பிட்டியாவைப் பிரேரித்திருந்தமைக்காகவும் சாணக்கியன் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இவ்விருவரும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்தும் ஆதரவைக் கொடுத்து ராஜபக்சக்களைக் காப்பாற்றுவதில் மும்முரமாக உழைத்து வருகிறார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“தற்போதுள்ள நிலையில் அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் உள்ளிட்ட எந்த பிரேரணைகள் முனைக்கப்பட்டாலும் அவை தோற்கடிக்கப்படும் என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த நடிகர்களும், கள்ளர்களும், பொய்யர்களும் ஒருபோதும் ராஜபக்சக்களுக்கு எதிராக வாக்களிக்கப் போவதில்லை” என சாணக்கியன் மேலும் தெரிவித்தார்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சி பா.உ. முஜிபுர் ரஹ்மான் ” பல உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுடன் தம்மை அடையாளம் காட்டிவந்திருந்தாலும் அவர்கள் எப்போதும் அரசாங்கத்துக்கே ஆதரவளித்து வந்திருக்கிறார்கள். ராஜபக்சக்களைத் தொடர்ந்தும் காப்பாற்றிவரும் இவர்களைப் பற்றி மக்கள் அறிந்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.