இலங்கை: பாடசாலை மாணவர்களுக்கு மதிய போசனம் வழங்கும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு

மொத்தம் 5367 மாணவர்களைப் பராமரிக்கிறது

இலங்கையில் தொடரும் அரசியல் , பொருளாதாரச் சீரழிவுகளால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். கடந்த 70 வருட காலத்தில் இப்போதுதான் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது (Forbes 07/07/2022). யூனிசெஃப் அமைப்பின் கணிப்புப்படி இலங்கையிலுள்ள குழந்தைகளில் அரைவாசிக்கும் மேலானோர் மனைதாபிமான உதவி பெறும் நிலையில் உள்ளனரென அறியப்படுகிறது.

இலங்கையின் சமகாலப் பிரச்சினைகளுக்கு முன்னதாகவே உலகின் போசாக்கு குறைவான 5 வயதுக்குக் குறைவான குழந்தைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை ஏழாவதாகவும் தென்னாசியாவில் இரண்டாவதாகவும் இருந்தது. ஐந்து குழந்தைகளில் இரண்டு பேராவது மிகக்குறைந்த உணவைத்தானும் பெறுபவர்களாக இருக்கவில்லை. இந் நிலையில் இந்த வருடம் ஜனவரி முதல் அரசாங்கத்தினால் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டு வந்த மாதத்துக்கு 30 ரூபா வரையிலான ஊட்டச்சத்து வழங்கல் நிறுத்தப்பட்டிருக்கிறது.

இதுவே நாட்டின் சராசரி நிலமையாக இருந்தால் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்களின் நிலை பற்றிக் கூறத் தேவையில்லை. பாடசாலைகளுக்குச் செல்லும் பருவத்துக்கு முந்திய குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைவாக இருக்கும்போது பின் வயதுகளில் அவர்களது அறிவு வளர்ச்சியில் பாதிப்பும் கற்கைக் குறைபாடும் ஏற்படும் சாத்தியங்கள் உண்டெனப் பல ஆய்வுகள் கூறுகின்றன.

மாணவர்களின் இப்பரிதாப நிலையை அறிந்த அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (அமெரிக்கா) இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் பாடசாலை செல்லும் குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு ஒரு தடவை ஊட்டச்சத்துள்ள உணவை வழங்கிவருகிறது. இதுவரை வடக்கில் 3017 பேரும், கிழக்கில் 423 பேரும், மலையகத்தில் 1935 பேருமென மொத்தம் 5367 பேருக்கு அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO-USA) உணவளித்து வருகிறது. இதற்கான செலவு நாளொன்றுக்கு $1,000 மட்டுமே.

அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் இத் திட்டத்துக்கு உதவி புரிய விரும்புவோர் theimho.org/donation/ என்ற இணையமுகவரிக்குச் சென்று உரிய நன்கொடையைச் செலுத்திக்கொள்ளலாம்.