NewsSri Lanka

இலங்கை: பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தயார் – அடுத்த மாதம் வர்த்தமானி அறிவிப்பு?

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றின் நிபந்தனைகளுக்கிணங்க தற்போது நடைமுறையிலிருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற புதிய சட்டமொன்றை நடைமுறைப்படுத்த இலங்கை அரசு தயாராகி வருகிறது என அறியப்படுகிறது.

1978 இல் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்திலிருக்கும் மோசமான அம்சங்களைச் சாதகமாகப் பாவித்து பொலிசார் சந்தேகத்தின் பேரில் பலரைக் கைதுசெய்து நீண்ட காலமமாகத் தடுப்புக்காவலில் வைத்திருக்கின்றனர். இச்சட்டத்தை முற்றாக நீக்கிவிடும்படி பல உள்நாட்டு மனித உரிமைகள் செயற்பாட்டுக் குழுக்களும், தமிழ்த் தலைலைவர்களும், ஐ.நா. , ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக மனித உரிமை அமைப்புகளும் இலங்கை அரசாங்கங்களைத் தொடர்ச்சியாக வலியுறித்தி வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் ஆடை ஏற்றுமதிகளுக்கு அளித்துவரும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நிறுத்திவிடப்போவதாக எச்சரித்தும் வந்தது. இதற்காக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (Counter Terrorsm Act (CTA)) என்னும் புதியதொரு சட்டம் 2016, 2019 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது. ஆனால் 2019 இல் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் இப்புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நிறுத்தி விட்டன.

பயங்கரவாதத் தடைச்சட்டம் மோசமான பல அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்பதை ஒத்துக்கொண்ட தற்போதைய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அதை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக ஏற்கெனவே கிடப்பில் போடப்பட்டிருந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளார். இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியிருப்பதாகவும் மார்ச் மாத முடிவிற்குள் அது நடைமுறைக்கு வருவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் நீதியமைச்சின் மேலதிகச் செயலாளர் றோஹன் ஹப்புகஸ்வத்தையை மேற்கோள்காட்டி தி சண்டே மோர்ணிங் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.