இலங்கை: பயங்கரவாதத் தடைச்சட்ட திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேறியது

  • சந்தேகநபர்கள் தமது தடுப்புக்காவலுக்கு எதிராக வழக்குப் பதியலாம்
  • மாஜிஸ்திரேட் சந்தேகநபரைச் சிறையில் சென்று சந்திக்க வேண்டும்
  • வழக்கறிஞரை அமர்த்தும் உரிமை சந்தேக நபருக்கு வழஙகப்படவேண்டும்

பயங்கரவாதத் தடைச்சட்டத் திருத்தச் சட்டமூலம் 51 பெரும்பான்மை வாக்குகளால் இன்று (23) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அளிக்கப்பட்ட மொத்த 86 வாக்குகளில் 35, சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சமாகி ஜன பலவேகய, ஜே.வி.பி. ஆகிய கட்சிகள் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்திருந்தன.

நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.

பெப்ரவரி 10 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸினால் சமர்ப்பிக்கப்பட்ட இச்சட்டமூலத்தின் மீதான விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றபோது பல பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். இத் திருத்தங்கள் வெறும் வெளிப்பூச்சான மாற்றங்கள் இல்லை, அவை இச் சட்டத்தில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவருமென அவர் தெரிவித்திருந்தார்.

இச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுபவர்கள் நீண்டகாலமாகச் சிறையில் வாடுவதைத் தவிர்க்க, சந்தேக நபர்கள் மீதான வழக்குகள் நாளுக்கு நாள் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படுமெனவும் ஒரு வழக்கை நீதிமன்றம் விசாரிக்க முடியாவிட்டால் அது தொடர்பான காரணங்களைக் கொண்ட பதிவுகள் வெளிப்படையாக இருக்குமெனவும் அதைப்பார்க்க் எவருக்கும் அனுமதியிருக்குமெனவும் புதிய திருத்தம் கூறுகின்றது.

அது மட்டுமல்லாது, ஒரு சந்தேகநபர் தடுப்புக் காவலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தடுப்புக்காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டவுடன் பதிவுசெய்யப்பட்ட பிரதி ஒன்று 48 மணித்தியாலங்களுக்குள், சம்பந்தப்பட்ட சந்தேகநபர் வாழும் பிரதேசத்திலுள்ள மாஜிஸ்திரேட் ஒருவரிடம் கையளிக்கப்படவேண்டும். இம் மாஜிஸ்திரேட், சந்தேக நபரை, மாதம் ஒரு தடவை சென்று பார்த்து அவர் அதிகாரிகளால் முறைகேடாக நடத்தப்படுகிறாரா எனக் கண்காணிக்க வேண்டும். மாஜிஸ்திரேட்டின் இவ்வருகையின்போது கைதி மீது உடல் மீது சித்திரவதைகள் மேற்கொண்டதற்கான அடையாளங்கள் இருக்கின்றனவா எனக் கண்காணிக்க வேண்டும். இச்சித்திரவதைப் பட்டியலில் தற்போது உளரீதியான சித்திரவதையும் சேர்க்கப்பட்டுல்ளது. கைதி ஒருவர் தான் முறைகேடாக நடத்தப்பட்டதாகவோ அல்லது சித்திரவதைக்குட்படுத்தப்பட்டதாகவோ முறையிட்டால் அவற்றையும், தனது சொந்த அவதானிப்புகளையும் மாஜிஸ்திரேட் பதிவு செய்வதோடு அக் கைதியைச் சட்ட வைத்திய அதிகாரி முன்னர் அவர் நிறுத்தி பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும். கைதி முறைகேடான வகையில் நடத்தப்பட்ட அறிகுறிகள் காணப்பட்டால் அக் கைதிக்கு உரிய மருத்துவ வசதிகள் செய்துகொடுக்கப்படுவதுடன் சட்டமா அதிபருடன் ஆலோசனைக்கிணங்க கைதியை முறைகேடாக நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாஜிஸ்திரேட் பொலிஸ் அதிகாரியைப் பணிக்க வேண்டும். கைதி ஒருவர் முறைகேடாக நடத்தப்பட்டிருந்தாலோ அல்ல்து சித்திரவதைக்குட்பட்டிருந்தாலோ அவரை வேறிடமொன்றுக்கு மாற்ற வழிவகை செய்யவேண்டும்.

இச் சட்டத் திருத்தத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட ஒருவரைத் தடுப்புக் காவலில் சென்று பார்ப்பதற்கு வழக்கறிஞருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாது கைதி ஒருவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும்போது அவருக்கு நெருங்கிய உறவினர் ஒருவருடன் தொடர்புகளைப் பேண அனுமதிக்கப்படுவார்.

முந்தைய சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்ட ஒருவர், நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதற்கு 18 மாதங்கள் உச்ச வரம்பாக இருந்தது. இத் திருத்தத்தின் கீழ் அது 12 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இப் புதிய திருத்தத்தின் பிரகாரம், கைதி ஒருவர் தனது கைதுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அல்லது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குப்பதிய அனுமதியுண்டு. அத்தோடு கைதியொருவர் ஒரு வருடத்துக்கு மேல் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தால், சட்டமா அதிபர் அனுமதியளிக்கிறாரோ இல்லையோ, அக் கைதி தான் பிணையில் செல்வதற்கு அனுமதிகோரி விண்ணப்பிக்க முடியும்.

இத் திருத்தங்களை இலங்கை அரசு சிலநாட்களின் முன்னர் மனித உரிமைகள் சபையிடமும் கையளித்திருந்தது. இருப்பினும் இத் திருத்தங்கள் போதாது என மனித உரிமை ஆணையாளரும் உலகின் பல பனித உரிமை அமைப்புகளும் விமர்சித்திருந்தன. அதே வேளை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து இலங்கை மக்களிடமும் கையெழுத்து இயக்கமொன்றை ஆரம்பித்து நடத்தி வருகின்றது.