இலங்கை: பயங்கரவாதத் தடைச்சட்டம் திருத்த முடியாதது, அது முற்றாக அகற்றப்படவேண்டும் – சர்வதேச நீதிபதிகள் ஆணையம் (ICJ)
பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் திருத்துவது தொடர்பாக இலங்கையால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை எனவும் மிகவும் மோசமான சரத்துக்களைக் கொண்ட அச்சட்டம் முற்றாக நீக்கப்படுவதே ஒரே வழி எனவும் சர்வதேச நீதிபதிகள் ஆணையம் (International Commission of Jurists (ICJ)) தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டம் இல.48 / 1979 தொடர்பான திருத்தங்களை இலங்கை அரசு ஜனவரி 27, 2022 அன்று வர்த்தமானி அறிவிப்பு மூலம் வெளியிட்டிருந்தது. இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ இருக்கும் தனி ஒருவர், குழு அல்லது அமைப்பு இச் சட்டம் வரையறுக்கும் வகையில், இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வார்களாயின் அவர்கள் எழுந்தமானமாகக் கைதுசெய்யப்படுவதற்கும் காலவரையின்றி அவர்களது சுதந்திரம் பறிக்கப்படுவதற்கும் இச் சட்டம் வழிசெய்கிறது என ICJ கூறுகிறது.
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களின்படி:
புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் இரண்டாவது சரத்து (Clause 2), இச்சட்டத்தின் பிரகாரம் கைதுசெய்யப்படும் ஒருவரது தடுப்புக் காவல் காலம் 18 மாதங்களிலிருந்து 12 மாதங்களாகக் குறைக்கப்படுமெனக் கூறுகிறது.
பத்தாவது சரத்து (Clause 10), 12 மாதங்களுக்குத் தடுத்துவைக்கப்பட்ட ஒருவர் பிணையில் போவதற்கு விண்ணப்பிக்க முடியும் எனக் கூறுகிறது.
கைது செய்யப்பட்டவர் சட்டத்துக்கு முன்னார் கொண்டுவரப்பட்டு அவர் தனது தரப்பு நியாயங்களை வெளிப்படுத்துவதற்கு உரிய சந்தர்ப்பத்தை வழங்காது ஒரு தனி மனிதரின் சுதந்திரத்தை ஒரு வருடத்துக்கு பறிக்கும் அடிப்படை மனித உரிமை மீறல் பற்றி எந்தவித அக்கறையையும் இத் திருத்தம் கொண்டிருக்கவில்லை.
10 ஆவது சரத்தின் 2 ஆவது பிரிவின்படி, கைதுசெய்ய்யப்பட்ட் சந்தேக நபர் ஒருவரை, வழக்கு விசாரணைகள் முடியும்வரை தடுப்புக்காவலில் வைத்திருக்க பாதுகாப்பு அதிகாரிகள் உயர்நீதிமன்றத்திடம் ஆணையைப் பெற முடியும்.
இலங்கை கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்ட, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் (International Covenant on Civil and Political Rights (ICCPR)) 9 ஆவது சரத்தின் பிரகாரம், சுதந்திரம மறுக்கப்படும் ஒரு தனிமனிதருக்கு வழங்கவேண்டிய நடைமுறை உத்தரவாதங்கள் (procedural guarantees) எதுவும் இப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திலோ அல்லது சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்களிலோ இல்லை. உதாரணமாக, தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒருவர் உடனடியாக நீதிபதி முன்னர் கொண்டுவரப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டதற்கான காரணங்கள் முறையானவையா எனத் தீர்மானிக்கப்பட வேண்டும். ஆனால் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்படாமல் நீண்ட காலத்துக்கு ஒருவர் தடுத்துவைக்கப்படுவதென்பது சர்வதேச உடன்படிக்கைகளை மீறும் ஒரு செயலாகும்.
சரத்துக்கள் 4, 5, 12 ஆகியவற்றின் பிரகாரம் கைதுசெய்யப்பட்ட ஒருவர் தனது கைதுக்கு எதிராக அடிப்படை மனித உரிமைகள் மனுவைச் சமர்ப்பிக்கவும், சட்ட வல்லுனர்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களைச்சந்திக்கவும் அரசியலமைப்பு இடம் கொடுக்கிறது. இருப்பினும் பெரும்பாலானவர்களுக்கு இவடிப்படை உரிமைகள் வழங்கப்படுவதில்லை.
ஒருவர் கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலங்களை ஆதாரங்களாக எடுத்துக்கொள்ளும் வழமை சாதாரண சட்டங்களில் பின்பற்றப்படும் வழக்கம் இல்லாதபோதும் தாம் குற்றவாளியில்லை என நிரூபிக்கும் பொறுப்பை அரசாங்கம் குற்றம்சாட்டப்பட்டவர் மீது திணிப்பது (ப.த.ச. பிரிவு 16) முறையல்லவெனினும் அதுபற்றி சமர்ப்பிக்கப்பட்ட திருத்தத்தில் எதுவுமில்லை.
அதுமட்டுமல்லாது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தில், பயங்கரவாதம் என்றால் என்ன எனக் கொடுக்கப்படும் வரைவிலக்கணம் மிகவும் தெளிவற்றதாகவும், பரந்ததாகவும் இருக்கிறது. இதன்மூலம் கைதுசெய்யப்படுபவர்கள் மீதான விசாரணைகள் மற்றும் நீதிமன்ற மேற்பார்வைகள் இல்லாத நிலையில் அவை பற்றித் திருத்தங்கள் எதுவும் செய்யப்படவில்லை என ICJ கூறுகிறது.
எதிர்வரும் மார்ச் 03, 2022 ஐ.நா.மனித உரிமைகள் சபை அமர்வின்போது இலங்கையின் மனித உரிமைகள் சம்பந்தமாக விவாதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.