இலங்கை | பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மீள்பரிசீலிக்க ஐரோப்பிய ஒன்றியம் 2022 வரை அவகாசம்
பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பாவித்து எண்ணற்ற இலங்கையர்களைக் கால அவகாசமின்றிச் சிறையிலடைத்திருக்கும் இலங்கை அரசின் நடவடிக்கைகளை ஆராய்ந்த, இலங்கை வந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு இலங்கையின் மனித உரிமைகள் முன்னேற்ற முயற்சிகளுக்கு 2022 வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மீளாய்வு செய்வதோடு சர்வதேச நியமங்களுக்கு இணையாகத் தமது தரங்களை உயர்த்துவதற்கு தாம் எடுத்துவரும் முயற்சிகளை இலங்கை எடுத்துக் கூறியதாகவும், அவற்றை நிறைவேற்றுவதற்கு கால அவகாசத்துடனான வாக்குறுதியை அது கொடுத்திருந்ததாகவும் அறியப்படுகிறது.
இச்சந்த்திப்பின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியமும், நல்லாட்சி, சட்டவாட்சி, மனித உரிமைகளுக்கான இலங்கையின் செயற்குழுவும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. 2022 ஆரம்பத்தில் நடக்கவிருக்கும் அடுத்த சந்திப்பின்போது இவ் விடயத்தில் காணப்பட்ட முன்னேற்றங்களை ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கை அரசாங்கமும் இணைந்து பரிசீலிக்கவுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கவாதத்தைத் தடுப்பது மற்றும் வன்முறையுடன் கூடிய தீவிரவாதத்தை எதிர்கொள்வது ஆகியவற்றின் பின்னணியில் சர்வதேச நியமங்களையும் தரங்களையும் பேணவேண்டிய அவசியம் பற்றி இருதரப்பும் இணக்கம் கண்டதாகவும் அறியப்படுகிறது.
அதேவேளை இலங்கையில் சுதந்திரமும், சிவில் உரிமைகளும் ஆபத்துக்குள்ளாக்கப்படும் பட்சத்தில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைக்கு ஆபத்துண்டு என ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு மீண்டும் எச்சரித்துள்ளது.
அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள், சட்டத்தரணிகள் ஆகியோருடன் நீதியமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘பாரிய’ ஆலோசனை முன்னெடுப்புகள் பற்றி இலங்கை தரப்பு ஐரோப்பிய ஒன்றியத்திடம் எடுத்துரைத்தது. இதன் பிரகாரம் பொதுமக்கள் மீது அரசு தேவையற்ற நடவடிக்கைகள் எடுப்பதைத் தவிர்க்கவும், அதே வேளை பொதுமக்கள் மற்றவர்களின் சுதந்திரத்தின் மீது தலியிடுவதைத் தவிர்க்கவும், நீதிமன்றங்கள் இயற்கையான் நீதியையும், சமத்துவத்தையும் பேணும் வலையில் சட்டங்களை உருவாக்கவும் வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக இலங்கைத் தரப்பு எடுத்துக்கூறியுள்ளது.
சிவில் சமூகங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும்படியும் அவர்கள் சுதந்திரமாக இயங்குவதற்குரிய வெளியைக் கொடுக்கும்படியும் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இச்சந்திப்பின்போது வலியுறுத்தியிருந்ததாகவும் இம் முயற்சிகளில் இலங்கைக்கு தாம் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராகவுள்ளதாகத் தெரிவித்ததாகவும் அறியப்படுகிறது.