Sri Lanka

இலங்கை: பயங்கரவாதத்திற்கெதிரான சட்ட நகல் பற்றி ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் கரிசனை

தற்போது இலங்கைப் பாராளுமன்றத்தின் பரிசீலனையில் இருக்கும் திருத்தப்பட்ட பயங்கரவாதத்துக்கெதிரான சட்டம் பற்றி ஐ.நா. மனித உரிமைகள் சபை அலுவலகம் தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. மிகவும் பாரதூரமான சட்டம் எனக் கருதப்படும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மாற்றீடு செய்வதற்கென் உருவாக்கப்பட்ட இப் புதிய சட்ட நகல் மேலும் மோசமான ஒன்று என்பதோடு அது சர்வதேச நியமங்களை அனுசரிக்கவில்லை என ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளப்பெறுவது இலங்கையின் உள்ளக பாதுகாப்பு அணுகுமுறையில் காத்திரமான சீர்திருத்தம் ஒன்றைக் கொண்டுவரக்கூடிய ஒரு திருப்புமுனையாக இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப் புதிய சட்டம் மேலும் பாதிப்பைக்கொண்டுவரக்கூடுமென்ற அச்சத்தை எழுப்பியுள்ளதுடன் வழமையான மனித உரிமை மீறல்களை மேலும் தீவிரமாக்குவன போல இருக்கிறது” என ஐ.நா. மனித உரிமைகள் சபை அலுவலக பேச்சாளர் ரவீணா ஷாம்தசானி தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கருத்துப்படி, இப்புதிய சட்ட நகல் “பயங்கரவாதம்” என்பதற்கு பரந்த வரைவிலக்கணத்தைக் கொடுக்கிறது என்றும், குறிப்பாக, தடுப்புக்காவலுக்கான கட்டளைகளின் சட்டத் தகைமையைக் கேள்விக்குள்ளாக்கும் விடயத்தில் சட்ட பாதுகாப்பு உத்தரவாதங்களைக் கட்டுப்படுத்துகிறது என்றும் மனித உரிமைகள் ஆணையம் தடுப்புக்காவல் நிலையத்தைப் பரிசோதிக்கும் விடயத்தில் தடைகளை விதிக்கிறதென்றும் அறிய முடிகிறது.

தற்போதைய வடிவத்தில் இது சட்டமாக்கப்பட்டால் அது நிறைவேற்று ஜனாதிபதி அலுவலகத்திற்கு மேலதிகமான அதிகாரங்களை வழங்குவதோடு இவ்வதிகாரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கு ஏதுவான வழிவகைகளை அது கொண்டிருக்கவில்லை எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் சர்வதேச மனித உரிமைகளுக்கான கடமைகளை அனுசரிக்கும் வகையில் இச்சட்ட நகல் மாற்றப்படவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது.