இலங்கை | பசில் பிரதரின் முதலாம் வரவுசெலவுத் திட்டம்
மாயமான்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 76 ஆவது வரவுசெலவுத் திட்டத்தை அனுபவமில்லாத ‘பிரதர்’ பசில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார். Not bad for a beginner.
மொத்த செலவு ரூ.3,912 பில்லியன், வரவு ரூ.2,284 பில்லியன் – துண்டு விழுவது ரூ. 1,628 பில்லியன். பரவாயில்லை.
சாமர்த்தியமான வரவுசெலவுத் திட்டம். எதிர்க் கட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு மெல்லுவதற்கு அவல் கிடைக்கவில்லை. இருந்துமென்ன பல்லில்லாத அவர்களுக்கு அவல் கிடைத்தென்ன, கிடைக்காவிட்டாலென்ன?
கோவிட் பெருந்தொற்றினால் நாட் முடக்கப்பட்டதனால் சுமார் 500 பில்லியன் ரூபாய்களை இழந்திருந்தது. இந்த நிலையில் ஒரு அனுபவமில்லாத (சரி, சரி…10% அனுபவமிருக்குத்தானே என்கிறீர்கள், புரிகிறது) ஒருவருக்கு இது ஒரு பெரிய பாரம். ஆனாலும் துணிச்சலோடு பொறுப்பை எடுத்திருக்கிறார். அந்த வகையில் பரவாயில்லை.
இந்த வரவுசெலவுத் திட்டத்தில் குறிக்கப்படத்தக்க அம்சங்கள்:
- நாடு முழுவதிலுமுள்ள 10,155 பாடசாலைகளுக்கும் உடனடியாக நாரிழைத் தகவல் தொடர்பு (fibre-optic communication) வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்
- ஆசிரியர்களின் சம்பளச் சீரின்மையைப் போக்க ரூ. 30 பில்லியன் ஒதுக்கீடு
- கோவிட் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட பாடசாலை பஸ், வான் சாரதிகளுக்கு ரூ.400 மில்லியன் ; முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு ரூ.700 மில்லியன்; பஸ் ஓட்டுனர்களுக்கு ரூ.1,500 மில்லியன் நட்ட ஈடு
- சிகரட்டின் விலை ரூ.5 இனால் அதிகரிப்பு
- வருடத்துக்கு ரூ.2 பில்லியனுக்கு மேல் சம்பாதிக்கும் தனிப்பட்டவர்களும், நிறுவனஙகளும் (2020/2021 நிதியாண்டுக்கு) 25% வரி செலுத்தவேண்டும்
- பட்டிக், கைத்தறி நெசவுத் தொழில் மேம்பாட்டுக்கு ரூ. 1 பில்லியன் ஒதுக்கீடு
- விவசாயத் தொழில்நுட்பத்துக்கு ரூ. 5 பில்லியன் ஒதுக்கீடு
- ஓய்வு பெறும் வயதெல்ல 65 ஆக அதிகரிப்பு
- பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறும் சேவைக்காலம் 5 இலிருந்து 10 ஆண்டுகளாக அதிகரிப்பு
- பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்படு செலவீனம் ரூ 5 மில்லியனால் அதிகரிப்பு
- ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதி அபிவிருத்திக்காக ரூ. 15 மில்லியன் ஒதுக்கீடு
- வங்கி சேவைகளுக்கான VAT 3 வீதத்தால் (15% த்திலிருந்து 18% த்திற்கு) அதிகரிப்பு
நாட்டின் பாதுகாப்பு செலவீனங்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் ஜனநாயக சோசலிசக் குடியரசின் இராணுவத்துக்கு இதுவரை ஒதுக்கப்பட்டுவரும் செலவீனம் சுகாதாரம், கல்வி இரண்டிற்காக ஒதுக்கப்படும் மொத்த செலவீனத்தைவிட அதிகம் என்பதும் பொதுச்சேவைகளுக்கென ஒதுக்கப்பட்ட செலவீனத்தில் 50% த்துக்கும் மேல் இராணுவம் எடுத்துக் கொள்கிறது என்பதும் தெரிந்த விடயங்கள்.
2019 இல் ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததிலிருந்து அவர் தொடர்ந்து சொல்லி வருவது “நாட்டை ஒருபோதும் இராணுவ ஆட்சிக்கு உட்படுத்த நான் அனுமதிக்கப் போவதில்லை” என. ஆனாலும் பெரும்பாலான திணைக்களங்கள் எல்லாம் இராணுவ அதிகாரிகளின் கீழ் இருப்பதும், அவசரகால நிலைமை பிரகடனம் செய்யும்போது இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவதும் நாட்டின் பாதுகாப்பு இப்போதும் முன்னிலையில் இருக்கிறது என்பதையே காட்டுகிறது. ஆனால் 2022 இற்கான வரவுசெலவுத் திட்ட உரையை முடிக்கும்போது ‘பிரதர்’ பசில் சொன்ன ஒரு விடயம், “இன்று உலகத்தில் இருக்கும் நாடுகளில் மிகவும் அமைதியான நாடு இலங்கை”
தம் வாழ்வில் பெரும்பாலான நேரத்தைப் பிரசாரத்தில் ஈடுபடுத்தும் தொழிலாளர்களையும், போதனை செய்யும் ஆசிரியர்களையும் திருப்திப்படுத்துவதன் மூலம் பசில் பிரதர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்தியிருக்கிறார். நோக்கம்? விரைவில் தேர்தல் வருகிறது!
வெற்றியளித்தால் பசில் பிரதர் அடுத்த ஜனாதிபதி!