இலங்கை: நிலைமை மோசமடைகிறது. பொலிசாருக்கு உதவ முப்படைகள் தயார்!

இளையோரும், துறைசார் பணியாளர்களும் பங்கு பற்றும் மாபெரும் ஊர்வலமொன்று தற்போது காலிமுகத் திடலில் கூடுவதாகவும் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி அது நகர்வதாகவும் கொழும்பு செய்திகள் குறிப்பிடுகின்றன.

ஆர்ப்பாட்டக் காரர்களைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவரும் பொலிசாருக்கு உதவ முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனெரல் ஜகத் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கென மேலதிகமான பொலிசாரையும் பணியில் அமர்த்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதே வேளை, ஆர்ப்பாட்டங்களில் வன்முறையயைத் தூண்டுவதற்கு அரச தரப்பு முயற்சிகளை எடுத்து வருவதாகவும் இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருபவர்கள் விழிப்பாக இருக்க வேண்டுமெனவும், எந்தவித வன்முறையையும் அவர்கள் கைகொள்ளக் கூடாது எனவும் தேசிய மக்கள் சக்தி அமைப்பின் தலைவர் அனுரகுமார திசநாயக்கா எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதி, பதவியிலிருந்து விலகுவது சாத்தியமாகும் போல் தெரியவில்லை ஆதலால் மக்கள் போராட்டங்கள் முனைப்புப் பெற வேண்டுமெனக் கோரிய அவர் மக்கள் தமது போராட்டங்களை நிறுத்தக் கூடாது எனவும் 20 மில்லியன் மக்களின் கோரிக்கையை ஒரு தனி மனிதர் முழுமையாக உதாசீனம் செய்து வருகிறார் எனவும் நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது திசநாயக்கா தெரிவித்தார்.

“அமைதியான போராட்டங்களிடையே வன்முறையைத் தூண்டுவதற்கு அரசு முயற்சிக்கிறது. மீரிகம சம்பவத்தை எடுத்துக்கொண்டால் அங்கு பொலிசாரின் முன்னிலையில் பஸ் ஒன்று எரிக்கப்பட்டிருந்தது. அச் சமபவம் முழுவதும் காணொளியில் உள்ளது. அப்படி இருந்தும் அதைச் செய்தவரை இதுவரை பொலிசார் கைதுசெய்யவில்லை. அது எதைக் கூறுகிறது? அரசாங்கம் தனது குண்டர்களை அனுப்பி ஆர்ப்பட்டக்காரர்கள் மீது பொலிசாரையும் இராணுவத்தினரையும் தாக்குதல்களை ஏவிவிடும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. எனவே இவ்வார்ப்பாட்டங்களில் ஈடுபடும் பொதுமக்கள் வன்முறைக்கு இடம் கொடுக்காது நடந்துகொள்ள வேண்டும்” என திசநாயக்கா கேட்டுக்கொண்டார்