Opinionதலையங்கம்

இலங்கை தேர்தல்: தேசமாய்த் திரளும் தருணம்

இலங்கை பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களேயிருக்கின்றன. அங்குள்ள தமிழ் பேசும் மக்கள் எப்படி, யாருக்கு வாக்களிக்கவேண்டுமெனக் கூறுவதற்கு புலம் பெயர்ந்துவாழ் எமக்குத் தகுதியில்லை. அது அங்குள்ள மக்கள் தீர்மானிக்க வேண்டியது.

வடக்கிலும் கிழக்கிலும் தேர்தலில் போட்டியிடும் பல வேட்பாளர்களின் எண்ணிக்கையும், தரமும் கவலை தருவன. இவர்களை மக்கள் தெரிவு செய்வார்களால் அதனாலேற்படும் விளைவை அவர்களே ஏற்றுக்கொண்டாக வேண்டும். கொலையாளிகள், மண் கொள்ளையர், போதை வஸ்து கடத்துபவர், கார் பேர்மிட், பார் பேர்மிட் வியாபாரிகள் என அத்தனை பேரும் தேர்தலில் குதித்து அமிழும் மக்களைக் காப்பாற்றப் போகிறார்களாம். குதிப்பது அவரவர் விருப்பம் ஆனால் அவர்களை கரை சேர்ப்பதும் மக்களது விருப்பம்.


அனுரகுமார தனது பல்லாயிரம் படையணியுடன் வந்து யாழ்ப்பாணத்தில் முழங்கிப் போயிருக்கிறார். மாற்றம் ஒன்றை விரும்பும் தமிழ் மக்கள் ஆரவாரம் செய்து வரவேற்றிருக்கிறார்கள். பதிலுக்கு அவர் அரசியல் கைதிகளையும், காணிகளையும் விடுவிக்கப் போவதாக கூறிப்போயிருக்கிறார். அவர் தனது வாக்குறிதியைக் காப்பாற்றினால் அது தமிழ் மக்களுக்கு ஒரு படி வெற்றி. அதே வேளை நல்லாட்சிக் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்புல நட்புறவின் மூலம், அனுர விடுவிக்கவிருக்கும் எண்ணிக்கையைவிட அதிகம் அரசியல் கைதிகளையும், காணிகளையும் விடுவித்திருக்கிறது. திருகோணமலையில் தமிழ்நாட்டிலிருந்து மீளக்கொண்டுவரப்பட்ட பல அகதிகளைக் குடியேற்றியிருக்கிறது. இவற்றை எல்லாம் அரசியல் இலாபங்களுக்காக கூட்டமைப்பினால் வெளியே சொல்லமுடியாமல் போய்விட்டது. காரணம் வீரவன்ச, கம்மன்பில, ஞானசேரர், வீரசேகர போன்ற இனத் துவேஷிகள் இவ்விடயங்களைக் கொண்டோடித் தென்னிலங்கையில் விற்று அதன் மூலம் தமிழருக்குக் கிடைக்கவிருக்கும் மேலும் பல நன்மைகளைத் தடுத்து விடுவார்கள். அதே வேளை அவற்றைப்பகிரங்கமாகக் கூறாமையினால் எழுத, வாசிக்கத் தெரிந்தவன்கூட தெருவில் வைத்து கூட்டமைப்பைக் கிழித்துத் தொங்கவிடுகிறான். கேட்பவர்கள் எதையுமே செய்யாவிடினும் தமிழ்த் தேசிய நிழல் அவர்களை எப்போதும் காப்பாற்றி வருகிறது.

சமீபத்தில் சுமந்திரன் கூறியதாக ஒரு செய்தி வந்தது. அதில், தாம் வெற்றி பெற்றால் அனுரகுமாரவின் அரசுடன் இணைந்து பயணிக்கத் தயார் என அவர் கூறியிருந்தார். இதை வீரசேகர போன்ற இனவாதிகள் தூக்கிப்பிடித்துக்கொண்டு “ஆயிரமாயிரம் இராணுவத்தினரின் உயிர்களைக் கொடுத்து பயங்கரவாதத்திடமிருந்து நாம் பெற்ற விடுதலையை அநுரகுமார தமிழர்களுக்குத் தாரை வார்க்கப் போகிறார்” என்ற கருத்துப்பட இனவாதத்தைக் கக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இத் தேர்தலில் தமிழரசுக் கட்சி கணிசமான ஆசனங்களைப் பெற்று தேசிய மக்கள் கட்சி அரசுடன் இணைந்து பயணிக்க நேரின் எமது பக்கத்திலிருந்தும் தமிழ்த் தேசியவாதிகள் “ஐம்பதினாயிரம் மாவீரர்களின் அர்ப்பணிப்பை இவர்கள் அடகு வைக்கப் போகிறார்கள்” எனத் துள்ளினாலும் ஆச்சரியப் படத் தேவையில்லை. நல்லாட்சி அரசுக்கு முண்டு கொடுத்தது எனத் தூற்றும் இவர்கள் அதன்போது நடைபெற்ற நல்ல விடயங்களைப் பற்றிப் பேசமாட்டார்கள்.

இந்த தடவை மாதிரி வேறெப்போதும் தமிழர் தரப்பு பலவீனப்பட்டிருக்கவில்லை. சிங்கக் கொடியின் கீழ் ஒரு போதும் நிற்க மாட்டேன் எனச் சத்தியம் செய்யும் ஒருவர் சிங்கக்கொடியை முன்னணியில் வைத்திருக்கும் பாராளுமன்றத்தில் அமர்வதற்கு ஆலாய்ப் பறக்கிறார். இதைப் புரியாத, கேள்வி கேட்க முடியாத பொதுசனங்கள் வாய்களைப் பிளந்தபடி ஆசனங்களில் உட்கார்ந்திருக்கிறார்கள். பார்க்கக் கவலையாக இருக்கிறது.

கடந்த சுமார் 75 வருடங்களாக வடக்கு-கிழக்கை இணைத்து வைத்திருக்கும் கட்சி தமிழரசுக் கட்சி. அதற்கென்றொரு உறுதியான கட்டமைப்பு இருக்கிறது. 30 வருட போர் அதன் மகிமையை சற்றே குறைத்திருந்தாலும் இப்போதைய நிலையில் நம்பிக்கையைத் தரும் ஒரே கட்சி தமிழரசுக் கட்சி மட்டும்தான். தென்னிலங்கை அரசியல்வாதிகளும், உலக ராஜாங்க வட்டாரங்களும் மதித்து பேசிவரும் ஒரே கட்சியும் அதுதான். இணக்க அரசியலோ அல்லது பிணக்க அரசியலோ அதை நெறிப்படுத்திக் கையாளக்கூடிய ஒரே கட்சியும் அதுதான் என்பதே எமது கருத்து. தமிழ் மக்கள் நிதானமாகச் சிந்தித்து இத் தேர்தலில் வாக்களித்தால் நல்லது. தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரளவேண்டிய தருணம் இதுவே தான். (Image Credit: News Wire)