இலங்கை: தேசிய அரசாங்கம் – தமிழர் பிரச்சினைக்கான தீர்வு சாத்தியமாகுமா?

ஒரு விசாரணை – சிவதாசன்

கடந்த சில நாட்களாக ‘உள்ளகத் தகவல்களை’ மேற்கோள் காட்டி கொழும்பிலிருந்து வெளிவரும் ‘லங்கா நியூஸ் வெப்’ என்ற இணையத்தளம் ஒரு செய்தியை – மிகவும் நம்பிக்கையோடு – வெளியிட்டு வருகிறது. அச் செய்தி இதுதான்: ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராகக் கொண்டு ஒரு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு நாட்டின் பொருளாதார மற்றும் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வொன்றைக் கொண்டுவருதல். இதன் பின்னால் யார் யார் இருக்கிறார்கள் எனத் தெரியாவிடினும் புள்ளிகளை இணைப்பதன் மூலம் ஏறத்தாள ஒரு வரைபடத்தைக் கீற நான் முயற்சிக்கிறேன்.

இச் செய்தி வெளிவருமுன்னர் நடைபெற்றுவந்த சில சம்பவங்களின் புள்ளிகளை முதலில் இணைக்கலாம். இதில் முதலாவது புள்ளி – ஐரோப்பிய ஒன்றியம். ஒன்றியக் குழுவின் வருகையும் அதன் பின்னர் அது இலங்கைக்கு வழங்கிய ஆலோசனையும். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத் திருத்தம், மனித உரிமைகள், ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை ஆகியவற்றுக்கூடாக இலங்கைக்கு வழங்கப்பட்ட நிர்ப்பந்தமும் இப் புள்ளியின் கனதிகள். இவற்றை எதிர்கொள்வதற்குத் திராணியற்ற வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா மாற்றப்பட்டு ஜி.எல் பீரிஸ் அவ்வாசனத்தில் அமர்த்தப்படுகிறார். உண்மையில் அவ்வமைச்சின் செயலாளராகக் கடமையாற்றும் முன்னாள் படையதிகாரி கொலம்பகேயின் ‘பாரத்தால்’ அமுக்கப்பட்டவர் தினேஷ் குணவர்த்தனா என்பது இன்னுமொரு விடயம். பேராசிரியர் பீரிஸின் பானையில் இவரது அரிசி அவியவில்லை.

இரண்டாவது புள்ளி – மனித உரிமைகள் சபை. இங்கு பீரிஸ் நேர்மையாக முன்வைக்குமளவுக்கு சரக்கு இருக்கவில்லை. அதனால் தான் பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு குஞ்சத்தைக் கட்டிக்கொண்டு ஐ.நா. சபையில் அவமானப்படவேண்டி வந்தது. கவிஞர் அஹ்னாப், வழக்கறிஞர் ஹிஸ்புல்லா மற்றும் சில தமிழ் இளைஞர்கள் ஆகியோரின் விடுதலையைப் பெற்றுக்கொடுத்ததோடு ‘பிரச்சினைக்கு உள்ளகத் தீர்வைக் காண்போம்’ என்ற சுலோக மட்டைகளை மடக்கிக்கொண்டு பீரிஸ் குழு தளம் மீண்டது. டிஸ்னி கார்ட்டூன் படங்களில் வரும் கறுப்புப் பூனை (Tom Cat) விழுந்து சப்பையாகி எழுந்து மீண்டும் கூச்சலிடுவதைப் போல், குழு உள்ளூர்ச் சபைக்கு முன் ஆர்ப்பரித்தது. ஆனால் சபையோ வரிசைகளில் நிற்கப் போய்விட்டதனால் முற்றவெளி வெறுமையாகைவிட்டது. மாற்று வழியைத் தேடவேண்டிய தேவை அரசுக்கு வந்துவிட்டது. ‘இன்னும் 5 நாட்களில் பெற்றோல் வந்திறங்கும், ‘இரண்டு நாட்களில் அரிசி வந்திறங்கும்’, ‘ மின்வெட்டு தேவைப்படாது’ என்றலறிவந்த மைக் விழுங்கி அரசியல்வாதிகள் எல்லோரும் பங்கர்களுக்குள் பதுங்கிக் கொண்டனர்.

மூன்றாவது புள்ளி பசில் பிரதர். ‘இந்த முட்டாப் பயலுகளின்ர சொல்லைக் கேட்டு கோட்டர் (கோதா) வாங்கிக் கட்டின பிறகு ஒருநாள் என்னட்டை வரப் போறார்’ என்று பின்வாங்கிலிருந்து கறுவிக்கொண்டிருந்த பசிலர் முன்னுக்கு வந்தார். ‘என்னட்டை பொறுப்பைத் தா. நான் நிமித்த்திக் காட்டிறன்’ என்று களத்தில் குதித்தார். இது அவரது திடீர் ‘அமெரிக்கப் பயணத்துக்குப்’ பின்னர்தான் நடைபெற்றது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். அங்கு அவர் யார் யாரைச் சந்தித்தாரோ அவருக்கு என்ன ஊசி ஏற்றப்பட்டதோ தெரியாது. அவர் வந்ததும் வராததுமாக தலையில் ‘நிதியமைச்சர்’ கிரீடம் சூட்டப்பட்டு இளவரசராக்கப்படுகிறார். அதன்பிறகு பல அமைச்சர்கள் – இதில் மத்திய வங்கி ஆளுனர் கப்ரால் என்ற கோமளியையும் அடக்கலாம் – ஓரங்கட்டப்படுகிறார்கள். பசிலர் இரவோடிரவாக அமெரிக்க நிறுவனம் ஃபோர்ட்றெஸ் எனெர்ஜியுடன் ஒப்பந்தம் எழுதுகிறார். அமெரிக்காவின் பைகளும் அவரின் பையும் நிறைந்தன.

நான்காவது புள்ளி இந்தியா. பசிலரின் நெருங்கிய நண்பர் மிலிந்த மொராகொட. அமெரிக்கப் பிரஜையான இவர் விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளின்போது முக்கிய பங்கு வகித்தவர். இவரும் ‘கபினெட்’ அந்தஸ்துடனான இந்தியத் தூதுவராக நியமிக்கப்படுகிறார். இதற்குள் ஒரு சிறிய கொசிறையும் சொல்லியாக வேண்டும். அதாவது இறுதி யுத்தத்தின்போது அரசியல் பிரிவைச் சேர்ந்த புலிகளின் சரணடைவை மேற்பார்வை செய்யும் குழுவில் விஜே நம்பியார், சரத் பொன்சேகா ஆகியோருடன் பசிலரும் போவதாக இருந்தது. ‘நீங்கள் அங்கு போனால் உங்களையும் சேர்த்துப் போட்டு விடுவோம்’ என்று கோதாபய வெருட்டியதனால் இவர்கள் எவருமே அங்கு போகவில்லை எனவும் ஒரு செய்தி அப்போது உலாவியது. இதை ஏன் இங்கு நான் குறிப்பிட வந்தது என்றால் தமிழருக்குத் தீர்வு வழங்கும் விடயத்தில் பசிலர் கொஞ்சம் பரந்த அடிப்படையில் சிந்திப்பவர் என்ற கருத்தும் உண்டு என்பதைச் சொருகுவற்காகவே.

எனவே செயன்முறைச் சாத்தியமாகச் சிந்திக்கும் மிலிந்த மொறாகொட, பசிலர் போன்றோருக்கு, தற்போதுள்ள நெருக்கடியான நிலையில் இந்திய தரப்பை அணுகுவதற்கான அனுமதியை கோதா வழங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அதற்குக் காரணம் அவரைச் சுற்றியிருந்த – So called pseudo professors – வியத்மக ஆலோசகர்களால் கைவிடப்பட்ட நிலையில் கோட்டர் பலிசரின் கால்களில் விழவேண்டி ஏற்பட்டுவிட்டது. வழக்கமாக இந்திய எதிர்ப்புக் கொடிகளைத் தூக்கிப்பிடிக்கும் ஹந்துநெத்தி தலைமையிலான ஜே.வி.பி.க்களும், ரத்தின தேரர்களும் போதுமான சனங்களை வீதிக்கு இறக்க முடியாத நிலையில் பசிலர் அணியின் இந்திய சாய்வு வேகத்துடன் நகர்ந்தது.

இதில் சீனா என்றொரு பெரிய புல்ளி இருந்தும் அதை நான் இவ்வரைபடத்தில் இணைத்துக்கொள்ளவில்லை என்பதற்கும் ஒரு காரணமிருக்கிறது. இந்தியாவுடன் ஒப்பிடும்போது வழக்கம் போலவே சீனா முயல் வேகத்தில் நகர்வது. இலங்கை அமிழப் போகும் ஆழத்தை அது ரணில் காலத்திலேயே அறிந்துவிட்டபடியால் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகையில் எடுத்துவிட்டது. துறைமுக நகர ஒப்பந்தத்தை ராஜபக்ச அரசு வெள்ளித் தட்டத்தில் வைத்துத் தரும்வரை அது சிவப்பு நிறத் தோழர்களைக் கையில் போட்டுக்கொண்டு மேலும் கடனை இலங்கையின் தலையில் சுமத்திவிட்டு ஒதுங்கிக் கொண்டது. சீனாவுக்கான தூதுவர் டாக்டர் பாலித கொஹொன்னாவின் ‘2000 வருட தொன்மையும் தொடர்பு, பெளத்த கலாச்சாரம்’ போன்ற இன்னோரன்ன பருப்புகள் எதுவும் சீனாவிடம் அவியவில்லை. இப்போது மொரகொட, பாலிதவிடமிருந்து தடியைப் பறித்துக்கொண்டு ஓட ஆரம்பித்துவிட்டார். இங்குதான் பசிலரின் பயணமும் ஆரம்பமாகிறது.

இதே வேளை, சீனாவின் அம்பாந்தோட்டைத் துறைமுகம், துறைமுகநகரம் போன்ற முயற்சிகள் இலங்கையில் அதன் கேந்திர நிலைகொள்ளலை உறுதிப்படுத்துவதனால் கதிகலங்கிப்போயிருந்த இந்தியா கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தைக் கையகப்படுத்துவதன் மூலம் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனது நாட்டாண்மையைக் காட்டலாமென்று நினைத்திருந்தது. ஆனால் அவ்வொப்பந்தத்தையும் இலங்கை முறித்துக்கொண்டவுடன் இந்தியா தனது தந்திரோபாய நகர்வை மாற்றிக்கொண்டது. ஆழமற்ற, அபிவிருத்தி செய்யப்படாத மேற்குக் கொள்கலன் முனையத்தை அடானியிடம் விட்டுவிட்டு இலங்கையின் வடக்கு கிழக்கில் மட்டும் அது குறிவைக்கத் தொடங்கியது. ‘முதலீடுகள்’ என்ற அமெரிக்க வாசகங்களை இரவல் வாங்கிக்கொண்டு வடக்கு கிழக்கில் அது களமமைக்கத் திட்டம் தீட்டியது. ஏற்கெனவே இழுபறியிலிருந்த திருகோணமலை எண்ணைக்குத வயல் மற்றும் மான்னர் வளைகுடா (எண்ணை ஆராய்ச்சி) என்று சில கேந்திரங்கள் மீது அது கண்களைப் பதித்தது. இங்கு தனது முதலீடுகளைச் செய்தால் அதற்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக வடக்கு கிழக்கு மாகாணங்களை அரசியல் ஸ்திரம் கொண்டவையாக மாற்றவேண்டிய தேவை உண்டென்பதை அது உணர்ந்திருந்தது. ஏற்கெனவே கையெழுத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அரசியலமைபின் 13 ஆவது திருத்தத்தைக் கையில் எடுத்து இப்போது இலங்கையின் கண்கள் முன் சுழற்றவாரம்பித்திருக்கிறது.

ஐந்தாவது புள்ளி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. என்னதான் சொன்னாலும் இப்போது தமிழ் மக்கள் மத்தியில் இருக்கிற, சத்தம் போட்டுக்கொண்டு என்றாலும் கொஞ்சமாவது ஓடக்கூடிய வண்டில் கூட்டமைப்புத் தான். அதில் ஒரு மாடு கொஞ்சம் வயதில் மூத்தது என்றாலும் அதுக்கு இடம், பாதை, வண்டில் காரர், எசமானர், எதிரிகள் என்று சகலதும் பரிச்சயம். மற்ற மாட்டைப் பாதையில் வைத்திருப்பதே இதுவென்பதில் வண்டில்காரருக்கும் பெருமிதம். ‘தலையைக் கீழ போட்டுக்கொண்டு நடந்தாலும் வண்டிலை வீட்டை கொண்டுபோய்ச் சேர்க்கும்’ என்றுவிட்டு வண்டில்காரர் நித்திரை கொள்ளலாம்.

கடந்த 70 வருசமாக வடக்கு கிழக்கு அபிவிருத்தி பற்றி எதையுமே பேசாமல் அரசியல் தீர்வுக்காகப் போராடித் தொடர்ந்து மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுவரும் தமிழ் தலைமைகள் மீது இந்தியா காசைக் கட்டியிருப்பதும் காரணத்தோடுதான். இலங்கையில் தனது நிலைகொள்ளலுக்கான முதற்கட்ட தந்திரோபாய நடவடிக்கையாக, அதிகாரப் பகிர்வுடன் கூடிய வடக்கு கிழக்கைத் தமிழருக்குப் பெற்றுக் கொடுப்பது. தமிழர் தமது இந்திய விசுவாசத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்பதும் அதற்குத் தெரியும். இலங்கையின் பஞ்சம் பெற்றுக்கொடுத்திருக்கும் சாதகமான சூழ்நிலையில் பசிலர்-மொறாகொட மூலம் இந்த முதலாம் கட்ட நகர்வை இந்தியா மேற்கொள்கிறது எனவே நான் கருதுகிறேன். இதன் வெளிப்பாடுதான் சமீபத்தில் நடைபெற்ற சர்வகட்சி மாநாடு.

ஆறாவது புள்ளி ரணில் விக்கிரமசிங்க. ரணில் விக்கிரமசிங்கவைப் பலருக்குப் பிடிக்காது. குறிப்பாக கருணா அம்மானைத் தந்திரமாகப் பிரித்ததன் மூலமாக விடுதலைப் புலிகளையும், தமிழீழப் போராட்டத்தையும் சிதைத்தவர் என்ற தீராத கோபம் அவர் மீது தமிழ் மக்களுக்கு உண்டு. ஆனால் இவ் வெறுப்பின் உண்மையான பாரத்தைக் கருணா மீது செலுத்தாமல் விக்கிரமசிங்க மீது மட்டும் செலுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. ரணிலின் ஆட்சியில் முள்ளிவாய்க்கால் நடைபெற்றிருக்க முடியாது என்பதை மட்டும் நான் நம்புகிறேன். ரணில் ஒரு தந்திரம் கொண்ட நரி என்பது ஒருபுறமிருக்க சிங்கள பெளத்த வெறிகொண்ட ஜனநாயக அரசியலில் நேர்மையானவர்கள் எவரும் ஆட்சிக்கு வரமுடியாது என்ற சூழ்நிலையில் உருவாக்கப்பட்ட அரசியல்வாதிகளில் ரணிலும் ஒருவர். இலங்கையின் தற்போதைய இடரிலிருந்து நாட்டை மீட்க மனப்பூர்வமாக (அரசியல் செய்யாது) முனைகிறார் என்றே நான் நினைக்கிறேன். தற்போதுள்ள மிக நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கு இரண்டு விசைகள் இணைய வேண்டும். சிங்கள பெளத்த இனவெறியைப் புறந்தள்ளிவிட்டு யதார்த்தமான, செயற்படுத்தக்கூடிய தீர்வொன்றைப் பெறவெண்டுமானால் எதேச்சாதிகாரத் தலைமையும், தந்திரோபத் தலைமையும் இணைய வேண்டும். கோதாபயவும், ரணிலுமே இப்போதைக்கு இதை முன்னெடுக்கக் கூடியவர்கள். வேறெந்த எதிர்க்கட்சிகளும் இதை முன்னெடுக்க கோதாபயவும், அதன் இராணுவ விசுவாசிகளும் அனுமதிக்கப் போவதில்லை. இதில் ரணிலின் பங்கு மேற்கு நாடுகளின் நலன்களைப் பார்த்துக்கொள்வது. கோதாவுக்கு அந்த லாவகம் தெரியாது. உள்ளூர் விசைகளை எப்படிக் கையாள்வதென்பது பசிலருக்குத் தெரியும். கோதாபயவிடம் பெரிய தடி இருக்கிறது. அது போதும்.

ஏழாவது புள்ளி புலம் பெயர் தமிழர். இலங்கையின் பொருளாதாரத்தின் காண மறுக்கப்படும் முக்கியமான பங்கு புலம்பெயர் தமிழரைச் சேரவேண்டியது. மறைந்த மங்கள சமரவீரர் போன்றவர்கள் இதை மிக நன்றாகவே உணர்ந்திருந்தார்கள். உலகத் தமிழர் பேரவை போன்ற பல அமைப்புகள் இதற்கான அரசியல் நிலங்களைப் பண்படுத்தி வந்தாலும், தனிப்பட்ட பலர் தமது சொந்த நலன்களையும் உதறித்தள்ளிவிட்டு வடக்கு கிழக்கில் பல தொழில்துறைகளை ஆரம்பித்து நடத்தி வருவதும், அனைத்துலக மருத்துவ நல அமைப்பு போன்ற நூற்றுக்கணக்கான தொண்டரமைப்புகள் அம்மக்களிடையே களப்பணிகளை ஆற்றிவருவதும் இப் பேரிடர்க் காலத்தில் நாட்டின் இதர பாகங்களிலுள்ள மக்களைப் போலல்லாது வடக்கு கிழக்கு மக்கள் அதிக துன்பங்களை எதிர்கொள்ளவில்லை என்பதற்குக் காரணமாக அமைகின்றன. இந்த உண்மை இப்போதுதான் கோதாபய போன்றவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. இதைச் செய்வதில் முக்கிய பங்காற்றி வருபவர் ரணில் விக்கிரமசிங்க. நல்லாட்சிக் காலத்தில் புலம் பெயர் தமிழர் பலர் இலங்கைக்கு சுற்றுலாச் சென்றதும், தொழில் முயற்சிகளை ஆரம்பித்ததும் நடந்தது. இதற்கு இன்னுமொருகாரணம் புலம் பெயர் தமிழர்கள் மீதும், அமைப்புகள் மீதும் அரசு வித்தித்திருந்த தடை இக்காலத்தில் அகற்றப்பட்டமை. தற்போது கோதாபய புலம் பெயர் தமிழருக்கு அழைப்பு விடுவதற்குக் காரணங்களில் ரணிலும் ஒன்றாக இருக்கலாம். எனவே தமிழருக்கு நியாயமான தீர்வொன்றை வழங்குவதன் மூலம் நாட்டின் பல பிரச்சினைகள் தீர்க்கப்படலாமென்ற ஞானோதயம் கோதாபயவுக்கு வந்திருக்கிறது என்றும் அதற்கு ரணில் விக்கிரமசிங்க ஒரு முக்கியமான காரணி என்றும் நான் நம்புகிறேன்.

எட்டாவது புள்ளி சிவில் சமூகத்தினர். ஆட்சி மாற்றத்திதைக் கொண்டுவந்து நல்லாட்சி அரசை அமர்த்தியதற்கு மூல காரணம் மறைந்த சோபித தேரரின் தலைமையில் உருவான நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம் என்ற சிவில் சமூக அமைப்பு. அவரது மரணத்துடன் சிவில் சமூகங்களின் பலம் வெகுவாகக் குறைந்துவிட்டது. ராஜபக்ச ஆட்சி உருவாகியதும் முதலில் செய்தது ‘நாட்டின் பாதுகாப்புக்கு சிவில் சமூகங்கள் அச்சுறுத்தலாகவிருக்கின்றன’ எனக்கூறி அவற்றை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்தமை. தற்போது, ஐ.நா. மற்றும் சர்வதேசங்களின் அழுத்தங்களினால் அவை வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் அவற்றின் குரல்கள் சர்வதேச அரங்குகளில் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்துள்ளன. நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணவெனக் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் சிவில் சமூகங்களுக்கும் இடம் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழருக்கு நியாயமான தீர்வொன்று வழங்கப்படவேண்டுமென இவை நீண்டகாலமாகக் குரல்கொடுத்து வருகின்றன.

சர்வ கட்சி மாநாடும் இதன் தொடர்ச்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான ஜனாதிபதியின் பேச்சுவார்த்தையும் இப்புள்ளிகளின் போக்கைத் தீர்மானிக்கும் (trajectory) ஒன்பதாவதும் இறுதியுமான புள்ளியில் இணைகிறது. (மேலும் புள்ளிகள் உருவாகுவதும், இணைக்கபடுவதும் வரப் போகும் புதிய உலக ஒழுங்கைப் பொறுத்தது). இந்த ஒன்பதாவது புள்ளி கோதாபய ராஜபக்ச.

ராஜபக்ச சகோதரர்களில் மிக மோசமானவர் மஹிந்த. கோதாபயவில் இருக்கும் கொடுங்கோன்மை ஆத்திரம் சார்ந்தது, தந்திரம் சார்ந்தது அல்ல. மாறாக மஹிந்தவின் கொடுங்கோன்மை தந்திரம் சார்ந்தது. தன்னை நம்பி வந்தவர்களை ஒருபோதும் கைவிடாத பண்பு கோதாவிடம் இருக்கிறது என்பதற்கு விசுவாசமான இராணுவத்தைக் குறிப்பிடலாம். மனம் வைத்தால் எவரையும் பொருட்படுத்தாது அக்காரியத்தை நிறைவேற்றும் பண்பு அவரிடம் இருக்கிறது. தமிழரது பிரச்சினை விடயத்தில் ஒரு நியாயமான தீர்வைக் கொடுப்பதற்கு இதுவரை தடையாகவிருப்பது புத்த சங்கத்தினரும், விமல் வீரவன்ச போன்ற சிங்கள பெளத்த வெறியர்களும் தான். மகாவம்ச சிந்தனையை அவருக்குத் திணிப்பது மூத்த சங்கத்தினர். ஆனால் இளைய தலைமுறை சங்கத்தினர் தமிழருக்கான நியாயமான தீர்வை ஏற்றுக்கொள்ளத் தயாரகவுள்ளரெனத் தெரிகிறது. முள்ளிவாய்க்காலின் சாபம் இப்போது சிஙகள மக்களின் மனங்களில் சிறிது சிறிதாக இறங்குகிறது. எனவே இந் நெருக்டியான காலத்தைப் பாவித்து சில கடினமான மனங்கள் தமது சிந்தனைகளில் மாற்றம் கொண்டுவரத் தயாராகலாம். கோதாபய ராஜபக்ச-ரணில் நட்பு கோதாவைச் சூழ்ந்திருந்த துட்டர்களை அப்புறப்படுத்துமேயானால், கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலிக்க கோதா தயாராகலாம் எனப் படுகிறது.

ஆட்சி மாற்றத்தின் மூலம் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வொன்றைக் கொண்டுவரலாமென்ற நம்பிக்கை எனக்கு அறவே இல்லை. காரணம் அதைத் துணிச்சலாக முன்னெடுக்கக்கூடிய தலைமை ஒன்றுமே இல்லை. ராஜபக்ச தரப்பு எதிரணியில் இருக்குமட்டும் தீர்வுக்கான சாத்தியமில்லை. சண்டியனிடம் பொறுப்பு இருக்கும்போது தீர்வைச் சாதுரியமாகப் பெறுவதே ஒரே வழி. கொரோணாப் பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி, உலகப் போர் (2.5) ஆகியன காலத்தைக் கனிய வைத்திருக்கின்றன. சாதுரியமாகக் காய்களை நகர்த்தி காரியங்களைச் சாதிக்க வேண்டும்.

சர்வகட்சி மாநாட்டிற்குப் பின் ஜனாதிபதி – கூட்டமைப்புச் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. அங்கு என்ன நடைபெற்றது என்பது தென்னிலங்கை ஊடகங்களுக்கு விலாவரியாகக் கொடுக்கப்பட்டாலும், அவற்றைப் பற்றித் தமிழ் மக்களுக்கு இரத்தினச் சுருக்கமாகக் கூடக் கொடுக்கபடவில்லை என்பது துர்ப்பாக்கியம். வாக்குகளை வெல்வதற்காகக் கூட்டமைப்பினர் செலவிடும் சக்தியில் ஒரு பங்குகூட அவர்களது மனங்களை வெல்வதில் செலவிடுவதில்லை. தெற்கிலிருந்து வெளியான செய்திகளின்படி, கூட்டமைப்பின் 7 முக்கியமான கோரிக்கைகளுக்கு கோதாபய இணங்கியிருப்பதாகத் தெரிகிறது. தென்னிலங்கைத் தீவிரவாத சக்திகளுக்கு இரைபோடாமல் இவற்றை இரகசியமாக வைத்திருக்காமல் ஊடகங்கள் பொறுப்போடு நடந்துகொள்ளுமேயானால் அடுத்த கட்டம் இன்னும் வேகமாக நகரலாம். அதுவரை நாமும் கொஞ்சம் அமத்தி வாசிப்பது நல்லது என்ற சுய திருப்தியோடு….

விசாரணைஇப்போது ஒத்திவைக்கப்படுகிறது….