ColumnsOpinionSri Lankaமாயமான்

இலங்கை: தெற்கில் புதிய கூட்டணிகள் உருவாகின்றன – தமிழர் தரப்பிலும் உருவாகுமா? – ஒரு ஆய்வு

மாயமான்

இலங்கையில் விரைவில் உள்ளூராட்சி அல்லது பாராளுமன்றத் தேர்தல் ஒன்று நடக்கவுள்ளது என்பதைப் பின்னொழுங்கைப் பேரங்கள் உறுதிசெய்கின்றன. எப்படியிருந்தாலும் ஆளும் கூட்டணி உடைவது உறுதியாகிவிட்டது. நாளுக்குநாள் ஆளும் ஊட்டணி மட்டுமல்லாது ஆளும் கட்சிக்குள்ளும் வெடிப்புகள் தோன்றி வருகின்றன.

ஆளும் கட்சியின் கிராமிய உட்கட்டமைப்பு ராஜாங்க அமைச்சரும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் மிக நெருங்கிய நண்பருமான நிமால் லான்சா கட்சியிலிருந்து விலகிச் சுயாதீன உறுப்பினராக இருப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகவும், அவரைச் சந்திக்க ஜனாதிபதி முயன்றும் அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் அறியப்படுகிறது. இவரை விடவும் மேலும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தம்மை நடத்தும் விதம் குறித்து அதிருப்தியடைந்துள்ளதாகவும் தெரிகிறது.

இதைவிட அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் கொடியேற்றத் திருவிழாவுக்கு பங்காளிக் கட்சிகள் எவரும் அழைக்கப்படவில்லை என்பது அவர்களிடையே ஏற்கெனவே இருந்த இடைவெளியை மேலும் விரிவடையச் செய்திருக்கிறது எனப்படுகிறது. இந் நிலையில் தென்னிலங்கைக் கட்சிகளிடையே பலவிதமான கூட்டணிகள் உருவாகுவதற்கான சாத்தியங்கள் உள்ளனவென அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

முதலாவதாக அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளிடையே அதிக அங்கத்தவர்களைக் கொண்ட சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறீசேனவின் தலைமையில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார ஆகியோரை இணைத்து கூட்டணியொன்றை உருவாக்குவதற்காக சிறீசேன சமபந்தப்பட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுவருவதாகத் தெரிகிறது. குறைந்தது 12 கட்சிகளைக் கொண்ட இக்கூட்டணி பற்றி மார்ச் மாதமளவில் அறிவிக்கப்படுமெனவும் அதுவரை ஆளும் கட்சிக் கூட்டணியிலிருந்து எவரும் விலகுவதாகவில்லை எனவும் அறியப்படுகிறது. இக்கூட்டணி மீண்டும் ஒரு தடவை சிங்களத் தேசியத்தை மையப்படுத்தியதானதாகவே இருக்கும்.

இதேவேளை, எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயவுக்குள்ளும் குத்து வெட்டுகள் இடம்பெற்றுவருகின்றனவெனவும், கட்சித் தலைவர் மீது பலருக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுளதென்றும் அக் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் தலைமையில் இன்னுமொரு கூட்டணி உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டென்றும் கூறப்படுகிறது. இது விடயத்தில் சஜித் பிரேமதாசவின் பரம எதிரியான ரணில் விக்கிரமசிங்க மற்றும் சமீபத்தில் பாராளுமன்றத்தில் உணர்வுபூர்வமாகப் பேசிக் கட்சி பேதமின்றிப் பலராலும் பாரட்டப்பட்ட குமார வெல்கம ஆகியோருடன் ரணவக்க பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிகிறது. இவர்களில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கொழும்பு சுற்றுப்புறத்தில் கணிசமான ஆதரவு இருந்தாலும் கிராமிய மட்டங்களில் அதிகமில்லை. ரணவக்கவுக்கு விகாராதிபதிகள் மத்தியில் ஆதரவு இருப்பதால் கிராமப்புற மக்களது வாக்குகளைப் பெற அவரது பங்களிப்பு பலன் தரும். இக் கூட்டணியும் ஓரளவு பெளத்த சிங்கள தேசியத்தைச் சார்ந்ததாக இருந்தாலும் சிறீசேன கூட்டணியைப்போல ஊழல் நிறைந்ததாக இருக்க வாய்ப்பில்லை.

சமாகி ஜன பலவேகயவைப் பொறுத்தவரை அக் கட்சி தனித்துப் போட்டியிட மாட்டாது எனவும் அதுவும் இதர பங்காளிக் கட்சிகளுடன் அதிகாரப் பரவலைக் கொண்ட கூட்டணியொன்றை அமைத்து தேர்தலில் குதிப்பதாகவுள்ளதாக அறியப்படுகிறது. தற்போதுள்ள கட்டமைப்பில் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கு எதிர்பார்த்தளவு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவில்லை. மீளொழுங்கு செய்யப்பட்ட சமாகி ஜன பலவேகய கூட்டணியில் மலையகக் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும் அங்கம் வகிப்பதால் அது ஒருபோதும் ஆட்சியமைக்கும் அளவுக்குப் பலம்கொண்டதாக இருக்காது. அது வழக்கம் போல எதிர்க்கட்சியாக இருந்து குரலெழுப்புவதற்கே சரியானது. ஆனால் இக் கூட்டணியிலிருக்கும் பெரும்பாலானவர்கள் பதவிகளுக்காக விலைபோபவர்கள்; இலகுவில் கட்சி தாவக்கூடியவர்கள். ராஜபக்ச தரப்பு இவர்களை நம்பியே வீரவன்ச போன்றவர்களைக் கழற்றிவிடத் தயாராகவிருக்கிறது. எனவே அவர்கள் எக் கட்சியில் வென்றாலும் எப்போது எங்கு தாவுவார்கள் எனபது தெரியாது. இந் நிலையில் தமிழர் தரப்பு இவர்களை நம்பிக் கூட்டணி வைப்பது மிகவும் ஆபத்தானது.

தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை உள்ளார்ந்த ஒருமைப்பாடு இல்லாத நிலையில் வெளிக்காரணிகளின் அழுத்தங்களுக்காக கடதாசிக் கூட்டணிகள் அவ்வப்போது அமைக்கப்பட்டாலும், தமிழரசுக் கட்சி தனது பலத்தை மட்டும் கொண்டு வடக்கு கிழக்கில் கணிசமான ஆசனக்களைப் பெறுமென நம்புகிறது. கட்சியில் இருக்கும் சில அங்கத்தவர்கள் இப்படியானதொரு நிலைப்பாட்டை எடுக்கவும் தயங்கமாட்டார்கள். இப்படியானதொரு சூழ்நிலையில் வடக்கு கிழக்கு மாகாணக்களில் தென்னிலங்கைக் கட்சிகளின் பிரித்தாளும் தந்திரத்துக்கு இடம் கொடுக்காமல் இருக்க, இன்னுமொரு தடவை புறக்காரணியொன்றினால் கூட்டணி அமைக்கவேண்டிய தேவை தமிழர் தரப்புக்கு உண்டு. ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி எவ்வித அகப், புறக் காரணிகளினாலும் ஒரு கூட்டணியின் கீழ் இணைந்து போட்டியிடுவதற்கான சாத்தியமில்லை. அவர்களது இருப்பையும் செயற்பாட்டையும் வைத்துக்கொண்டே தமைழர் கூட்டணி அமைய வேண்டும்.

இதே வேளை, தென்னிலங்கை கட்சிகளை / கூட்டணிகளைப் பொறுத்தவரை தமிழ் மக்களது தேசியப் பிரச்சினை தொடர்பாக உறுதியான முடிவை எடுக்கக்கூடிய ஒருவராக, சிங்கள தேசியத்திலிருந்து வெளியே வந்து யதார்த்தமான சிந்தனையோடு இருப்பவர் என நான் கருதுவது சம்பிக்க ரணவக்க மட்டும்தான். ஆனால் அவர் ரணில், சரத் ஃபொன்சேகா போன்றவர்களுடன் கூட்டு வைத்தால் அவரும் புறக் காரணிகளுக்காக மோசம் போகவே செய்வார். இதனால் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு, தமிழ் மக்களின் ஆதரவுடன் வெல்வதே நல்லதெனப் படுகிறது. 2010 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின் ஆதரவைப் பெற்ற சரத் ஃபொன்சேகா பின்னர் பல தடவைகள் தடம் புரண்டவர். ஆனால் சம்பிக்க சிங்கள பெளத்த கடும் தேசியத்திலிருந்து நியாய யதார்த்தத்தை நோக்கி நகர்ந்தவர் ஆனால் தம் புரண்டவராக அறியப்பட்டவரல்ல. எனவே அவருடம் தமிழர் தரப்பு பேசிப்பார்ப்பது நல்லது.

போருக்கு முன்னர் புத்த விகாராதிபதிகளுடன் சேர்ந்து அதி சிங்கள தேசியம் பேசிய ரணவக்க எப்படித் தமிழர் விடயத்தில் துவேசமின்றி நடந்துகொள்வார் என்ற சந்தேகம் சிலருக்கு எழலாம். நல்லாட்சி அரசில் அங்கம் வகித்தபோது அவர் உட்கட்டமைப்பு, அபிவிருத்தி தொடர்பான அமைச்சராக இருந்தபோது கிழக்கு மாகாணத் தமிழ் இளைஞர்களுக்கு மிகவும் மன உவப்போடு பல உதவிகளைச் செய்தவர் எனக் கூறப்படுபவர். சமீபத்தில் நாட்டின் பொருளாதார மீளுருவாக்கம் பற்றி அவர் பேசியபோது இனப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வு அதற்கு முக்கியம் எனப் பேசியிருந்தது யதார்த்த அரசியலை நோக்கி அவர் நகர்ந்திருப்பதன் அறிகுறியையே காட்டுகிறது. நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை, பாராளுமன்றம் ஆகியவை சுயாதீனமாக இயங்குவதற்கு காரணமாகவிருந்த சிலரில் சம்பிக்கவும் ஒருவர்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், தமிழரைப் பொறுத்தவரையில், இந்தியா ஒரு கத்தரித் தோட்டத்து வெருளியாக இருப்பதுகூட தற்காலிக அவசியம் தான். அதன் பூகோள அரசியல் காய் நகர்த்தல்களில் எமக்கு ஏதாவது கிடைத்தால் நல்லது. ஆனால் அதை மட்டும் நம்பி இருக்காமல் சர்வதேச கருவிகளையும் தென்னிலங்கை கருவிகளையும் நாம் பாவித்தேயாக வேண்டும். அந்த வகையில் ரணவக்க போன்றோருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசிப்பார்ப்பதும் நல்லது. காலம் சென்ற சோபித தேரர் போன்று நல்லவர்களும் அந்தப்பக்கம் இருக்கலாம். அப்படியானவர்களுடன் புரிந்துணர்வை ஏற்படுத்துவதன் மூலம் நமது நியாயங்களை எடுத்துக்கூறுவதால் தீமை ஏதும் ஏற்படப்போவதில்லை. இதுவரை காலமும் பிணக்கு அரசியலை நடத்தி கண்டது எதுவுமில்லையெனின் இணக்க அரசியலுக்கும் ஒரு சந்தர்ப்பத்தை ஏன் கொடுக்கக் கூடாது.

கனடிய அரசியலிலும் மிக நீண்ட காலமாக சுதேசிகள் பிணக்கு அரசியலை முன்னெடுத்து வந்தனர். மிகவும் பலவீனமான நிலையிலிருந்து பேரம் பேசுவதற்கு எதுவுமே இல்லாத நிலையில் அவர்கள் மேலும் பின்தங்கிய நிலையில் மூன்றாம் உலக நாடுகளின் நிலையில் வாழ்ந்து வந்தார்கள். 2017 இல் முதல் தடவையாக அவர்கள் இணக்க அரசியலை முன்னெடுத்ததால் சுமார் 10 பாராளுமன்ற உறுப்பினர்களை அவர்களால் தெரிந்தனுப்ப முடிந்தது. செனட்டர்களும், தற்போது முதல் தடவையாக நாட்டின் ஆளுனரும் சுதேசிகளாக இருப்பது வரலாறு. அதே வேளை ‘இந்தியச் சட்டத்தை’ (Indian Act) இன்னும் ஏற்றுக்கொள்ள மாட்டோமென்று குரலெழுப்பும் ‘பொன்னம்பலங்களும்’ சுதேசிகளுள் இருக்கிறார்கள். அவர்களின் அழுத்தங்களும் நாட்டின் சுதேசிகள் சம்பந்தமான கொள்கை வகுப்புகளுக்கு துணை புரிகின்றன.

இலங்கையில் நாமும் மூன்று தசாப்தங்கள் அஹிம்சையையும், மூன்று தசாப்தங்கள் ஆயுதங்களையும் எமது போராட்டத்தில் கருவிகளாகப் பாவித்தோம். பலனேதும் கிட்டவில்லை. அடுத்த மூன்று தசாப்தங்களுக்கு நாம் பாவிக்கவேண்டிய அனுகுமுறையும், கருவியும் வேறானவை. அதே வேளை நாம் இதுவரை போராடிய களமும் இப்போது புலம்பெயர்ந்தவர்களினால் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விரிவுபடுத்தப்பட்ட இக்களத்தில் தமிழர் பலமாக இருப்பது பலச்சமநிலையை மாற்றியமைக்க வழிவகுக்கலாம். எனவே தமிழர் பிரதிநிதிகள் புறக்காரணிகளுக்காக அல்லாது உளப்பூர்வமான கூட்டணியொன்றை அமைத்து அடுத்த மூன்று தசாப்தங்களுக்காகத் தயாராகுவது நல்லது.